தேடுதல்

இஸ்தான்புல்லில் நவீன கலை அருங்காட்சியகம்

அமைதியைக் கட்டியெழுப்புவதில் திருத்தந்தையும் நானும் ஒத்த சிந்தனையுடையவர்களாக இருக்கின்றோம் : இத்தாலியக் கட்டிடக் கலைஞர் Renzo Piano.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இஸ்தான்புல்லில் புதிதாக அமைந்துள்ள நவீன கலை அருங்காட்சியகம் உரையாடல் மற்றும் அமைதிக்கான இடமாக அமைத்துள்ளது என்று வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார் உலகப் புகழ்பெற்ற இத்தாலியக் கட்டிடக் கலைஞர் Renzo Piano.

ஜூன் 20, திங்களன்று, இஸ்தான்புல்லில் திறக்கப்பட்ட இந்த நவீன கலை அருங்காட்சியகம் பைசான்டியம் கான்ஸ்டான்டிநோபிள் ஆகிய இடங்களிலுள்ள கலை அருங்காட்சியங்களை ஒத்ததாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் Piano.

இஸ்தான்புல்லின் தெருக்களில் நாகரீகங்கள் ஒன்றிணைவதை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், இஸ்தான்புல்லில் அமைந்துள்ள இந்த நவீன கலை அருங்காட்சியகம் கிழக்கும்  மேற்கும் சந்திக்கும் பண்டைய நகரத்திற்கு ஒற்றுமையின் மற்றொரு அடையாளத்தை கொண்டு வருகிறது என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் Piano.

இந்த விதத்தில் திருத்தந்தையும் நானும் ஒத்த சிந்தனை உடையவர்ககளாக இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ள Piano அவர்கள், அவர் திருத்தந்தையாக இருந்துகொண்டு அமைதியைக் கட்டியெழுப்புகிறார், நான் ஒரு எளிய கட்டிடக் கலைஞராக இருந்துகொண்டு அமைதியைக் கட்டியெழுப்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து குறித்தும், அவருடைய வயது, மதிப்பீடுகள் குறித்தும் இந்நேர்காணலில் குறிப்பிட்டுள்ள Piano அவர்கள், உண்மையில், இந்த அருங்காட்சியகத்தை உருவாக்க அதிக செலவு செய்யவில்லை என்றும், சில மணிநேரங்களுக்கு வெடிகுண்டுகளை வீசும் விமானத்திற்கு எவ்வளவு பணம் செலவாகிறதோ அதே அளவுதான் இதற்கும் செலவாகியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அமைதி மற்றும் உரையாடலுக்கான ஒரு அருங்காட்சியகத்திற்கு நிதியளிப்பது ஒரு மரணம் மற்றும் அழிவின் ஒரு விமானத்திற்கு நிதியளிப்பதைப் போலவே செலவாகும் என்றால், போரை நிறுத்த இன்னும் எத்தனை இஸ்தான்புல் அருங்காட்சியகங்கள் தேவைப்படும்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார் Piano.

Renzo Piano அவர்களின் குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் பாரிஸில் உள்ள Georges Pompidou மையம், இலண்டனில் உள்ள The Shard, நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்கக் கலையின் Whitney அருங்காட்சியகம், இஸ்தான்புல்லிலுள்ள நவீன அருங்காட்சியகம், மற்றும் ஏதென்ஸில் உள்ள Stavros Niarchos பிறரன்பு கலாச்சார மையம் ஆகியவை அடங்கும்.  இவர் 1998-இல் Pritzker கட்டிடக்கலை விருதை வென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2023, 13:58