வாரம் ஓர் அலசல் – உலக தாய்மொழி நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தென்பொதிகையிலே பிறந்தவளாய், தென்பாண்டியிலே வளர்ந்தவளாய், தேனினும் இனியவளாய், தெவிட்டாத செந்தமிழாய், அமிழ்தினும் இனியவளாய், ஆண்டாண்டுகளாய் வாழ்பவளாய், அன்னை மடியை விஞ்சுபவளாய், அணைத்து நம்மை மகிழ்விப்பவளாய் தாயாய், தோழியாய், ஆசானாய், அனைத்துமாய் திகழும் தாய்மொழிக்கான நாள் இன்று. உலக தாய்மொழி நாளினைக் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் மொழிகளுக்கெல்லாம் தாயாய் தலைமையிடமாய் திகழும் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அதன் சிறப்பு, தேவை ஆகியவைப் பற்றி இன்று நமக்கு எடுத்துரைப்பவர் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி எழிலரசி. தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் தமிழ் துணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் அருள்சகோதரி எழிலரசி அவர்கள், சிறந்த சிந்தனையாளர் தமிழ் ஆர்வலர். பக்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு சைவசித்தாந்த தத்துவக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அரிதின் முயன்று சித்தாந்தம் கற்றவர். அதில் ஆய்வு மேற்கொண்டு தஞ்சை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வார, மாத இதழ்களில் தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை, சமய வரலாறு ஆன்மிகம் போன்றவற்றைக் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியும் படைத்தும் சிறப்புற்றவர். சிவஞானபோதம் புதிய விளக்கம், விவிலிய ஒளியில் சைவ சித்தாந்தம், என்பன இவரின் படைப்பில் வெளிவந்த புத்தகங்களாகும். இவரது சிறப்பு மிக்க தமிழ்ப்பணிக்காக AKS கல்வி நிறுவனம் 2021 ஆம் ஆண்டு “GLOBAL FACULTY AWARD” என்னும் விருதினை அளித்து சிறப்பித்தது.
உலக தாய்மொழி தினம்
“சிந்தனை என்னும் சிற்பத்தைச் செதுக்க தாய்மொழி என்னும் உளியால் மட்டுமே முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. "குவாரணி மொழி அழிந்து விட்டால் இந்த உலகம் அழியக் கூடாது என்று யார் இறைவனிடம் வேண்டுவார்கள்" என்ற குவாரணி பழமொழி ஒன்று உள்ளது. ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பால். அந்த குழந்தை முதலில் உணர்கின்ற மொழி தாய் மொழி. எனவே, தாய்ப்பாலைப்போல் தாய்மொழியும் நம் உயிர்ப்பானது என்கிறார் கவிஞர் அறிவு மதி. தாய்மொழி நம் உயிரோடு கலந்தது. உணர்வோடு இணைந்தது. கருவில் இருக்கும் போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை வளர்த்தெடுக்கும். தாய்மொழி என்பதும் ஒரு மொழிதானே என்று கடந்து போய்விட முடியாது. நம்முடைய பல ஆயிரம் ஆண்டு மரபு, பண்பாடு, கலாச்சாரத்தை நினைவு அடுக்குகளில் கடத்தி வருகிறது. "தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது" என்பார் ஈழத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி.
இன்று உலகில் ஏறக்குறைய 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. . இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். பல நூற்றாண்டு கால தொன்மை மரபுடையது நம் தமிழ் மொழி, இந்த மரபு உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டும்தான் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான திருக்குறளை பள்ளியில் கற்றுத் தருகின்றனர். திருக்குறளில் உள்ள சொற்கள் பல, நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றது. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம், என்கிறார் மணிவண்ணன் அவர்கள்.
யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் உலகெங்கிலும் பெரும்பான்மையானவர்கள் தம் தாய்மொழி அல்லாத பிற மொழிகளில் கற்பிக்கப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை என ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்கிற கருதுகோளை யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இன்றைய தொழில்நுட்பத்தில் யுனிகோட்-டில் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு இன்றைய தொழில்நுட்பம் பெரும் பயனாக இருக்கிறது. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தொலைநிலைக் கல்விக் கற்றல் முறைகள் இணைக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இன்றைக்கு உலகம் முழவதும் பேசப்படுகின்ற பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. ஆம் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் தாய் மொழியை அழித்தால் போதுமானது. இன்று நம் தமிழ் இனத்திற்கும் அத்தகைய ஆபத்து நெருங்குவதை உணர முடிகிறது. இன்று மக்களை எளிதில் சென்றடையக் கூடிய ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி பன்பலை நிகழ்ச்சிகள் கலப்பற்ற தூய்மையான மொழியில் இல்லை. பெரிதும் ஆங்கிலக் கலப்போடு தான் உள்ளது. அதனை அன்றாடம் பார்க்கும், கேட்கும் மக்களின் இயல்பான மொழியும் கலப்பட மொழியாகவே மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் தத்தம் தாய்மொழியிலும், வட நாட்டவர் பெரும்பாலும் இந்தியிலும் பேசும் போது தமிழருக்கு மட்டும் தூய தமிழில் பேசுவது அவமானம், பிற்போக்குத் தனம் என்ற தாழ்வு மனப்பான்மை ஊட்டப்பட்டுள்ளது. நம் தாய்மொழியோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசினால் மட்டுமே நாம் அறிவாளிகள். அதிலும் இந்தியைக் கலந்து பேசினால் இன்னும் அறிவாளிகள் என்று கருதும் மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பிறந்தது முதல் 5 வயது வரையிலும் வீட்டில் தாய் மொழியிலே பேசி, தான் பார்க்கும் பொருள்களை தாய் மொழியிலேயே கேட்டு வளரும் குழந்தை 5 வயதில் பள்ளிக்குச் சென்றவுடன், அனைத்தையும் ஆங்கிலத்தில் வேறொன்றாகக் கேட்டுத் திகைக்கிறது. தாய் மொழியைப் பற்றியும், தமிழ் இனத்தைப் பற்றியும் மேடைகளில் அதிகம் பேசிவரும் திரு. சீமான் அவர்கள் ‘ஆங்கிலம் என்பது அறிவு அன்று. எல்லா மொழிகளைப் போன்று அதுவும் ஒரு மொழி மட்டுமே’ என்று அடிக்கடி வலியுறுத்திக் கூறி வருவது பெரிதும் சிந்திக்கத்தக்கது. அது முற்றிலும் உண்மையும் கூட. ஒரு குழந்தை தன் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் கற்கும் திறனும், அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கிறது. ஆங்கிலத்தில் கற்கும் போது தாய்மொழியில் சிந்தித்து மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து கற்பதால் அதுவே பெரிய சுமையாகிறது. தாய் மொழியில் அடிப்படை அறிவைப் பெற்ற பிறகு எப்போது வேண்டுமானாலும், எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்:றுக் கொள்ளலாம். ஆனால் கல்வியறிவினைப் பெறும் ஊடகமாகத் தாய் மொழி மட்டுமே இருக்க வேண்டும். இந்த புரிதல் இல்லாமல் அன்றாடம் உழைத்து வாழும் சாமான்ய மக்கள் கூடத் தம் குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கிறோம் என்று நம்பி தங்கள் தகுதிக்கு மீறி, அதிகப் பணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கு அனுப்புவது பெரும் அறியாமையே. நம்முடைய கத்தோலிக்க துறவற சபைகளும், மற்ற கிறிஸ்தவ அமைப்:புகளும் தாய்மொழி வழிக் கல்விக் கூடங்களை, ஆங்கில வழி நிறுவனங்களை விட இன்னும் தரமானவைகளாக்கி, தரமான கல்வியை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்;கும் நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும். கல்வியைச் சேவையாக ஆற்றும் நம்மிடம் இன்று சாமான்ய மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இது தான். உலகெங்கிலும் உள்ள பல்வேறு மொழி பேசும் மக்களின் தாய் மொழியும் மதிக்கப்பட வேண்டும்.
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சித் துறை அதிகாரி பாலகிருஷ்ணன், அவர்கள் பின்வருமாறு தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். பழங்குடி மக்களின் மொழிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும், உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகின்றன. இந்த மொழி ஒற்றுமையையும், பன்மையத்தையும் புரிந்து கொள்வது அடிப்படையான தேவையாக இருக்கின்றது. இந்த நாகரிக புரிதல் தமிழர்களை பொறுத்தவரை பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புரிதல் இப்படிப்பட்ட அடிப்படையிலான பண்பில் இருந்துதான் வளர்ந்திருக்க முடியும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் "மொழி பெயர் தேயத்து புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உரையின் முட்டாச் சிறப்பின் பட்டினம்" என்ற வரிகள் வரும். இது ஒரு மிகச் சிறந்த பன்மையம் பற்றிய புரிதலுக்கான ஒரு அடையாளம் ஆகும். இந்த நாளில் நமது மொழியை நேசிக்கவும், பிற மொழி பேசும் மக்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள அனைவரும் உறுதியெடுக்க வேண்டும் என்றார். இந்தியாவின் அடையாளத்தை பன்முகத்தன்மையால்தான் வளர்த்தெடுக்க முடியுமே தவிர, ஒற்றை அடையாளத்தால் வளர்த்தெடுக்க முடியாது. இதைத்தான் உலகமும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் பாலகிருஷ்ணன் அவர்கள்.
தாய்மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்த வேண்டிய மொழியாகும். தாய்மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டிய பொறுப்பும் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவோம். நன்றி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்