இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உலகெங்கிலும் இயற்கைப் பேரழிவுகள் காரணமாக 5 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், மனித வர்த்தகம், புலம்பெயர்தல், இனமத பாகுபாடு ஆகியவற்றால் பெண்களும் குழந்தைகளும் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகளின் 53ஆவது மனித உரிமை கூட்டத்தின் அறிக்கை.
ஜூன் 19 முதல் ஜூலை 14 வரை ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால நிலை மாற்றத்தின் சூழலில் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பித்த போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ஐ நாவின் சிறப்பு அறிக்கையாளர் Ian Fry.
காலநிலை மாற்றத்தினால் உணவு, நீர், நலவாழ்வு, தங்குமிடம், ஆகியவற்றுக்கான உரிமைகளை மக்கள் இழக்கின்றனர் என்றும், மேலும் சிலர் அடிப்படைக் கல்வி, மற்றும் வாழ்வதற்கான உரிமையை இழக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் Ian Fry.
2014 முதல் 2022 ஆண்டுகளுக்கு இடையில் இடம்பெயர்தலினால் 50,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று எடுத்துரைத்துள்ள Ian Fry அவர்கள், காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இடப்பெயர்வு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்பை நிவர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், பிரன்சிஸ்கன் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பைச் சார்ந்த அருள்பணி Rene Arturo Flores Medina அவர்கள் பேசுகையில் மத்திய அமெரிக்காவில், COVID-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம், சமூக-பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றின் தாக்கங்கள் ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது என்றும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வறட்சி, புயல் போன்றவைகள் கால நிலை மாற்றத்தின் விளைவுகளால் ஏற்படுபவை என்று எடுத்துரைத்துள்ள அருள்பணி மெதினா அவர்கள், இவை இரண்டும் உணவுப் பற்றாக்குறையை அதிகமாக ஏற்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் எட்டா மற்றும் அயோட்டா சூறாவளிகள் பனாமாவைத் தாக்கியபோது, "இடம்பெயர்ந்தவர்கள் பள்ளிகள் மற்றும் ஆலயங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர் என்றும் (2023) இன்று வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் திட்டமிடப்பட்ட 116 வீடுகளில் ஐந்து வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார் அருள்பணி Medina.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்