தேடுதல்

சூடானின் சாட் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் சூடானின் சாட் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் 

சூடான் வன்முறையால் பாதிப்புக்குள்ளாகும் சிறார்

மோதல்கள், இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகள் காரணமாக, சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியிலிருந்து 31 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாடுகள் தொடர்ந்து தங்கள் எல்லைகளைத் திறந்து புலம்பெயர்ந்து வரும் மக்களை வரவேற்பது அவசியம் என்றும், எல்லைகளின் இருபுறமும் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் Save the Children இயக்குனர் ஆரிஃப் நூர்.

ஏறக்குறைய மூன்று மாத மோதலுக்குப் பிறகு சூடானின் டார்பூர் பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டும், கைவிடப்பட்டும் இருக்கும் நிலையில் வன்முறையால் பாதிக்க்கப்பட்டு அடைக்கலம் தேடி வருபவர்களை வரவேற்க வலியுறுத்தி இவ்வாறு கூறியுள்ளார் சூடானிற்கான Save the Children இயக்குனர் ஆரிஃப் நூர்.

பன்னாட்டு சமூகத்தின் வலுவான நடவடிக்கையுடன் எல்லைகளுக்கு அப்பால் மனிதாபிமான உதவியை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய நூர் அவர்கள், சூடானின் சாட் முதல் மேற்கு மற்றும் மத்திய டார்ஃபர் வரை, நிலைமை மேலும் மோசமடைவதை சுட்டிக்காட்டி உலகம் அதை மேலும் அனுமதிக்கக் கூடாது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்லும் சிறார் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சிறார் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை விரைவாக அணுகுவது அவசியம் என்று வலியுருத்தியுள்ள நூர் அவர்கள், தற்போதைய மோதல்கள், இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார சீரழிவு காரணமாக சூடான் ஏற்கனவே மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

வன்முறையினால் சூடானில் 1கோடியே 58 இலட்சம் மக்கள் அடிப்படை உதவி தேவைப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், மோதல்கள், இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகள் காரணமாக, சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியிலிருந்து 31 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்களில் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது Save the Children அமைப்பு.

மோதல்கள், இடம்பெயர்வுகள், தீவிர வறுமை, பசி மற்றும் அடிப்படை சேவைகள் இன்றி பாதிக்கப்படும் சிறார் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக 1983 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது Save the Children அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2023, 14:12