தேடுதல்

மருத்துவ உதவிக்கு காத்திருக்கும் பாலஸ்தீனிய குழந்தை மருத்துவ உதவிக்கு காத்திருக்கும் பாலஸ்தீனிய குழந்தை  (AFP or licensors)

காசா குடியிருப்பில் மருத்துவ உதவியின்றி துன்புறும் குழந்தைகள்

2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் காசா பகுதியின் ஏறக்குறைய 400 குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகள் கிட்டா நிலை இருந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ராயேல் பகுதியில் இருக்கும் காசா குடியிருப்புகளுக்கு இஸ்ராயேல் அரசின் தடைகள் அமலில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் இரண்டு குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் மருத்துவ உதவிகள் இன்றி தவிப்பதாக Save the Children என்ற பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.

மருத்துவ உதவிகளைப் பெறுவதற்கு காசா பகுதியிலிருந்து வெளியேற ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 60 குழந்தைகள் விண்ணப்பித்திருக்க, அவைகள் இஸ்ராயேல் அரசால் மறுக்கப்படுகின்றன அல்லது பதில் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாகக் கூறும் இந்த உதவி அமைப்பு,  கடந்த மே மாதத்தில் மட்டும் 100 விண்ணப்பங்கள் இவ்வாறு மறுக்கப்பட்டுள்ளன என உரைக்கிறது.

கடந்த 16 ஆண்டுகளாக இஸ்ராயேல் அரசால் விதிக்கப்பட்டுள்ளத் தடைகளால் குழந்தைகளின் உடல் நலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைக்கும் Save the Children அமைப்பு, 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் காசா பகுதியின் ஏறக்குறைய 400 குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகள் கிட்டா நிலை இருந்ததாகத் தெரிவிக்கிறது.

மே மாதம் 9 முதல் 13 வரை இடம்பெற்ற மோதல்களின் காரணமாக, குழந்தைகள் மட்டுமல்ல, எண்ணற்ற நோயாளிகளும் மருத்துவ உதவிகளைப் பெறமுடியாமலும், சிகிச்சைக்காக வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமலும் இருந்ததாகவும் கவலையை வெளியிடுகிறது இந்த பிறரன்பு அமைப்பு.

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக, குழந்தைகளுக்கான பணியில் தன்னையே ஈடுபடுத்தி, அவர்களின் வருங்காலத்திற்கு அர்ப்பணித்துச் செயலாற்றி வருகிறது Save the Children அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2023, 12:51