தேடுதல்

உணவுபொருள்கள் தாங்கிய கனரக வாகனங்கள் உணவுபொருள்கள் தாங்கிய கனரக வாகனங்கள்  (AFP or licensors)

மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் சிரியா நாட்டு மக்கள்

துருக்கியில் இருந்து உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்கும் ஐக்கிய நாடுகளின் எல்லை தாண்டிய உதவியானது ஜூலை 10 திங்கள் அன்று முடிவடைந்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வடமேற்கு சிரியாவில் உள்ள மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்கி வரும் ஐ.நா. அவையின் எல்லை தாண்டிய உதவியை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் அந்தோணியோ கூட்டரெஸ்.

ஜூலை 10 திங்கள்கிழமையுடன் சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வர அனுமதித்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையினால் அவ்வொப்பந்தத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகள் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலரான அந்தோணியோ கூட்டரெஸ்.

போர் மற்றும் குளிரினால் இலட்சக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள கூட்டரெஸ் அவர்கள், போரினால் 40 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

உலக உணவுத் திட்டம் மற்றும் உதவிகளால் 79 கனரக வாகனங்கள் உணவுகளை எடுத்துச்சென்று வழங்குவதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ள கூட்டரெஸ் அவர்கள், தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதையும் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தின் காரணமாக பிப்ரவரி முதல் இன்றுவரை ஏறக்குறைய 4,000 கனரக வாகனங்களில் உணவுப்பொருள்கள் வந்திருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

வடமேற்கு சிரியாவில் வாழும் 40 இலட்சம் மக்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், இவ்வாண்டு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே அவர்களின் நிலைமைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தன என்றும் தெரிவித்துள்ளார் கூட்டரெஸ்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவில் வசிக்கும் மக்களுக்குத் துருக்கியில் இருந்து உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்கும் ஐக்கிய நாடுகளின் எல்லை தாண்டிய உதவியானது ஜூலை 10 திங்கள் அன்று முடிவடைந்துள்ள நிலையில், ஐ.நா பாதுகாப்பு அவை அதை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தத் தவறிவிட்டது என்றும் செய்திகள் கூறுகின்றன.

உணவுப் பொருள் உதவியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க இரஷ்யா ஓர் எதிர் முன்மொழிவை முன்வைத்துள்ளது என்றும், ஜூலை 11 செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2023, 13:58