தேடுதல்

கடினமான கல்லை சுமந்து நிற்கும் சிறுமி கடினமான கல்லை சுமந்து நிற்கும் சிறுமி  (© Steve McCurry)

வாரம் ஓர் அலசல் – உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளை ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாட வலியுறுத்துகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளி உருவாகும் போதும் நாட்டின் சாதனையாளர் ஒருவர் இழக்கப்படுகின்றார். நாட்டின் எதிர்காலம் இருண்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றது. புத்தகப்பையை சுமக்க வேண்டிய வயதில் குடும்ப வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளியாக மாறும் குழந்தைகளின் வாழ்வு சுருண்டு போகின்றது குப்பைப் பையில். இதனைத் தடுக்கவே ILO எனப்படும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளை ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாட வலியுறுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள் உலகெங்கிலும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலையை முடிவிற்குக் கொண்டுவரவும், அனைத்து வகையான குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் முயற்சி செய்கின்றது. 2002ஆம் ஆண்டு முதல், ILO எனப்படும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தும் முறையை ஒழிப்பதற்கும், தடை செய்வதற்கும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க உலக சமூகத்தை வலியுறுத்தியது. 2025ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைய, அதிகமான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றது.

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நாள் வரலாறு

1919 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெர்சாய்ஸ் உடன்படிக்கை முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கை சமூக நீதியின் வழியாக மட்டுமே நிலையான அமைதியை அடைய முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. இதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டில், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாள் அரசு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்சனையை ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் தீர்க்கவும், சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் ஒரு தளத்தை வழங்குவதற்காக நிறுவப்பட்டது இந்நாள். பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு "குழந்தைகளின் குழந்தைப் பருவம், திறன், மாண்பு, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் வேலை" என்று குழந்தைத் தொழிலாளார்களின் வேலையை வரையறுக்கிறது. இந்த வரையறையானது, ஒரு குழந்தை ஆரோக்கியமான நபராக வளர உதவும் செயல்பாடுகளை புறநிலையாக அடையாளம் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியாக உள்ளது.

குழந்தைகளை அடிமைப்படுத்தி, அவர்களது குடும்பங்களிலிருந்து அவர்களைப் பிரித்து,  கடுமையான ஆபத்துகள் மற்றும் நோய்களை குழந்தைகளுக்கு குழந்தைத்தொழிலாளர் நிலை ஏற்படுத்துகின்றது. ILO எனப்படும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 1999ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் மற்றும் மனித வர்த்தகத்தை அகற்றுவதற்கான அதன் முயற்சிகளை விரைவுபடுத்த குழந்தைகளை பணியமர்த்தும் போது அவர்களது வயது கட்டாய பள்ளிப்படிப்பு வயதை விட குறைவாக இருக்கக்கூடாது என்று வரையறுத்தது. அதன்பின் 2015 இல் ILO ஆல் நிறுவப்பட்ட உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் அதன் பணிக்கு கூடுதல் வேகத்தை அளித்தன. 2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகையான குழந்தை தொழிலாளர்களையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. ஆப்ரிக்காவில் 7 கோடியே21 இலட்சம் ஆப்பிரிக்க குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர், அவர்களில் 3 கோடியே 15 இலட்சம் பேர் மிகவும் மோசமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி முழுவதும், அமெரிக்காவில் விவசாயம் மற்றும் கைவினைத் தொழில்களில் பல குழந்தைகள் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்., 10 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் பண்ணைத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணியமர்த்தப்பட்டனர். இந்த சூழலைத் தவிர்க்கவே குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் கொண்டு வரப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் விதிமுறைகள் என பொதுவாக அறியப்படும் நியாயமான தொழிலாளர் தரநிலைச் சட்ட விதிகள் 1938 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் முயற்சிகள், அவசர தேவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குழந்தைத் தொழிலாளர்களின் ஆபத்துகளைப் பற்றி அறியாத பெரியவர்களுக்குக் கல்வி அளிப்பதையும் முன்னெடுத்து வருகின்றது. ILO எனப்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பில் 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வளரும் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களிடையே அமைதி மற்றும் நேர்மையை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்காக 1969 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினை இவ்வமைப்பு பெற்றது. குழந்தைத் தொழிலாளர்களின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள பல குழந்தைகளின் வாழ்க்கையை இவ்வமைப்பு மேம்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, உதவித்தொகை, குழந்தை பராமரிப்பு திட்டங்கள் போன்ற பல முயற்சிகள் இவ்வமைப்பால் நிறுவப்பட்டுள்ளன இதனால் அதிகமான குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. குழந்தைகள் உலகின் எதிர்கால சந்ததியினர். அவர்களுக்கு கல்வி அளிக்காமல் பணிபுரிய செய்வது மிகப்பெரிய கொடுமையாகும். எனவே அத்தகைய துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் இந்த உல்க குழந்தித்தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருது பொருளை அடிப்படையாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே போன்று இந்த ஆண்டு அனைவருக்கும் சமூக நீதி. குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவிற்குக் கொண்டு வருதல் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (ILO) மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 1கோடியே1 இலட்சம் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக இருக்கின்றனர். பொருளாதார வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், நாட்டில் நிலவும் வறுமையை நம்மால் புறக்கணிக்க முடியாது. குழந்தைகள் வேலைக்குத் தள்ளப்படுவதற்கும் கல்வியிலிருந்து விலகிச் செல்வதற்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது வறுமை. இந்தியாவில் உள்ள பல ஏழைக் குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடிக்கொண்டிருப்பதால், தங்களின் வருமானத்திற்கான வழியாகக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துகின்றனர். வறுமை, கல்வியறிவின்மை, மாண்பற்ற வேலைகள், விழிப்புணர்வின்மை, போன்றவற்றோடு குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையும் மிகவும் மோசமடைந்து வருகின்றது.

உலகின் ஏழ்மையான நாடுகளில், ஐந்தில்  ஒரு குழந்தை, குழந்தைத் தொழிலாளியாக உள்ளது. வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சி குறைந்த நாடுகளில், நான்கில் ஒரு குழந்தை (வயது 5 முதல் 17 வரை) அவர்களின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் கேடு விளைவிப்பதாகக் கருதப்படும் உழைப்பில் ஈடுபடுகின்றது. ஆப்பிரிக்காவில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர் (5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளில் 26 விழுக்காடு). இது லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடன் ஒப்பிடும் போது, 7 விழுக்காடு குழந்தைகள் தீங்கு விளைவிக்கும் வேலையைச் செய்கின்றனர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாலின வேறுபாடு இன்றி 5 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.  இருப்பினும், பெண்களே ஊதியமில்லாத வீட்டுச் சேவைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் இந்தப் பிரச்சனையை எதிர்த்துப் போராட முயற்சி செய்து, பெரிய அளவில் அதன் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. குழந்தைத் தொழிலாளர்களின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்தும் மாநிலங்களின் நிலைமைகள் மேம்பட்டு வருகின்றன. கல்வியறிவு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொதுவான விழிப்புணர்வு குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முக்கியமான சமூக காரணியாகத் திகழ்கின்றது. இருப்பினும் அபாயகரமான தொழிற்சாலை நிலைமைகளில், இழிவான வேலைகளைச் செய்யும் ஏராளமான குழந்தைகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாகக் குறைவுபடுகின்றது. அதே நேரத்தில் நகரங்களில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் வேலைகளுக்கு குழந்தைகள் தள்ளப்படும் சூழலும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலை மாற குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, சட்டத்தைப் புறக்கணிக்கும் முதலாளிகள் மீது இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில், இந்த வறுமையை ஒழிக்க, நாட்டில் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

உலக இரத்த தான நாள்

ஜூன் மாதம் 14 ஆம் நாள் உலக இரத்த தான நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. 2005 ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட இந்நாளானது உலகெங்கிலும் உள்ள இரத்த தான தன்னார்வலர்களை வாழ்த்தவும் நன்றி தெரிவிக்கவும் ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது. இரத்த தானம் ஒரு விலைமதிப்பற்ற உயிர்காக்கும் பரிசு.  மீண்டும் மீண்டும் இரத்த தானம் செய்வது பாதுகாப்பான மற்றும் நிலையான இரத்த சேமிப்பு மற்றும் விநியோகத்தை உருவாக்குவதற்கான திறவுகோலாக அமைகின்றது. பல நாடுகளில், இரத்த வங்கிகள் அதன் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், போதுமான இரத்தத்தைப் பெறுவதற்கான வழிவகைகளைச் செய்யும் சவால்களையும் எதிர்கொள்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான உலக இரத்த தான. நாளுக்கான கருப்பொருளாக "இரத்தத்தை, இரத்தத்திலுள்ள, பிளாஸ்மாவைக் கொடுங்கள், வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி இரத்ததானம் செய்யுங்கள் என்பதாகும். வாழ்நாள் முழுவதும் இரத்த மாற்ற ஆதரவு தேவைப்படும் நோயாளிகள் இந்த இரத்த தானத்தால் பெரிதும் காக்கப்படுகின்றார்கள். இரத்தம் அல்லது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானமாக வழங்குவதன் வழியாக ஒவ்வொரு மனிதரும் இச்சமூகத்திற்கு ஆற்றக்கூடிய மிகப்பெரிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இரத்தம் தேவைப்படும் அனைத்து நோயாளிகளும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கும், பாதுகாப்பான நிலையான இரத்தம் அல்லது பிளாஸ்மாவைத் தொடர்ந்து வழங்குவதன் முக்கியத்துவத்தையும் இந்நாள் எடுத்துக்காட்டுகின்றது.

இரத்த தானம் செய்பவர்களை வாழ்த்தவும் நன்றி செலுத்தவும், மேலும் பலரை புதிய இரத்ததானம் செய்பவர்களாக ஊக்குவிக்கவும், இந்நாள் உதவுகின்றது. இரத்தமாற்றம் சார்ந்த நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதற்கும், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பான இரத்த விநியோகத்தை உருவாக்க உதவுவதற்கும் இந்த நாள் பயன்படுகின்றது. எனவே இரத்த தானம் செய்து வாழ்வோம். வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம்.

குழந்தைத் தொழிலாளர்களின் துன்பம் அகற்றுவோம், அவர்களின் வாழ்வில் கல்வி என்னும் தீபம் ஏற்றுவோம்.  

அனைவருக்கும் இனிய உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் மற்றும் இரத்த தான நாள் நல்வாழ்த்துக்கள். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 13:39