துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
துருக்கியில் நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களைப் பேரழிவுப் பகுதிகளாக அறிவித்துள்ளார் அந்நாட்டின் அரசுத்தலைவர் Tayyip Erdogan.
அரசுத் தொலைக்காட்சியில் தான் வழங்கிய உரையில் இவ்வாறு கூறியுள்ள அரசுத்தலைவர் Erdogan அவர்கள், 70 நாடுகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவ முன்வந்துள்ளதாகவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அண்டலியாவில் உணவகங்களைத் திறக்க துருக்கி அரசுத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,000-க்கும் மேல் சென்றுவிட்டது என்றும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் காப்பாற்ற மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர் என்றும், செய்திகள் தெரிவிக்கின்றன.
450 கிமீ பரப்பளவில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தால் ஏறத்தாழ ஒரு கோடியே 35 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பேரழிவின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பலி எண்ணிக்கை 20,000க்கும் மேல் செல்லும் என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபை, நேட்டோ மற்றும் பிரித்தானியா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து உதவிகள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்