தேடுதல்

புகலிடம் தேடுவோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2021 லெஸ்போ) புகலிடம் தேடுவோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2021 லெஸ்போ)  

வாரம் ஓர் அலசல் – புகலிடம் தேடுவோர் உலக நாள்

1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய மாநாட்டில் உலக அகதிகள் நாள் அல்லது புகலிடம் தேடுவோர்க்கான உலக நாள் ஜூன் 20 அன்று கொண்டாடப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்து, அயல் நாட்டில் அகதியாகத் தஞ்சம் அடைந்து, கண்ணீரோடு கனவுகளையும் கரைத்து வாழும் மக்களுக்கான நாள் தான் உலக அகதிகள் நாள் அல்லது புகலிடம் தேடுவோர்க்கான உலக நாள். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 அன்று புகலிடம் தேடுவோர்க்கான உலக நாளானது உலக நாடுகளால் கொண்டாடப்படுகின்றது. அகதிகளின் நிலைமை மற்றும் அவர்களின் வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. வன்முறை மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய உலகெங்கிலும் உள்ள இலட்சக் கணக்கான தனிநபர்களின் துணிவை மதிக்கும் ஒரு நாளாகவும் இந்நாள் கருதப்படுகின்றது.

உலக அகதிகள் நாள் கொண்டாடப்படுவதற்கு முன்பே பல நாடுகள் ஜூன் 20 அன்று ஆப்ரிக்க அகதிகள் நாளைக் கொண்டாடி வந்தன. 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய மாநாட்டில் உலக அகதிகள் நாள் ஜூன் 20 அன்று கொண்டாடப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆப்ரிக்க அகதிகள் நாளுடன் இணைத்து உலக அளவில் இந்நாள் சிறப்பிக்க ஆரம்பிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள 1கோடியே 40 இலட்சத்திற்கும் அதிகமான மற்றும் வளர்ந்து வரும் அகதிகளுக்கான போராட்டங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்நாள் கொண்டாடப்படுகின்றது. புகலிடம் தேடுவோர், புலம்பெயர்ந்தோர் என்று தற்போது அழைக்கப்படும் அகதி என்ற இந்த சொல் சிலரிடத்தில் ஏளனம், பரிதாபம், வெறுப்பு, மற்றும் புறக்கணிப்பைத் தருவதை நாம் உணரமுடிகின்றது. ஆனால் அவ்வார்த்தைகளுக்குப் பின் உள்ள வலியும், அவர்கள் சந்தித்த இழப்புக்களும் அதை அனுபவத்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

வீடு, நாடு, இழந்து, கிடைக்கும் இடத்தில் தஞ்சம் புகுந்து, ஆசைகள் கனவுகளைக் களைந்து, பசியோடும் நிலையற்ற வாழ்வோடும் போராடுகின்ற நிலை தான் அகதிகளின் நிலை. தங்களது சொந்தநாட்டை, நிலத்தை, வீட்டை விட்டு, அரசின் ஆதிக்கம், கெடுபிடி, உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறை காரணமாக இடம்பெயர கட்டாயப்படுத்தப்படும் மக்களே அகதிகள் என்னும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒரு நாட்டின் சாதாரண குடிமக்களாகத் திகழ்ந்த அவர்கள் சந்தர்ப்ப சூழல்களால் அகதிகள் நிலைக்குத் தள்ளப்பட்ட பின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவது வேதனை அளிக்கும் செயலாக இருக்கின்றது.

சூடான் புகலிடம் தேடுவோர்
சூடான் புகலிடம் தேடுவோர்

நாடுகளின் வளர்ச்சி, எழுச்சி, போர், அரசியல் போன்றவைகள் தான் அகதிகளையும்  பசி, பட்டினி மற்றும் வறுமையையும் உருவாக்குகின்றன. நாட்டின் அனைத்து வெற்றி வரலாறுகளும் சிலரை அகதிகளாக மாற்றியிருப்பதை நாம் வரலாற்றில் காணலாம். இத்தகைய மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்களின் இழப்புகளைக் குறித்து விவாதிக்கவும் ஐ.நா ஏற்படுத்தியிருக்கும் நாள் தான் புகலிடம் தேடுவோர்க்கான உலக நாள். ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் 20ஆம் நாள் கொண்டாடப்படும் இந்நாளில், அத்தகைய மக்களின் நல்வாழ்வுக்காகவும், வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களையும், உதவிகளையும், நிகழ்ச்சிகளையும் புகலிடம் தேடுவோர்க்கான  ஐக்கிய நாடுகளின் அமைப்பு  உலகம் முழுக்க இந்நாளில் ஏற்படுத்துகின்றது.

2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி 8கோடியே 30 இலட்சம் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வசித்து வருகின்றனர். அதில் 11 இலட்சம் மக்கள் 2020ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிலைக்கு ஆளானவர்கள். புகலிடம் தேடும் உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏறக்குறைய குறிப்பிடத்தக்க ஐந்து நாட்டை மட்டுமே சேர்ந்தவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கனவுகளை, ஆசைகளை, எதிர்காலத்தைத் தொலைத்த இம்மக்கள் அவர்களின் தேவை, சமஉரிமை, மரியாதையான அடிப்படை வாழ்க்கை அனைத்தையுமே இழக்கின்றனர். புகலிடம் தேடுவோர் என்பதாலேயே அவர்கள் சுரண்டப்படுவதும், பாலியல் ரீதியாக சீண்டப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் பரவலாக நடந்துவருகின்றது. இந்நிலை மாற உலகின் அரசுகள் துணை நின்று சமஉரிமைகளுடனான ஒரு வாழ்வை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இத்தகைய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

உலகளவில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 42,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர் என்றும் அவர்களில், 2கோடியே10 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்கள்  என்றும் UNCHR எனப்படும் புகலிடம் தேடுவோர்க்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு கூறுகின்றது. மேலும் இவர்களில் 51 விழுக்காடு பேர் 18 வயதுக்குட்பட்ட இளையோர் என்பது வருத்தத்திற்குரியது.  

அயர்லாந்து சாலையோர மக்கள்
அயர்லாந்து சாலையோர மக்கள்

86 விழுக்காடு அகதிகள் எனப்படும் புகலிடம் தேடுவோர்க்கு வளரும் நாடுகளால் அடைக்கலம் கொடுக்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கென்யாவின் தாதாப் நகரில் உள்ளது இங்கு  2,18,873 மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் 1கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைத் தங்கள் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டிற்கான புகலிடம் தேடுவோர்க்கான உலக நாள் கருப்பொருளானது ‘‘நம்பிக்கையுடன் தொலைதூரத்தில்‘‘ என்பதாக உள்ளது. மோதல்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் காரணமாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை ஆதரிக்கவும் அவர்கள் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நாள் உதவுகிறது. UNHCR இன் கூற்றுப்படி, தற்போது உலகம் முழுவதும் 10கோடியே 84 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக உள்ளனர். இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

1980களில் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கில் இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில் 2009ஆம் ஆண்டில் போர் முடிவுற்றதால், தங்களது நாட்டிற்குச் செல்ல பலரும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்தியாவில் இருந்து வெளியேறி இலங்கையில் அவரவர் பூர்வீகத்தில் குடியேற தேவையான உதவிகளை இலங்கை மற்றும் இந்திய அரசு செய்ய முன்வந்த நிலையில், பலரும் குடும்பத்துடன்  தாயகம் திரும்பினர். தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 108 அகதிகள் முகாம்கள் செயல்படுகின்றன. இதில் ஏறக்குறைய 50,000க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர். முகாம்களுக்கு வெளியில் ஏறக்குறைய 30,000 பேர் இருப்பார்கள் என்றும், 2010 முதல் 2022 வரை 15,952 பேர் தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்காக மண்டபத்தில் ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம் தற்காலிக இடைத்தங்கல் முகாமாக மாற்றப்பட்டது. அகதிகளாக வரும் மக்கள் உண்மையான அகதிகள் தானா? புகலிடம் தேடுவோர் தானா? என்பதை இங்கு வைத்து உறுதி செய்த பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களில் போராளிக் குழுக்களைச் சார்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மக்கள், மண்டபத்தில் உள்ள தடுப்பு முகாம்களிலோ அல்லது செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இருந்த சிறப்பு முகாம்களிலோ தங்க வைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மண்டபம், கொட்டப்பட்டு ஆகியவை இடைத்தங்கல் முகாம்களாக அமைக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள கும்முடிப்பூண்டி, புழல், ஈரோட்டில் உள்ள பவாணிசாகர், திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய முகாம்கள் அளவில் பெரிய முகாம்கள் ஆகும். இங்கு ஒவ்வொரு முகாமிலும் ஏறக்குறைய 500 முதல் 1500 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளன. ஓரளவு பொருளாதார வசதியுடன் வருகை தந்தவர்கள் காவல்துறைப் பதிவுடன் முகாம்களுக்கு வெளியே சென்று வசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை காவல் நிலையம் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் தங்களது பதிவுகளை அல்லது அனுமதிகளை புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். தற்போது தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்த 65000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களைத் தவிர முகாம்களுக்கு வெளியே ஏறக்குறைய 35000 பேர் வசித்து வருகின்றனர்.

புகலிடம் தேடுவோர்க்கான உலக நாளில் அத்தகைய மக்களின் எதிர்கால இலக்குகள் மற்றும் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி விவாதிக்கும் நேரடி டிஜிட்டல் நிகழ்வுகளை நடத்த ஐ.நா திட்டமிட்டுள்ளது. அதன்படி நாம் வாழும் ஊரில் சமூகத்தில் உள்ள அத்தகைய மக்களுக்கு நண்பராக இருக்க முயல்வோம். அவர்களுடன் உணவு உண்ண, நமது நண்பர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதன் வழியாகவும்  அவர்களுக்கு நம்மாலான உதவிகளை அளிக்கலாம். இதனால் ஒரு புதிய சூழலில் வாழும் அத்தகைய மக்களுக்கு ஒரு புதிய உறவுச் சுற்றுச்சூழலை உருவாக்கி அவர்களது வாழ்வை எளிதாக்கலாம். நண்பர்களாக இருந்து ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதன் வழியாக சமூகத்திற்கு நல்வழிகாட்டியாக பணியாற்றி உதவலாம்.

சூடான் புகலிடம் தேடுவோர்
சூடான் புகலிடம் தேடுவோர்

புகலிடம் தேடுவோர் பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி அவர்கள் பற்றிய நற்கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், நமது நேரத்தை அவர்களுக்காக வழங்குதல், அவர்களுக்காக தாராளமான நன்கொடை வழங்குதல், நிதி திரட்டும் பிரச்சாரங்களில் பங்களித்தல், போன்றவற்றின் வழியாக அவர்களின் வாழ்விற்காக நாம் உதவலாம். புகலிடம் தேடுவோர் உலக நாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் நிகழ்வுகளில் பங்கேற்றல், கலாச்சார நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள், ஆய்வுப்படங்கள், அனுபவப் பகிர்வுகள் போன்றவற்றில் தன்னார்வ மனதுடன் பங்கேற்று அவர்களுடன் பயணிக்கலாம். அவர்கள் செய்யும் சொந்தமான வணிகத்தொழில் சார்ந்த பொருட்களை வாங்கி, பிறரையும் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்கலாம்.

புகலிடம் தேடி வாழும் மக்களை சமமாக மதித்து மனிதர்களாக ஏற்போம். அவர்களது வளமான எதிர்கால வாழ்க்கைக்கான வாய்ப்புக்களை உருவாக்கி வாழ்க்கையை மேம்படுத்த உறுதிஏற்போம். அயலாரையும் அன்பு செய்வோம் அவர்களில் வாழும் இறைமையைக் கண்டு கொள்வோம் அனைவருக்கும் புகலிடம் தேடுவோர்க்கான இனிய உலக நாள் நல்வாழ்த்துக்கள்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2023, 14:47