தேடுதல்

உக்ரைன் நாட்டுச் சிறுமி தன் நாட்டுக் கொடியுடன் உக்ரைன் நாட்டுச் சிறுமி தன் நாட்டுக் கொடியுடன்   (AFP or licensors)

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு படைப்பாற்றல் பயிற்சி

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல், 2023 ஜூன் 23 வரை, ஐக்கிய நாடுகள் அவை 25,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்புகளை உக்ரைனில் பதிவு செய்துள்ள நிலையில் அதில் குழந்தைகள் மட்டும் 1624 பேர் என்று எடுத்துரைத்துள்ளது

மெரினா ராஜ் - வத்திக்கான்

படைப்பாற்றல் வழியாக மன அழுத்தத்தை குறைக்கவும், நம்பிக்கையில் வளர்க்கவும், குழந்தைகளுக்கு கலை வழி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றும், கலை வழி சிகிச்சை என்பது மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும், அச்சங்களை மாற்றுவதற்குமான ஓர் இயற்கையான வழி என்றும் குறிப்பிட்டுள்ளார் கார்கிவில் பணியாற்றும் உளவியலாளர் Kateryna.

ஏறக்குறைய 500 நாட்களுக்கு முன்பு தொடங்கிய உக்ரைன் இரஷ்யா போரினால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் SAVE THE CHILDREN என்னும் பன்னாட்டுக் குழந்தைகள் நலஅமைப்பின் உளவியலாளர் கேத்தரினா.

எதிர்மறை நினைவுகளை நேர்மறையானவற்றுடன் மாற்றுதல், நிகழ்காலத்தை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் காணுதல், துன்ப நினைவுகளால் ஏற்படும் கவலைகளை நீக்குதல் போன்றவற்றில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகள் வாழ்வு சீரமைக்கப்பட இத்தகைய மறுவாழ்வு மையங்களும் உளவியல் உதவி மையங்களும் இருப்பது மிகவும் நல்லது என்றும் வலியுறுத்தியுள்ளார் கேத்தரினா.

பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் உள்ள கட்டிடங்கள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் SAVE THE CHILDREN என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

போர் மற்றும் மோதலினால் நாளொன்றிற்கு மூன்று குழந்தைகள் வரை கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் என்றும், பல குழந்தைகள் நிம்மதியான தூக்கமின்றியும் துணிவுடன் பேசும் திறனின்றியும் இருப்பதாக தெரிவித்துள்ள அவ்வமைப்பு, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் 2023 ஜூன் 23 வரை, ஐக்கிய நாடுகள் அவை 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அதில் குழந்தைகள் மட்டும் 1624 பேர் என்றும் எடுத்துரைத்துள்ளது.

உயிரிழப்பு மற்றும்  காயங்களை ஏற்படுத்தும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள், விண்கல தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளின் விளைவாக கடுமையான உளவியல் துன்பங்களுக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் முழுவதும் உள்ள டிஜிட்டல் கற்றல் மையங்கள் மற்றும் குழந்தை நட்புறவு மையங்களில் உளவியல் சமூக ஆதரவு நடவடிக்கைகள் வழியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனஅழுத்தங்களைக் குறைக்கவும், மனக் காயங்களை குணப்படுத்தவும் உதவி வருகின்றது  Save the children அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2023, 13:57