தேடுதல்

இந்தோனேசியா மக்கள் இந்தோனேசியா மக்கள்   (ANSA)

உலக மக்கள்தொகை தின சிறப்பு புள்ளிவிவரங்கள்

ஜூலை 11ஆம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மக்கள்தொகை தினம், இவ்வாண்டு ஆண்-பெண் சமத்துவம் வளர்ப்போம் என்பதை மையப்பொருளாகக் கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இன்றைய உலகில் 804 கோடியே 36 இலட்சம் பேர் வாழ்வதாக இச்செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட உலக மக்கள்தொகை நாளையொட்டி வெளியிடப்பட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மக்கள்தொகை தினம், இவ்வாண்டு ஆண்-பெண் சமத்துவம் வளர்ப்போம் என்பதை மையப்பொருளாகக் கொண்டு சிறப்பிக்கப்பட்டது.

இந்தாண்டு உலக மக்கள்தொகை தினத்திற்காக ஐ.நாவின் கருப்பொருள், ஆண்-பெண் சமம் என்பதன் சக்தியை உணர்வது, உலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை திறக்க பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் குரலை மேலோங்கச் செய்வது என்பதாக இருந்தது.

உலகில் சீனா 145 கோடியே 62 இலட்சம் மக்களைக் கொண்டு நாடுகளுக்குள் மக்கள்தொகையில் முதலிடத்தையும், அதற்கு சிறிது குறைவாக, அதாவது 142 கோடியே 19 இலட்சத்தைக் கொண்டு இந்தியா இரண்டாமிடத்தையும், அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தோனேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, பிரேசில், பங்களாதேஷ், இரஷ்யா, மெக்சிகோ ஆகியவை அதற்குப்பின் வரிசையாக இடங்களைக் கொண்டுள்ளன எனவும் இத்தகவலில் கூறப்பட்டுள்ளது.

கி.மு. 8000மாம் ஆண்டில் 50 இலட்சமாக இருந்த உலக மக்கள் தொகை 1800ஆம் ஆண்டு 100 கோடியாக உயர்ந்தது. இன்றைய மக்கள்தொகை 1000 கோடியை 2057ஆம் ஆண்டு எட்டும் என ஐ.நா. நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 8கோடியே 30 இலட்சம் என்ற விகதத்தில் மக்கள் தொகை பெருகிவருகிறது.

2000மாம் ஆண்டில் சராசரி ஆயுட்காலம் 67 ஆண்டுகளாக இருந்தது, தற்போது 72 ஆக உயர்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக மக்கள்தொகை தினம் 1989ஆம் ஆண்டு ஜீலை 11ஆம் தேதி, ஐ.நா.வால் தோற்றுவிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியபோது, உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2023, 14:03