தேடுதல்

இறந்தவர்களுக்காக அஞ்சலி! இறந்தவர்களுக்காக அஞ்சலி!  (AFP or licensors)

அறிக்கை - மனித புதைகுழிகளும், தோண்டி எடுப்பதில் தோல்வியும்

இலங்கையில் விசாரணைகளில் அரசியல் தலையீடு ஏற்பட்டு, தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத காலாசாரம் நிலவுகிறது என்கின்றன தல மனித உரிமை அமைப்புக்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1989ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனபோது அந்த மாவட்டத்திற்கான இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் அரசுத்தலைவர் கோத்தபய ராஜபக்‌ஷேயின் பங்கேற்பு குறித்த சந்தேகமும், மனித புதைகுழிகள் குறித்த விசாரணைகளில் அவரின் தடுப்பு முயற்சிகளும் அந்நாட்டில் மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மனித புதைகுழிகளும் அவைகளை தோண்டி எடுப்பதில் தோல்வியும்’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில், உண்மையை வெளியேக் கொண்டுவர முயன்ற இலங்கை காவல்துறையின் முயற்களில் கோத்தபய இராஜபக்‌ஷேயின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான சமூகத்தொடர்பாளர்கள், அனைத்துலக அமைதி மற்றும் நீதி அமைப்பு, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்கான மையம், காணாமல்போனோரின் குடும்பங்களின் குழு என்ற அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மனித புதைகுழிகளின் பின்னணியிலுள்ள உண்மைகளைக் கண்டறிவதில் இலங்கை அரசின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது.

மிகவும் சிரத்தையுடன் ஆழமாக செய்யப்பட்ட இந்த ஆய்வில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு அந்த விசாரணைகள் தொடர்பில் அரசின் தொடர்ச்சியான தலையீடு சீரான வகையில் இருந்துள்ளதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அல்லது தவறிழைத்தவர்கள் அரச பாதுகாப்பு படையினர் என்பதால், விசாரணைகளில் அரசியல் தலையீடு ஏற்பட்டு தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத காலாசாரம் நிலவுகிறது என்று இந்த உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாட்டில் பல இடங்களில் மனித புதை குழிகள் இருப்பது அறியப்பட்டாலும், குறைந்தது 20 புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவற்றை தோண்டி எடுத்து உண்மைகளை கண்டறிவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்றவை தொடர்பில் அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இலங்கை அரசு தீவிரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதினால், அனைத்து மனித புதை குழிகள் மற்றும் தோண்டியெடுக்கப்பட்ட உடல்கள் தொடர்பில் பன்னாட்டு பார்வையாளர்களை அனுமதிக்கவும், அவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு செயற்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2023, 14:32