தேடுதல்

ஆப்கானிஸ்தான் சிறார் ஆப்கானிஸ்தான் சிறார்  (AFP or licensors)

நெருக்கடி நிலையில் ஆப்கானிஸ்தான் சிறார்

மனிதாபிமானப் பேரழிவுகள், காலநிலைப் பேரழிவுகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் சிறந்த வாழ்க்கைக்கான நம்பிக்கையை இழந்து வாழ்கின்றனர் ஆப்கானிஸ்தான் சிறார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆப்கானிஸ்தான் முழுவதும், ஏறக்குறைய 16 இலட்சம் சிறார் பசியுடன் எழுந்து பசியுடனே படுக்கைக்குச் செல்கிறார்கள் என்றும், சுத்தமான தண்ணீர் உணவு  தங்குமிடமின்றி, வீடு, தெரு, வயல்கள், சுரங்கங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யப் பழகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் தலைவர் ஃபிரான் ஈக்விசா.

மே 19 வெள்ளிக்கிழமை செய்தித்தொடர்பாளர் அலுவலகத்தின் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ள ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெஃப் தலைவர் ஃபிரான் ஈக்விசா அவர்கள், ஏறக்குறைய 1கோடியே 60 இலட்சம் சிறார்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றும் 90 விழுக்காடு ஆப்கானியர்கள் வறுமையின் விளிம்பில் உள்ளதால் சிறார் குடும்பத்தின் சுமையைத் தாங்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் முடிவில் 23 இலட்சம் சிறார் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வார்கள் என்றும் அவர்களில் 8,75,000 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

உலகில் துப்பாக்கியால் அதிகம் மாசுபட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று எனவும், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, 134 சிறார் வெடிபொருட்களால் ஊனமுற்றும் இறந்தும் போயுள்ளனர் என்றும் யுனிசெஃப் என்னும் பன்னாட்டு அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.

8,40,000 கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் அன்னையர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என்றும், ஏறக்குறைய 16 இலட்சம் சிறார் தொழிலாளர்களாகத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பின் தலைவர் ஈக்விசா தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு பயந்து வாழும் சிறார், குடும்பப் பொறுப்புகளின் சுமையால் கல்வி பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மனிதாபிமானப் பேரழிவுகள், காலநிலைப் பேரழிவுகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் சிறந்த வாழ்க்கைக்கான நம்பிக்கையை இழந்து வாழ்கின்றனர் என்றும் கூறியுள்ளார் ஈக்விசா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2023, 14:08