தேடுதல்

முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி. முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.  (artiSplendore)

காசாவில் ஒரு மனிதத்தன்மையற்றச் செயல்!

வெறுப்பைத் தூண்டாமல், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மறக்காமல் பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது : முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைத்துலகச் சமூகத்தை அலற வைத்துள்ளது என்றும், ஒரு மனிதாபிமான பேரழிவு தவிர்க்கப்பட வேண்டும், கற்பனை செய்ய முடியாத விளைவுகளுடன் ஒரு போர் வெடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

அக்டோபர் 17, இச்செவ்வாயன்று, காசாவிலுள்ள அல்-அஹ்லி அரபி ஆங்கிலிகன் மருத்துவமனையைத் தாக்கி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும், இந்தத் தாக்குதலில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தனது வேதனையை எடுத்துரைத்துள்ளார் தொர்னியெல்லி.

ஹமாஸ் போராளிகளால் முன்வைக்கப்படும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவது இஸ்ரேலியர்களின் உரிமை என்றும் அதே வேளையில், சட்டபூர்வமான பாதுகாப்பு விகிதாச்சாரத்தின் அளவுகோலை மதிக்க வேண்டும் மற்றும் காசாவில் உள்ள பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளதையும், நினைவு கூர்ந்துள்ளார் தொர்னியெல்லி.

மனித வரலாற்றின் இந்த வியத்தகு தருணத்தில், மூன்றாம் உலகப்போருக்கான சூழலைத் தவிர்க்கும் விதத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதையம் நினைவுகூர்ந்துள்ள தொர்னியெல்லி அவர்கள், வெறுப்பைத் தூண்டாமல், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மறக்காமல் பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2023, 14:14