தேடுதல்

சிறுவனுக்கு உதவும் மனிதர் சிறுவனுக்கு உதவும் மனிதர்   (ANSA)

வாரம் ஓர் அலசல் – உலக மனிதாபிமான நாள்

சங்க இலக்கியங்களில் மனித நேயம் குறித்துப் பார்த்தோமானால், சங்க காலத்து கடையெழு வள்ளல்கள், மனித நேயத்தின் சிகரங்களாக புகழப்பட்டதைக் காணலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

எங்கோ ஒரு மூலையில் அதுவும் என்னருகில் இனம் தெரியாத ஒருவரின் அழுகுரல் கேட்டுக்கொண்டேயிருந்தது. காராணமும் தெரியவில்லை, அவரின் அடையாளமும் தெரிவதிற்கில்லை. எங்கோ வடியும் அந்த கண்ணீரைத் துடைத்துவிட மனம் துடித்தது. அழுகுரல் கேட்டு என் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. மனித நேயம் என்பது இதுதான் என புரிந்துகொண்டேன்.

ஆனால், மனிதாபிமானம், அல்லது மனித நேயம் என்பது இன்று காணாமல் போய்வருகிறது. அன்னை தெரேசாக்கள் தோன்றுவது அத்திபூத்தாற்போல் ஆகிவிட்டது. மக்களுக்கு தொண்டாற்றும் நல்மனம் படைத்தவர்களைக் கூட, ஜாதி, மதம் என்ற பிரிவினைகளைப் புகுத்தி ஒதுக்கிவைக்கும் குறுகிய மனம் புகுந்துவிட்டது.

கடந்தவாரம், அதுவும் வார இறுதியில், சனிக்கிழமையன்று உலக மனிதாபிமான நாளை, அதாவது, மனித நேய நாளைச் சிறப்பித்தோம். இந்த நாள் எப்படித் தோன்றியது என்றுத் தெரியுமா?

பிரேசில் நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ வியரா டி மெல்லோ, 37 ஆண்டுகள் ஐ.நா. அவையின் மனித நேயப் பணிகளில் தொண்டாற்றியவர். மிகச் கடினமான போர் சூழல்களில் சிக்கித் தவிக்கும் சாதாரண குடிமக்கள்படும் வேதனைகளை வெளிக்கொண்டு வந்தவர். அவர்களுக்கான நிவாரணங்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர். 2003ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும்  ஐ.நா. உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டி மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள், 100 பேர் படுகாயம் அடைந்தார்கள். 2008இல் ஸ்வீடன் நாட்டின் முன்மொழிதலுடன், ஐ.நா.பொது அவை,  செர்ஜியோ அவர்கள் நினைவை சிறப்பிக்கும் விதமாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19ஆம் நாள் உலக மனித நேய தினமாக சிறப்பிக்கப்படும் என அறிவித்தது.

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" என்பார் திருவள்ளுவர். எலும்பும் தோலும் போர்த்திய உடம்பை வைத்துக்கொண்டு மனிதநேய உணர்வுகளின்றி எத்தனை கோடி பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என கணக்கிடத் தேவையில்லை. ஏனெனில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மனித குலம் அப்படித்தான் இருக்கிறது.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று கூறினார் கணியன் பூங்குன்றனார்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. சொல்வதெல்லாம் செயலாக்கம் பெறுமாயின், இதற்குமுன் எத்தனை ஆயிரம் கோடி முறை இவ்வுலகம் அழிபட்டிருக்க வேண்டும். ஆனால், உணவின்றி அடுத்த வீட்டுக்காரன் வாட, நாம் இன்னும் உணர்வின்றிதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதைத்தான் பாரதியார், “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என பாடுகிறார்.

நாமோ, மனித நேயம், கருணை, அன்பு ஆகியவை குறித்த பழம்பெருமைகளில் மயங்கி புதிய சரித்திரம் படைக்க மறந்து வருகிறோம்.

சங்க இலக்கியங்களில் மனித நேயம் குறித்துப் பார்த்தோமானால், சங்க காலத்து கடையெழு வள்ளல்கள் தங்களது கருணைச் செயல்களால், மனித நேயத்தின் சிகரங்களாக புகழப்பட்டதைக் காணலாம்.

குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்கு இரக்கமுற்று தனது போர்வையைக் கொடுத்தான் பேகன்.

வாடிய முல்லைக்கொடி படர தனது தேரினை ஈந்தான் பாரி.

வலிமைமிக்க குதிரைகளை இரவலர்களுக்கு கொடையாக வழங்கினான் காரி.

ஒளி மிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்களுக்கு கொடுத்தான் ஆய்.

நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அமிர்தமான நெல்லிக்கனியை தான் உண்ணாமல், தனது புலவர் நீண்ட நாள் வாழ்ந்தால் தமிழ் சிறப்புறும் என சிந்தித்து, அதை அவ்வையாருக்கு கொடுத்தான் அதியமான்.

பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் நள்ளி.

கூத்தாடுபவர்களுக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தான் ஓரி.

வானுலக அமிர்தம் கிடைத்தாலும் அது இனிமையானது என தனித்து உண்ணாத தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர்களின் மனித நேயம் குறித்துக் கூறுகிறது புறநானூறு.

இது மட்டுமா, இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்க்கபட்டது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவதும் தவிர்க்கப்பட்டது. நிராயுதபாணியாகப் போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் "இன்று போய் நாளை வா" என்று கூறியதாக மனித நேயம் வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

தன்னைத் தாக்கும் பகைவர்களுக்கு கூட தீங்கு செய்யாதிருப்பதை தனது போராட்ட வழியாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டார் அண்ணல் மகாத்மா காந்தி.

இந்த உலகில் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்களுக்கு தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்த இயலும் என்ற கேள்விக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அன்னை தெரசா.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு திருத்தலத்திற்குப் திருப்பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்ட குடும்பம் அது. ஒருமுறை திருத்தலம் அருகே, இவர்கள் உணவருந்த உட்கார, ஓர் ஏழைத்தாய் வந்து பிச்சை கேட்டார். ஆனால் குடும்பத்தலைவரோ, பிச்சையிடாதது மட்டுமல்ல, அவரைத் திட்டியும் அனுப்பினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி, "சகமனிதரை வெறுத்துவிட்டு, உங்களால் எப்படி இறைவனிடம் அன்புகூரமுடிகிறது. இறைவனின் குழந்தையான அந்த ஏழைத்தாய்க்கு நீங்கள் உதவ மறுத்ததை, இறைவன் ஏற்றுக்கொள்வாரா?. நீங்கள்  உங்களிடம் வருபவர்களை அன்பு செய்யாமல் உதாசீனப்படுத்தினால் கடவுளின் அன்பை முழுமையாகச் சுவைக்க முடியாது. ஏனெனில் இறையன்பும் பிறரன்பும் ஒன்றோடொன்று தொடர்புடையது" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.  

உண்மையான அன்பு என்பது கடவுளை அன்பு செய்வது மட்டுமல்ல; மாறாக,  கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களையும் அன்பு செய்வதாகும். மனித சேவையில் புனிதனைக் காண வேண்டும் என்பதைத்தான், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதென்றனர்.

"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டபோது, உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வதும், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வதும், என பதில் வந்தது.  இறையன்பு பிறரன்பு இவை இரண்டும் இரண்டு கண்களைப் போன்றன. ஒன்றிற்கொன்று தொடர்புடையன. கண்ணால் காணக்கூடிய மனிதரை அன்பு செய்ய முடியாதவர், நிச்சயமாக கடவுளை அன்பு செய்ய முடியாது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இவ்வுலகத்தில் ஒருவர் மற்றவரின் நலனுக்காக ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதற்காகவே இருக்கின்றோம். அடுத்தவரின் உதவியோடுதான் அனைத்தும் இங்கு நடக்கின்றன.  அடுத்தவருக்கு உதவி செய்வதே வாழ்வின் நோக்கம்.

சந்திர மண்டலத்தில் முதன் முதலில் கால் வைத்தவுடன் என்ன நினைத்தீர்கள் என, முதன் முதலில் சந்திர மண்டலத்தில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கிடம் கேட்டபோது, “பூமியில் இருந்து இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திர மண்டலத்தில் இடம் பிடித்த மனிதனால், பக்கத்து நாட்டில், பக்கத்து வீட்டில் உள்ள மனிதர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்” என்று கூறியது மனித நேயம் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது.

மனிதநேயத்தின் அவசியத்தை நமது மதங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்றைய உலகில் நடப்பதென்ன. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. நாம், நமது என்ற பரந்த வட்டத்தில் வாழ வேண்டிய மனிதன், நான், எனது என்ற குறுகிய வட்டத்தில் சுருங்கிக் கொண்டிருக்கிறான். எதையும் சாதித்துவிடலாம் என்ற இளைஞர்களின் தவறான சிந்தனை, மக்களை பகடைக்காய்களாக்கி தவறான வழி நடத்தி, காரியங்களை சாதிக்கும் நேர்மையற்ற அரசியல்வாதிகள், எதையும் கண்டுகொள்ளாமல் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற மனநிலையில் இருக்கும் சுயநல மக்கள், காசுக்காக மனசாட்சியை விற்று வாக்களிக்கும் சிந்தனையற்ற வாக்காளர்கள், எல்லாவற்றிற்கும் இலஞ்சம் கேட்கும் இரக்கமற்ற அரசு அலுவலர்கள் போன்ற மனித நேயமற்ற மனிதர்கள் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநல நோக்கோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசுகள் போன்ற அத்தனையும் சமுதாயத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. உலகில் மனிதநேயம் குறைய குறைய மனித நேயமற்ற மனிதர்கள் வளர வளர, உலகம் விரைவில் அழிந்து விடும் ஆபத்து அச்சுறுத்துகின்றது.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. ஆரம்பத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதன் வளர்ந்தான். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான். மனிதன் குடும்பம் குடும்பமாக வாழத்துவங்கியதும் சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர், தாக்கிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.

ஆயினும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது. மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆகட்டும்; போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறைச் சம்பவங்களாக இருக்கட்டும்... பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட... என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள். அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே 'உலக மனித நேய தினம்'.

சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். உயிரிரக்கப் பண்பு என்பது இங்கு மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்று இதனைக் கூறலாம்.

உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவது, மனிதனாகப் பிறந்த நமது ஒவ்வொருவரது கடமையாகும். அதில் முக்கியமான, அவசியமான கடமையாக நிற்பது, பிறர் நலம் பேணும் சமுதாய கடமை. நாம் உலகில் வாழ்வது ஒரு முறை, அவ்வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். சக மனிதனிடம் அன்பு காட்டுவது, அவனைத் தன்னைப்போல மதிப்பது, எல்லைகள் கடந்து ஏழைகளுக்கு இரங்குவது, பசிப்பிணி நீக்கி அவர்களை வாழ வைப்பது போன்ற சமுதாய கடமைகளில் நாம் ஒவ்வொருவரும் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது.

மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது, என்பதை வள்ளுவரும் அழகாக, "பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்", என அழகாக எடுத்துரைக்கிறார்.

"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை'' என்பதுவும் வள்ளுவம்தான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2023, 15:18