தேடுதல்

இடம்பெயர்ந்த சிறார் இடம்பெயர்ந்த சிறார்  (AFP or licensors)

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறார் புலம்பெயர்வு

6 ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் புயலின் காரணமாக 4கோடியே 9 இலட்சம் சிறார்கள் தங்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகின் 44 நாடுகளில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும்  4 கோடியே 31 இலட்சம் குழந்தைகள் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நாவின் யுனிசெப் அமைப்புத் தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு 20,000 பேர் என்ற விகிதத்தில், 2016க்கும் 2021க்கும் இடைப்பட்ட 6 ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் புயலின் காரணமாக 4கோடியே 9 இலட்சம் சிறாரும், வறட்சியின் காரணமாக 13 இலட்சம் சிறாரும் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்கிறது ஐ.நா.வின் சிறார்க்கான அவசரகால நிதி அமைப்பான யுனிசெப்.

இது தவிர, இந்த 6 ஆண்டுகளில் 8 இலட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் பெருந்தீயினால் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயினால் பெருமளவு பாதிக்கப்பட்ட நாடுகளாக கானடா, இஸ்ராயேல் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டை சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெப் அமைப்பு.

சிறார் அதிக அளவு இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நாடுகளாக சீனாவும், பிலிப்பீன்ஸும் தெரிவிக்கப்பட்டிருக்க, புயலால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான நாடுகளாக தொமினிக்கன் குடியரசு மற்றும் வனுவாத்து தீவு நாடுகளும், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நாடுகளாக சொமாலியாவும் தென் சூடானும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளில் சிறாரின் இடம்பெயர்வு அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.

இயற்கைப் பேரிடர்களால் அதிக அளவில் சிறார் குடியேற்றத்தைக் கண்டுவரும் ஹெய்ட்டி நாட்டில் வன்முறைகளும் ஏழ்மையும் அதிகரித்து, இந்நிலையை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதாக யுனிசெப் தன் கவலையை வெளியிட்டுள்ளது.

இன்றைய கால நிலை மாற்ற நிலைகளின் கணக்குப்படிப் பார்த்தோமானால், அடுத்த 30 ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கால் 9 கோடியே 60 இலட்சம் குழந்தைகளும், சூறாவளிக் காற்று மற்றும் பெரும்புயலால் 1 கோடியே 75 இலட்சம் குழந்தைகளும் இடம்பெயரும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2023, 16:05