தேடுதல்

மொரோக்கோவில் நில அதிர்ச்சி பாதிப்புக்கள் மொரோக்கோவில் நில அதிர்ச்சி பாதிப்புக்கள் 

மொரோக்கோ நில அதிர்ச்சியில் ஒரு இலட்சம் குழந்தைகள் பாதிப்பு

பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் உதவி மையங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால், குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைக்கிறது யுனிசெப்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மொரோக்கோ நாட்டில் செப்டம்பர் எட்டாம் தேதி, வெள்ளிக்கிழமை முன்னிரவில் இடம்பெற்ற பெரும் நில அதிர்ச்சியால் ஒரு இலட்சம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1960ஆம் ஆண்டு மொரோக்கோவில் இடம்பெற்ற பெரும் நில அதிர்வுக்குப்பின் தற்போதுதான் இவ்வளவு பெரிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டு 3 இலட்சம் பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்ற ஐ.நா நிறுவனத்தின் அறிக்கை, இதில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது.

மொரோக்கோ அரசு தகவல்களின்படி, குழந்தைகள் உட்பட 2,600க்கும் மேற்பட்டோர் இந்த நில அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளனர்.

மொரோக்கோ நாட்டில் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகளாக இருக்கும் நிலையில்,  இந்த நில அதிர்ச்ச்சியில் உயிரிழந்த குழந்தைகளின் சரியான எண்ணிக்கைத் தெரியவில்லை எனக் கூறும் ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் உதவி மையங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால், குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கிறது.

1957ஆம் ஆண்டிலிருந்தே மொரோக்கோ நாட்டு குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கிவரும் ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு, 1978ஆம் ஆண்டு மொரோக்கோவில் அலுவலகம் ஒன்றைத் திறந்து குழந்தைகளுக்கான மனிதாபிமான உதவிகளை ஆற்றிவருகிறது.

தற்போதைய நில அதிர்ச்சிக்குப்பின் தன் பணிகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, ஏனைய உதவி அமைப்புக்களுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான உதவிகளை அதிகரித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2023, 15:00