தேடுதல்

தேசிய பால்  நாள் தேசிய பால் நாள்  

வாரம் ஓர் அலசல் - தேசிய பால் நாள்

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை (Father of White Revolution in India) என்று அழைக்கப்படும் முனைவர் வர்கீஸ் குரியன் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தற்போது பால் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருவதற்குக் காரணமாக இருந்தவர்

மெரினா ராஜ்- வத்திக்கான்

இப்பூமிக் கோளத்தில் வாழ்கின்ற மனிதர்களுக்கு அமிழ்தம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அதற்குப் பதிலாக, பால் அமிழ்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்கின்றன வேதங்கள். அந்த அளவிற்கு பால் இன்றியமையாததாக விளங்குகின்றது. இந்தியாவின் பால் மனிதர் என்று போற்றப்படும் முனைவர் வர்கீஸ் குரியனின்  பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தேசிய பால் நாளானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையினரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை (Father of White Revolution in India) என்று அழைக்கப்படும் முனைவர் வர்கீஸ் குரியன் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தற்போது பால் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருவதற்குக் காரணமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமாகவும்  இருந்தவர்

வர்கீஸ் குரியன் வரலாறு

கேரளாவில் 1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பிறந்த வர்கீஸ் குரியன், சென்னை லொயோலாக் கல்லூரியில் 1940-ம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டமும் 1946-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பையும் முடித்தார். அதைத் தொடர்ந்து, அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மெக்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தில் படித்து, இயந்திரப் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தைப் பெற்றார். அமுல் என்ற வணிகப்பெயருடன் விற்கப்படும் உணவுப்பொருட்களை நிர்வகிக்கும் ஓர் உயர்நிலை கூட்டுறவு இயக்கமான குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். இந்த கூட்டுறவு அமைப்பின் வழியாக அமுல் (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) என்ற வணிகப்பெயருடன், பால் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாகவும் வெற்றிபெற வைத்தார்

கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன், இந்தியாவின் வெண்மை புரட்சியை (White Revolution) வழி நடத்தி உலகிலேயேக் கூடுதலாகப் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார். பால் வளத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்திய அரசு பல விருதுகளை வழங்கி அவரை கௌரவித்தது. 1965 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 1966 ஆம் ஆண்டு பத்மபூஷன், 1986 ஆம் ஆண்டு கிருஷி ரத்னா, 1989ல் உலக உணவு விருது, 1999ல் பத்மவிபூஷன் போன்ற  விருதுகளைப் பெற்ற இவர் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தனது 90வது வயதில் மறைந்தார். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மிகவும் வித்தியாசமாக இருந்த இந்தியாவின் பால் வளர்ச்சியை, வர்கீஸ் குரியன் இந்தியாவின் வெள்ளை புரட்சியில் பணியாற்றத் தொடங்கிய பின்னர் இந்தியாவை மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக மாற்றியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

ஊட்டச்சத்து நிறைந்த பால்
ஊட்டச்சத்து நிறைந்த பால்

இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லாருக்கு‌ம் ஏ‌ற்ற உணவாக பா‌ல் உ‌ள்ளது. தா‌ய்‌ப்பால், பசு‌ம்பா‌ல், எரு‌மை‌ப்பா‌ல், ஆ‌ட்டு‌ப்பா‌ல் என  வகைப்படுத்தப்படும் பாலில்  ஒ‌வ்வொரு குண‌ம் உ‌ள்ளது. தா‌ய்‌ப்பா‌ல் எ‌ன்பது ஒ‌வ்வொரு குழ‌ந்தை‌க்கு‌ம், தா‌யிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் முதன்மையான ம‌ற்று‌ம் ஈடு இணைய‌ற்ற உணவாகு‌ம். பசு‌ம்பா‌ல் எ‌ன்பது இயல்பாகவே இனிப்பானது, உடலு‌க்கு குளிர்ச்சி தருவது.  எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாகாது. எருமை‌ப் பா‌ல் அ‌திக‌க் கொழு‌ப்பு ‌நிறை‌ந்தது. பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். எளிதில் செரிமானமாகத இப்பாலை செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஆ‌ட்டு‌ப் பா‌‌லி‌ல் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ‌‌நிறைய ச‌த்து‌க்க‌ள் உ‌ள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது. முழு உணவான பால் கிடைக்காமல் உலகில் சராசரியாக 100 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலகில் உள்ள விலங்குகள், மனித இனங்கள் எல்லாம் பிறந்தவுடன் முதலில் எடுத்துக்கொள்ளும் உணவு என்றால் அது பால் தான். உலகத்தில் உள்ள பஞ்சத்தையும் பசியையும் போக்க அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் கையில் எடுக்கும் முதல் ஆயுதமும் பால் தான். அந்த பாலின் பண்புகளையும் உற்பத்தியையும் பெருக்க உருவாக்கப்பட்டதே பால் நாள்.

உலக பால்  நாள்:

உரோமை நகரைத் தலையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனமான ‘உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு’ (FAO). 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு ஆடம்பரப் பொருளாகவே நிலவி வந்த பாலை உலகளாவிய உணவாக மாற்றவும், பாலின் உற்பத்தியைப் பெருக்கவும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிகளை உருவாக்கவும் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியை உலக பால் நாளாக அறிவித்தது. பால் பண்ணை விவசாயிகளை பாராட்டவும் போற்றிப் புகழவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்நாள் சிறப்பான விதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மனித இனம், நாகரிகம் அடையும்போதே அதனுடன் வளர்ந்தது இந்த பால் பழக்கம். பசு மட்டுமின்றி ஆடு, கழுதை, ஒட்டகம் என்று பல விலங்குகளின் பாலை உட்கொள்ள மனிதர்கள் கற்றுக்கொண்டனர். ஆனால் பெரும்பாலும் மாட்டின் பால் தான் உலக அரங்கில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. பால் அதே உருவில் மட்டுமின்றி, தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், பால் பொருட்கள் என்று பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் டி உள்ளிட்ட பல சத்துகளைக் கொண்டுள்ள பால் தனித்த முழு உணவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பால் ஏற்றுமதி நாடு:

இந்தியாவில் 1960 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் பால் தட்டுப்பாட்டின் போது கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் குரியன் ஏற்படுத்திய பால் புரட்சியால் 60 ஆண்டுகளில் இந்தியா பால்வளத்தில் தன்னிறைவு அடைந்ததோடு உலகின் மிகப்பெரும் பால் ஏற்றுமதி நாடாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உற்பத்தி மற்றும் நாளொன்றுக்கு 300 கிராமுக்கு மேல் தனிநபர்க்கு பால் கிடைப்பதன் வழியாக உலகில் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்திய நாடு மாறியுள்ளது. இந்தியாவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பால் நாளில் பால் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உலகளாவிய உணவாக அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றது.

தேசியப் பொருளாதார மதிப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதில் கவனம் செலுத்துவதன் நோக்கம் ஆகியவற்றை உணர்த்த இந்நாளில்  மாரத்தான் ஓட்டம், பால்பண்ணைப் பார்வையிடல், பள்ளி சார்ந்த நடவடிக்கைகள், கச்சேரிகள், நிகழ்ச்சிகள், மாநாடுகள் , கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய பகுதியாகத் திகழும் பால் மற்றும் பால் பொருட்களின் பல்வேறு சிறப்பியல்புகளைப் பற்றிக் கலந்துரையாட, விவாதிக்க இந்த தேசிய பால் நாள் வாய்ப்பளிக்கிறது. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்தானது பசுவின் உடலில் மாற்றம் பெற்று, பாலாக மாறிவருகின்றது.

மாட்டுப் பண்ணையில் மாடுகள்
மாட்டுப் பண்ணையில் மாடுகள்

காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் காலை உணவு சாப்பிட வேண்டும். இருமலோ, தொண்டையில் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம். பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் புளிப்பான உணவுப் பொருட்களை உண்ட பின், உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்.

பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள்.  சில த‌னியா‌ர் பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பா‌லி‌‌ல் ப‌ல்வேறு ரசாயன‌ங்களையு‌ம் கல‌ந்து ‌வி‌ற்பனை செ‌ய்‌கி‌ன்றன. ந‌ல்ல தரமான பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் பொரு‌ட்களை ம‌ட்டு‌ம் வா‌ங்கி உடல் நலனைக் காப்போம். பாலின்றி அடிப்படை உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அவைகள் கிடைக்கப்பெற செபிப்போம். பாலின் மேன்மையை உணர்ந்து அதனைப் பிறருக்கும் அறிவிப்போம். அனைவருக்கும் இனிய தேசிய பால் நாள் வாழ்த்துக்கள். அன்னை மரியாளை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்ததை திருஅவை சிறப்பிக்கும் இந்நாளில் அர்ப்பண மன நிலையுடன் தங்களது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்த அனைவருக்கும் காணிக்கை அன்னை திருவிழா நல்வாழ்த்துக்கள். (இணையதள உதவி )

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2022, 13:09