தேடுதல்

பிலிப்பீன்ஸ் குழந்தைகள் பிலிப்பீன்ஸ் குழந்தைகள்   (AFP or licensors)

பிலிப்பீன்ஸ் குழந்தைகள் எதிர்நோக்கும் இயற்கைப் பேரிடர் விளைவுகள்

குழந்தைகளின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும், அவர்களின் வருங்காலம் நன்முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் Save the Children பிறரன்பு அமைப்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டில் 56 இலட்சம் குடும்பங்களில் வாழும் குழந்தைகள் தற்போது, இயற்கைப் பேரிடர்களின் விளைவுகளையும் எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாக Save the Children பிறரன்பு அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் நாட்டில் அடிக்கடி இடம்பெற்றுவரும் பெரும்புயல்களால் மக்கள், குறிப்பாக குழந்தைகள் பெரும்துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில் தற்போது மாயோன் எரிமலை வெடிப்பும் இடம்பெற்றுவருவதால், இவர்களின் நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது இப்பிறரன்பு அமைப்பு.

உலக அளவில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிவரும் நாடுகளுள் முன்னணியில் நிற்கும் நாடான பிலிப்பீன்ஸ் நாட்டில், குடும்பங்களுக்கான பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், அதிலும் ஏழைகள் இயற்கைப் பேரிடர்களாலும், காலநிலை மாற்றத்தாலும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் Save the Children அமைப்புத் தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமங்களை சந்திப்பதாகவும், பெண் குழந்தைகள் உரிமை மீறல்களுக்கும், சுரண்டலுக்கும், கைவிடப்படலுக்கும், பாலர் திருமணத்திற்கும் உள்ளாக்கப்படுவதாகவும் இந்த பிறரன்பு அமைப்பு தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும், அவர்களின் வருங்காலம் நன்முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளிடையே, குழந்தைகளுக்காக 116 நாடுகளில் 25,000 அர்ப்பணப் பணியாளர்களுடன் சேவையாற்றிவருகிறது Save the Children பிறரன்பு அமைப்பு. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 15:23