உலகளாவிய நெருக்கடியிலும் யூனிசெஃப் இன் இடைவிடாத பணி
மெரினா ராஜ் - வத்திக்கான்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமான சிறாருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலை, மற்றும் உலகளாவிய நெருக்கடிகளைச் சந்தித்த நிலையிலும் UNICEF தொடர்ந்து சிறப்புடன் பணியாற்றி வருகின்றது என்று கூறியுள்ளார் UNICEFன் உலகளாவிய விநியோக செயல்பாடுகளுக்கான இயக்குனர் Etleva Kadilli.
ஜூன் 7 புதன்கிழமை வெளியிடப்பட்ட UNICEFன் வருடாந்திர உதவி அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள இயக்குனர் Kadilli அவர்கள், உலகெங்கிலும் உள்ள வளரும் சிறாரின் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில், UNICEF தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 2022 ஆம் ஆண்டில் சாதனை புரிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
340 கோடி தடுப்பூசிகள், 210 கோடி நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், 3,81,00,000 நீண்டகால பூச்சிக்கொல்லி வலைகள், 1,62,000 கல்விக் கருவிகள் போன்றவற்றையும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு போன்றவற்றையும் வழங்கி வருகின்றது.
அரசு, பங்குதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து பணியாற்றும் யுனிசெஃப், மருத்துவம், தண்ணீர், நலவாழ்வு, கல்வி போன்ற சிறார் சார்ந்த அமைப்புகளை வலுப்படுத்தும் அதே வேளையில், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையானப் பொருட்கள் சென்றடைய அவசர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் Kadilli.
வளர்ந்து வரும் உலகளாவிய ஊட்டச்சத்து நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, 2021 மற்றும் 2022க்கு இடையில் ஊட்டச்சத்து உதவி வழங்கல்களில் 90 சதவீதம் அதிகரிப்பை அடைந்துள்ளதாகவும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
2022ஆம் ஆண்டில் 2,44,000 டன் உதவிப்பொருட்கள் 162 நாடுகளில் உள்ள பகுதிகளுக்கு யூனிசெஃப் அமைப்பால் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதையும் அவ்வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்