நிலவின் தென்துருவத்தை முதலில் தொட்ட நாடு இந்தியா
மெரினா ராஜ் – வத்திக்கான்
நிலவின் தென்துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது என்றும், இச்சிறப்பான பணிக்காக அயராது பாடுபட்டு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார் இந்திய தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்.
ஆகஸ்ட் 23, புதன்கிழமை சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து இச்சாதனையைப் புரிந்த இஸ்ரோ குழுவிற்கு உலகெங்கிலும் இருந்து தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் மக்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதற்கு இந்தியன் என்ற முறையில் தான் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ள நீதிபதி யஷ்வந்த் அவர்கள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்க இம்முயற்சி உதவும் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒரு மைல்கல் என்றும் பாராட்டியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனையைப் படைக்கக் காரணமாக அமைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் பணியானது நாட்டை உலகளவில் பெருமையடையச் செய்திருக்கின்றது என்று நீதிபதி யஷவந்த் கூறியுள்ள நிலையில், இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர், மாநிலத் தலைவர்கள், மக்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 இராக்கெட் வழியாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் சந்திராயன் 3இன் பயணப் பாதை மாற்றப்பட்டு, 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 23 புதன்கிழமை இந்திய நேரம் மாலை 6 மணி அளவில் சந்திராயன்-3இன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்