கால நிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் ஆப்ரிக்க சிறார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வறட்சி, காலநிலை நெருக்கடி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை காரணமாக ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் ஆபத்தில் உள்ளனர் என்றும், கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவில், 25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறட்சியால் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் UNICEF அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல்,
மே 8 திங்கள்கிழமை கிழக்கு கென்யாவிற்கு ஒரு களப்பணியை மேற்கொண்டு அதன் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள கேத்தரின் ரசல் அவர்கள், கடந்த 40 ஆண்டுகளில் இப்பகுதியைத் தாக்கிய மோசமான காலநிலையால் ஏற்பட்ட வறட்சியிலிருந்து மீளப் போராடும் குடும்பங்கள் மற்றும் குடிபெயர்ந்தோரையும் சந்தித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் குறைவான மற்றும் அதிகமான ஐந்து பருவ மழைகளால், பல குடும்பங்கள் தங்கள் கால்நடைகள், பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர் எனவும், 15 இலட்சத்திற்கும் அதிகமான சிறாரின் உயிர், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆபத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவில், 25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறட்சியால் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், சிறார் உணவின்றியும், பள்ளிப்படிப்பை விட்டுவிட்டும் துன்புறுவதால், குழந்தைத் தொழிலாளர், இளமையில் திருமணம், காலரா தொற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார் ரசல்.
வெள்ளத்தைத் தொடர்ந்து வறட்சியின் சுழற்சிகளால், குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் மீண்டு வருவதற்கு நேரம் மற்றும் பன்னாட்டு சமூக முயற்சி தேவைப்படும் என்று வலியுறுத்தியுள்ள ரசல் அவர்கள், இரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக, பல ஆண்டுகளாக நிலவும் மோதல், பாதுகாப்பின்மை, கோவிட்-19 இன் சமூக-பொருளாதார தாக்கம், உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றால் ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் வறட்சி தீவிரமடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
உள்ளூர் சந்தைகளில் சமையல் எண்ணெய், ரொட்டி, கோதுமை மாவு விலை போன்ற அடிப்படைப் பொருள்களின் விலை அதிகமாக உள்ளதால், பல குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை வாங்க முடியாது தவிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் ரசல்.
உதவி தேவைப்படும் இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு ஆதரவளிக்க யுனிசெஃப் அமைப்பு அரசாங்கங்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்டுவருகின்றது. 2022 ஆம் ஆண்டில் மட்டும், உயிர்காக்கும் சுகாதார சேவைகள் வழியாக ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியில் 2 இலட்சம் சிறார் மற்றும் பெண்கள் பலன் அடைந்துள்ளனர்; 30 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்கான உத்தரவாத சேவைகள், 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 13 இலட்சம் குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குணப்படுத்தியது, பள்ளிகள், உடல்நல மையங்கள், 46 இலட்சம் மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீரை வழங்கியது ஆகிய பணிகள் குறிப்பிடத்தக்கன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்