தேடுதல்

மனிதர் சுவாசிக்கும் காற்று மனிதர் சுவாசிக்கும் காற்று  

இனியது இயற்கை: காற்று பற்றிய சில விவரங்கள்

நாம் உட்கொள்ளும் காற்றின் அளவு, உட்கொள்ளும் உணவைவிட 12 மடங்கும், நீரைவிட ஆறு மடங்கும் அதிகமானதாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

நாம் வாழும் பூமி, நிலம், நீர், காற்று போன்றவற்றால் உருவானது. இறைவனின் இயற்கைப் படைப்புகளில் அற்புதமான படைப்பு காற்று. உயிரினங்கள் அனைத்துமே உயிர் வாழ இது மிகவும் அவசியம். ஒரு மனிதர் ஒரு நாளைக்கு சராசரியாக 26 ஆயிரம் முறை மூச்சுக்களை இழுக்கிறார். அவருக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் பிராண வாயு 14 கிலோ கிராம்களாகும். மனிதர் உணவில்லாமல் ஐந்து வாரமும், நீரில்லாமல் ஐந்து நாள்களும் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் ஐந்து நிமிடம் மட்டும்தான் உயிர் வாழ முடியும். சுத்தமான காற்றில் 78.09 விழுக்காடு நைட்ரஜனும், 20.94 விழுக்காடு ஆக்சிஜனும் இருக்கின்றன. கரியமில வாயுவின் அளவு 0.03 விழுக்காடு ஆகும். மற்ற வாயுக்களான ஆர்கான், நியான், கிரிப்டான், செனான், ரேடான், ஹீலியம், மீத்தேன் போன்றவை மிகக் குறைவாகவே உள்ளன. காற்றிலுள்ள நைட்ரஜன், நிலத்திலுள்ள நுண் உயிரிகளால் நிலைநிறுத்தப்பட்ட நைட்ரேட்டு போன்ற, நைட்ரஜன் கூட்டுப்பொருளாக மாற்றப்பட்டு மண்ணிற்கு வளம் சேர்க்கிறது. நாம் உட்கொள்ளும் பொருள்களில் எண்பது விழுக்காட்டில் காற்று உள்ளது. நாம் உட்கொள்ளும் காற்றின் அளவு, உட்கொள்ளும்   உணவைவிட 12 மடங்கும், நீரைவிட ஆறு மடங்கும் அதிகமானதாகும். பூமியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை காற்று பரவியிருக்கிறது. வானில் இருக்கும் காற்றின் மொத்த எடை5,500 மில்லியன் டன்கள். எனவே காற்றானது, நாம் உண்ணும் உணவு மற்றும், பருகும் நீரைவிட தூய்மையானதாக இருக்கவேண்டும்.   

உலக நலவாழ்வு நிறுவனம் 22 ஆசிய நகரங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, ஆசியாவில் மட்டும் காற்று மாசினால் ஆண்டொன்றுக்கு ஆறு இலட்சம் பேர் குறைந்த வயதிலேயே இறக்கின்றனர். மும்பையில் மட்டும் ஆண்டொன்றுக்கு, 2,800 பேர் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். சில மில்லியன் பேர் மூச்சுக்குழல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்பது, காற்று மாசடையாமல் இருப்பதில் கவனம் செலுத்த நமக்கு அழைப்புவிடுக்கிறது. (நன்றி: அருள்பணி முனைவர் ச.மி. ஜான் கென்னடி சே.ச.)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2022, 14:01