தேடுதல்

காங்கோ குடியரசின் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதி காங்கோ குடியரசின் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதி   (AFP or licensors)

காலரா பாதிப்பினால் பாதிக்கப்படும் காங்கோ சிறார்

அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல ஆண்டுகளாக பாதிக்கப்படாத நாட்டின் சில பகுதிகளுக்கும் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது. UNICEF ஒருங்கிணைப்பாளர் ஷமேசா அப்துல்லா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் இடப்பெயர்தல்களால், சிறார் மோசமான காலரா நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், நாடு முழுவதும், ஏறக்குறைய 31,342 பேர் காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யுனிசெஃப் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட யுனிசெஃப் இன் இவ்வறிக்கையானது 2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 230 இறப்புகள் இருந்தன என்றும்  அவர்களில் பலர் சிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிவு பகுதியில் 21,400 க்கும் மேற்பட்டோர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் 5 வயதுக்குட்பட்ட 8,000 க்கும் மேற்பட்ட சிறார் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.

"காலரா பாதிப்பின் அளவு பேரழிவுகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வரும் நிலையில் அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல ஆண்டுகளாக பாதிக்கப்படாத நாட்டின் சில பகுதிகளுக்கும் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார் காங்கோ ஜனநாயகக் குடியரசின் UNICEF மூத்த அவசர ஒருங்கிணைப்பாளர் ஷமேசா அப்துல்லா.

ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசு மிக மோசமான இடம்பெயர்ந்த நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாடு முழுவதும் 63 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 8,00,000 க்கும் மேற்பட்ட சிறார் உட்பட 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வடக்கு கிவு, தெற்கு கிவு மற்றும் இடூரி மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2023, 13:01