2022- இல் உலகளவில் 53 விழுக்காடு மரணதண்டனை அதிகரிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
2022-ஆம் ஆண்டில் 20 நாடுகளில் மொத்தம் 883 பேர் மரணதண்டனை வழி கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 53 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் Amnesty என்ற அனைத்துலக அமைப்புத் தெரிவித்துள்ளது.
வட கொரியா, வியட்நாம், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை இவ்வமைப்பு உறுதிப்படுத்தியுள்ளபோதிலும், நம்பகமான குறைந்தபட்ச புள்ளிவிவரங்களை வழங்க போதுமான தகவல்கள் இல்லை என்றும் கூறியுள்ளது.
பெறப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்ட நாடுகளில், ஈரான், சவூதி அரேபியா மற்றும் எகிப்து மட்டுமே 883 மரணதண்டனைகளில் 90 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இவ்வமைப்பு மேலும் தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்களை தூக்கிலிடுவதாகக் கருதப்படும் சீனா, இந்தப் புள்ளிவிபரங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கைக் கூறுகின்றது.
கடந்த ஆண்டு உலகளவில் அறியப்பட்ட மரணதண்டனைகளின் அதிகரிப்புக்கு ஈரான் மற்றும் சவுதி அரேபியா முக்கிய காரணமாகும் என்றும், ஈரான் 576 பேருக்கு மரணதண்டனை வழங்கியுள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ள இவ்வமைப்பு, இவ்வெண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு 314 ஆக இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
2018-ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் 2267-வது பத்தியின் புதிய திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி, "அரசால் விதிக்கப்பட்ட தண்டனைத் தடைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு புதிய புரிதல் உருவாகியுள்ளது," என்றும், எனவே "மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்