தேடுதல்

உணவு பெற காத்திருக்கும் மக்கள் உணவு பெற காத்திருக்கும் மக்கள்  

உணவுக்காகப் போராடும் ஹைட்டி நாட்டு மக்கள்!

ஹைட்டி நாட்டில் ஏறக்குறைய 30 இலட்சம் குழந்தைகள் உட்பட 52 இலட்ச மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன : UNICEF நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

Haiti நாட்டில் 49 இலட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும் உணவுக்காகப் போராடுகின்றனர் என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட 1,15,000-க்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறது UNICEF நிறுவனம்.

ஹைட்டி நாட்டிற்கான UNICEF மற்றும் உலக உணவுத்திட்ட அமைப்பின் உச்சிமாநாடுகள் ஜூன் 21, இப்புதனுடன் நிறைவடைந்துள்ள வேளை இவ்வாறு கூறியுள்ள UNICEF நிறுவனம், பரவலான வன்முறை, கொடிய இயற்கைப் பேரழிவுகள், காலரா நோயின் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும்  குடும்பங்களுக்கு மிகப் பெரிய ஆதரவையும் கோரியுள்ளது.  

இதுகுறித்து கூறிய WFP நிர்வாக இயக்குனர் Cindy McCain, ஹைட்டியில் பசியின் நெருக்கடி கண்ணுக்குத் தெரியாமலும், கேட்கப்படாமலும், மற்றும் கவனிக்கப்படாமலும் இருக்கின்றது என்று கவலை தெரிவித்ததுடன் 49 இலட்சம் பேர் அந்நாட்டில் தினமும் உணவுக்காகப் போராடி வருகின்றனர் என்றும், பசியால் துயருறும் அம்மக்களை நாம் கைவிட்டுவிட முடியாது என்றும் உரைத்துள்ளார்.

மேலும் UNICEF நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell அவர்களும்  ஹைட்டியின் குழந்தைகளும் குடும்பங்களும் சமாளிக்க முடியாத சவால்களை எப்படிக் கடக்கிறார்கள், என்பதையும், ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள் என்பதையும் தான் நேரிடையாகப் பார்த்திருப்பதாகவும் கேட்டிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளதுடன், தேவையில் இருக்கும் அந்நாட்டினரை அனைத்துலகச் சமூகம் கைவிட்டுவிடக் கூடாது என்றும் விண்ணப்பித்துள்ளார்.

ஹைட்டி நாட்டில் நல அமைப்பின் பணிகள் அதிகம் பாதிப்புள்ளாகின்றன, ஆயுதமேந்திய குழுக்களால் பள்ளிகள் தாக்கப்படுகின்றன என்றும், பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களை இழக்கின்றனர் என்றும் கூறும் UNICEF நிறுவனம்,  நாட்டின் தலைநகரின் மிகவும் ஆபத்தான சுற்றுப்புறங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியூட்டும் அளவிற்குப் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2023, 14:07