தேடுதல்

வன்முறையால் பாதிக்கப்பட்ட வாகனம் வன்முறையால் பாதிக்கப்பட்ட வாகனம்   (AFP or licensors)

மணிப்பூர் வன்முறைக்கு அவசர கவனம் தேவை

வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்குக் கட்சிப் பிளவுகளைக் கடந்து தங்களால் இயன்றதை அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர் - மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான டெரெக் ஓ பிரையன்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையில் அவசர கவனம் தேவை என்றும்,  லிபியா, லெபனோன், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளைப் போல எவராலும் எப்பொழுது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம் என்ற நிலையை மணிப்பூர் அடைந்து வருகின்றது என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைவர், ஜெனரல் வி.பி. மாலிக்.

கடந்த மே மாதம் 3ஆம் தேதி தொடங்கிய Meteis மற்றும் Kukis மக்களுக்கு இடையிலான வன்முறை ஏறக்குறைய 50 நாட்களைக் கடந்துகொண்டிருக்கும் நிலையில் இயல்புநிலையை மீட்டெடுக்க ஏற்படுத்தப்பட்ட அமைதிக்குழு Meteis மற்றும் Kukis ஆகிய இருதரப்பினராலும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்பாலில் வசிக்கும் ஓய்வுபெற்ற முன்னாள்  இந்திய இராணுவ துணைத்தலைவர் (லெப்டினண்ட் ஜெனரல்) எல் நிஷிகாந்த சிங் அவர்களின் டுவிட்டர் குறுஞ்செய்திக்கு பதிலாக அளித்த செய்தியில் மணிப்பூரில் அமைதிக்கான முயற்சிக்கும் வலியுறுத்தியுள்ளார் மாலிக்.

வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்கு, கட்சிப் பிளவுகளைக் கடந்து தங்களால் இயன்றதை அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான டெரெக் ஓ பிரையன்.

மணிப்பூரில் நிலவும் வன்முறைச் சூழல் குறித்து உடனடியாக விசாரிக்கக்கோரி உள்துறைக்கான நிலைக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள பிரைன், வன்முறைகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகள் எழும்பியுள்ளன என்றும், பலர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் சுட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் அச்சம் நிறைந்த சூழலை, எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு வன்முறையின் அளவை மதிப்பிடுவது மிகவும் அவசியம் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் பிரைன்.

வன்முறைகள் குறித்து விவாதிக்க நிலைக்குழுக் கூட்டத்தை நடத்துவது நிலைமையை நேரடியாகப் புரிந்துகொள்ள உதவும் என்று கருதி மணிப்பூர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு உள்துறைக்கான நிலைக்குழுவின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறும் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இயல்பு நிலை திரும்புவதை உறுதிசெய்வதில் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்று தான் நம்புவதாகவும், வெளிப்படையாக, உரையாடல் பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைக்கான இந்த அவசர அழைப்புக்கு சாதகமான பதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2023, 12:33