தேடுதல்

Biparjoy புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட நகரம் Biparjoy புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட நகரம்   (ANSA)

பிபர்ஜாய் புயல்காற்றில் இருவர் உயிரிழப்பு

பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதால் புயல்கள் சக்தி வாய்ந்ததாக மாறி வருகின்றன என்று வானிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிபர்ஜாய் புயலினால் இந்திய மாநிலமான குஜராத் மற்றும் பாகிஸ்தானின் சிந்து பகுதிகளில் 1,80,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புப்பணி இயக்குநர் சி.சி. படேல் தெரிவித்துள்ளார்.

பெங்காலிய மொழியில் ‘‘பேரழிவு‘‘ எனப் பொருள்படும் பிபர்ஜாய் புயலானது மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால், பாவ்நகர் மாவட்டத்தில் இருவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆபத்தான மற்றும் மோசமான நிலை தற்போது குறைந்துவிட்ட போதிலும், தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக வானிலை  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏறக்குறைய 500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புயல் காற்றினால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கடற்கரையைச் சுற்றியுள்ள 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், மீட்புக் குழுவினர் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றி, கிராமங்களுக்குச் செல்லும் பாதையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

புயல் தாக்குவதற்கு முன்பு குஜராத்தில் இருந்து 1,00,000 க்கும் மேற்பட்ட மக்களும், பாகிஸ்தானில் இருந்து 82,000 பேரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடிந்தது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் காலநிலை மாற்ற அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் வடக்கு இந்தியப் பெருங்கடலின் கடற்கரையில் ஏற்படும் புயல்காற்று வழக்கமான கொடிய அச்சுறுத்தலாக உள்ளது.

பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதால் புயல்கள் சக்தி வாய்ந்ததாக மாறி வருகின்றன என்று வானிலை அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வுக் கழகத்தின் காலநிலை ஆய்வாளர் ராக்ஸி மேத்யூ கோல், சூறாவளிகள் சூடான நீரில் இருந்து ஆற்றலைப் பெறுகின்றன என்றும், அரபிக்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 1.2 முதல் 1.4 டிகிரி செல்சியஸ் (34 முதல் 35 டிகிரி பாரன்ஹீட்) அதிக வெப்பமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1998ஆம் ஆண்டு குஜராத் கடற்கரையில் ஏற்பட்ட சூறாவளியால் 4,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 2021 ஆம் ஆண்டில், இதே கடற்கரையில் பாதிப்பை ஏற்படுத்திய Tauktae சூறாவளியானது 150 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை இப்பேரழிவு ஏற்படுத்தியது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2023, 11:48