தேடுதல்

அமைதியின் சின்னமான புறா அமைதியின் சின்னமான புறா 

வாரம் ஓர் அலசல்: உலக அமைதி நாள்

அமைதியை உலகம் முழுவதும் பரவச்செய்து, போர் இல்லாத அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலக அமைதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது

 மெரினா ராஜ் - வத்திக்கான்

“உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” என்றார் வள்ளுவர். யாருக்கும் தீங்கு செய்து விடக் கூடாது என்று நினைத்தாலே அமைதி என்பது உள்ளத்திலும் உலகிலும் நிறைந்துவிடும். அமைதி என்பது எல்லா படைப்புக்களாலும் விரும்பப்படுவது. ஐந்தறிவோ ஆறறிவோ அத்தனை பேரும் விரும்புவது அமைதியையே. இத்தகைய அமைதியை உலகம் முழுவதும் பரவச்செய்து, போர் இல்லாத அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலக அமைதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது.

நாட்டின் எல்லைகள்  மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் போன்றவற்றால்,  நாட்டின் பகுதி முழுவதும் பதற்றமான நெருக்கடியான  சூழல் நிலவுவதை தடுக்கவும், மனித சமூகம் அமைதியான முறையில் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ஐக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்நாள் தொடக்கத்தில் 1981 ஆம் ஆண்டில் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையில்  கொண்டாடப்பட்டு வந்து, அதன்பின்னர் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது..

உலக அமைதி நாள் முதன்முதலாக 1981ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர், 2001 ஆம் ஆண்டு போர் நிறுத்த நாளாகவும் மாற்றியமைக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையேயும்  உள்நாடுகளிலும்  அமைதியை நிலைநிறுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்நாளுக்கு ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பு நாடுகள், தங்களது பேராதரவை அளித்தன. 2021 ஆம் ஆண்டு இந்நாளின் நோக்கமாக, “சமமான மற்றும் நீடித்த வளர்ச்சியை பெற உலகம் மீளட்டும்” என்ற மையக்கருத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தொற்று நோயின் பரவலினாலும், உலகப் பொருளாதார வீழ்ச்சியினாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்ற நிலைமையில் இதிலிருந்து மீண்டு உலக நாடுகள் சமமான மற்றும் நீடித்த வளர்ச்சியை அடையும் வகையில், சிந்திக்குமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

தாழ்த்தப்பட்ட, சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் குழுக்கள் இச்சூழலினால் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்திருப்பதாகவும், இப்பாதிப்பு உலகெங்கும் சமத்துவமின்மையை ஏற்படுத்தி இருப்பதாக அந்தந்த நாடுகள் பெற்றுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கையை கூறி இந்நாள் குறித்த அறிக்கையை  ஐ நா வெளியிட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 2021 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கும் 68 கோடியே 70 இலட்சத்திற்கும் அதிமான தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தாலும், 100க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது வரை முதல் தடுப்பூசியைக்கூட பெறவில்லை எனவும், வளர்ந்த நாடுகளுக்கும், பின்தங்கிய நாடுகளுக்கும் இருக்கும் இடைவெளிக்கு இதுவே தக்க சான்று எனவும் தெரிவித்துள்ளது. போர்ச்சூழலில் சிக்கியவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கூட கிடைக்கவில்லை என கவலை தெரிவித்து, இப்படிப்பட்ட சூழலில் தான் நாட்டின் அமைதி பாதிக்கப்படுவதற்கான சூழல்கள் தொடங்குவதாகவும் கவலை தெரிவித்துள்ளது.

வறுமைச் சூழலில் இருக்கும் நாடுகளுக்கு சுகாதார வசதிகள் சரியாக கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக ஐ.நா கூறியுள்ளது. இயற்கையுடன் சமாதானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஐ.நா, காலநிலை மாற்றத்தை தடுக்கவும், பசுமை நிலையை மேம்படுத்தவும் உலகளவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும்  நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

உலக நாடுகளுக்கிடையே அமைதி
உலக நாடுகளுக்கிடையே அமைதி

மன அமைதி

ஆசையின் காரணமாக மனிதர்கள் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கிறார்கள் . எது வேண்டுமென்று தங்களை வருத்திக் கொண்டார்களோ, அது கிடைத்தவுடன் தங்கள் வருத்தத்தை போக்க, வருந்தி சேர்த்து வைத்ததை மன அமைதி இன்றி செலவு செய்கிறார்கள். மன அமைதி என்பது தவத்தினாலும் தியானத்தினாலும் கிடைக்கப்படுவது. அத்தகைய தவமும் தியானமும்  நிறைந்தது நம் இந்தியா. இதனையே மகாகவி பாரதியாரும் “மோனத்திலே அன்னதானத்திலே சிறந்தநாடு” என பாடியுள்ளார்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு “முன்பே உலக அமைதிக்கு விதை ஊன்றிய  கணியன் பூங்குன்றனார் எனும் தமிழ் புலவன் பிறந்த நாடும், “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” என்று உயிர் நேசிப்பினால் மலரும் உன்னத உலகுக்கு வழி காட்டிய  தாயுமானவர் பிறந்த நாடும் நம் நாடு.

அமைதி என்பது தோன்ற வேண்டுமெனில் போர், பகைமை, வன்முறை, ஆதிக்கம், பேராசை முதலியன விலக வேண்டும். பாதுகாப்பின்மை, சமூக நீதியின்மை, பொருளாதாரஏற்றத்தாழ்வு முதலியன போட்டியையும், பொறாமையையும் ஏற்படுத்துகின்றன. மகாத்மா காந்தி “ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் சமூகநீதி இல்லாமல் இருக்கும் வரை அங்கே அமைதி இருப்பதாக கூற முடியாது” என்கிறார். எனவேதான் அவர் சமதர்மத்தையும், அகிம்சையையும், சத்தியத்தையும் போதித்தார். உலகில் பலவகையான மோதல்கள் நிகழ்கின்றன. தனிமனிதன் தனக்குள்ளேயே சில மோதல்களை உணருகிறான். அது வெளியிலும் நீள்கிறது. குடும்பத்தோடு பக்கத்து வீட்டோடு நிகழும் மோதல்களே சமூகங்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும் மதங்களுக்கு நடுவிலும் நிகழ்கின்றன. உலக மயமாக்கல், நவீனமயமாக்கல், கைக்குள் உலகம் என்று பல அறிவியல் கொள்கைகள், மனிதர்களை இணைத்திருந்தாலும் இதய அளவில் அவர்கள் தனித்தனியே வாழ்வதை அறிய முடிகிறது. இதற்கு காரணம் திறந்த  மனம் பரந்துபட்ட மனம் இல்லாமையே.

உலகின் எல்லாவித முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது அமைதியும் உடன்பிறந்த உறவுடன் வாழ்வதுமே. 2-ம் உலகப் போருக்குப் பின்  பின் உலக அமைதிக்காக  1945ல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு  உலக நாடுகளிடையே பூசல்களை தடுக்க உயரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் போரும், பயங்கரவாதமும், வன்முறையும் உலக மக்களை ஒவ்வொரு நாளும் பயமுறுத்திக் கொண்டுய் தான் இருக்கின்றன. “மனித உள்ளங்களில்தான் போர்  முதன் முதலில் தோன்றுகின்றது எனவே, மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெற வேண்டும்” என்கிறது யுனெஸ்கொ அமைப்பு. உலக நாடுகள் மக்களின்  பாதுகாப்பு என்கின்ற போர்வையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து ராணுவ பலத்தை பெருக்குவதால் உலக அளவில் பயம் அதிகரித்து வருகின்றது. உலக அமைதி என்பது பண்பாடும் அரசியல், சமூக, பொருளாதார, சூழல்களில் ஆழமாக  வேரூன்றிய வேரூன்றப்பட வேண்டிய  ஒன்றாகும். இந்திய திருநாடு இக்கொள்கையில் நின்று தன் அமைதியை நிலைநாட்டி, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மந்திரச் சொல்லை தன்  ஒற்றுமையின் பலமாகப் பஏற்றுள்ளது. 1956ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் ஆயுத குறைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியாவாகும். ‘எந்த நாடும் மற்ற நாடுகளை தாக்கக்கூடாது, பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடக்கூடாது, பிற நாடுகளுடன் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடாக திகழ வேண்டும், பிற நாடுகளின் இறையாண்மையைப் போற்ற வேண்டும், சகோதரத்துவ முறையில் இணங்கி இருக்க வேண்டும் என்னும் கொள்கைகளை கடைபிடித்து வருவதால் இந்தியா அமைதியின் தேசமாக நட்பின் நல்லுறவையும் பெற்று வருகிறது’.

இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி வணிகம் தழைத்து தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழில் நுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு உலக மயமாதல் என்று அழைக்கப்படுகிறது. சமச்சீர் முறையில் கல்வி, அதிகாரம் பரவலாக்கல் அமைதி வழியைப் பின்பற்றல், ஊடகங்கள் வழியாக  ஒற்றுமையை உணர வைத்தல், அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல்,  பொருளாதார அறம் காத்தல், சமய இன மொழி நாடு வேறுபாடுகளைக் களைதல், நடுவுநிலைமையோடு நடத்தல், ஆதிக்கம் செலுத்தாமை, அன்பைப் போதித்தல், உடன்பிறந்த உறவுடன் வாழ்தல்,மாண்பைப் போற்றல், எதிர்மறை உணர்வுகளை நீக்குதல், மேலும்  நல்லுறவு, ஒத்துழைப்பு, ஒற்றுமை, மன்னித்தல், மனித நேயம், பொறுப்புணர்வு போன்ற குண நலன்களும்  நம்மிடத்தில் அமைதியை வளர்க்கும். இவை அனைத்தும் நம் உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாகும்.

மன அமைதிக்கு வழிகாட்டும் தியானம்
மன அமைதிக்கு வழிகாட்டும் தியானம்

தனிமனித அமைதி ஏற்பட்டாலே சமூக அமைதியும், உலக அமைதியும் எளிதாகும்.  தனி மனித அமைதி உருவாக குழப்பமில்லாத அமைதியான மனம் தேவை. குழப்பமில்லாச் சூழல் கொண்ட மனிதர் எவருமில்லை. குழப்பங்களும் சிக்கல்களும் பிரச்சனைகளும் எல்லாருக்கும் உண்டு இதைக் கடந்து முன்னேறிச் செல்வதே முதன்மையான குணம்.  துறவி ஒருவர் தன் சீடர்களோடு ஒரு மரத்தடியில் தியானம் செய்து கொண்டும் போதித்துக் கொண்டும் இருந்தார்.  குழப்பமில்லா மனமே இறைவனை அடையும் உன்னத வழி என்று சொல்ல சீடர் ஒருவர் குழப்பமில்லா மனதை அடைய என்ன வழி என்றுக் கேட்டார். அவரிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து அருகில் உள்ள ஏரியில் நீர் எடுத்து வரச் சொன்னார் துறவி. ஏரியை அப்போது தான் ஒரு மாட்டு வண்டிக் கடந்து கொண்டிருந்ததால் நீர் சேரும் சக்தியுமாக காணப்பட்டது . சீடர் சற்று நேரம் பொறுமையாக காத்திருந்து நீர் தெளிந்ததும் அதனை பாத்திரத்தில் நிரப்பி துறவியிடம் கொண்டு வந்தார். நீர் கொண்டு வர ஏன் தாமதமாயிற்று என்று துறவி கேட்க, மாட்டு வண்டியினால்  நீர் கலங்கியதையும் அதனால், நீர் தெளியும் வரை காத்திருந்ததாகவும் சீடர் அறிவித்தார். துறவி, நீர் தெளிய நீ என்ன செய்தாய்? என்று கேட்க அதற்கு சீடர், நான் ஒன்றும் செய்யவில்லை அதை அப்படியே விட்டுவிட்டேன் பொறுமையாக காத்திருந்தேன் என்றார். துறவி சீடரின் முகத்தைக் கனிவுடன் பார்த்து உனது கேள்விக்கான பதிலை நீயே சொல்லிவிட்டாய் குழப்பமில்லா மனம் பெற பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் மனம் குழம்பினால் அதை தெளிவடைய செய்ய எதுவும் செய்யத் தேவையில்லை அதை அப்படியே விட்டு விட்டால் போதுமானது.

ஆம் குழம்பிய மனம் போர்களின் ஆரம்பம். அமைதியான மனம் ஆற்றல்களின் புதையல்.

ஆயிரம் துன்பத்திற்கு நடுவே இறைவனை மனதார நினைத்து ‘நிச்சயம் ஒருநாள் விடியும்’ என்று விடா முயற்சியுடன் நாள்தோறும் உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது அமைதி. எத்தனையோ தொல்லைகள் எவர் தந்தாலும் எனக்கு நேரும் மான அவமானங்களைவிட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என குறிக்கோளோடு வாழ்பவர்களின் மனதிலே மலர்வது அமைதி. பிரச்சனைகள் பல படையெடுத்து வந்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்று உற்சாகத்தோடு இருப்பவர்களிடம் உள்ளது அமைதி. வேற்றுமை பாராது அருகில் வாழும் சக மனிதர்களை அன்போடு உடன் பிறந்த உணர்வோடு பழகும் போது உருவாகும் அமைதி. இத்தகைய அமைதியை நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெற்று வாழ்வோம்  உலக அமைதி நாளினைக் கொண்டாடும் வேளையில் நாட்டின் அமைதிக்காக போராடும் ஒவ்வொருவரையும் நினைவுகூர்வோம். நம்முடைய சிறுசிறு செயல்கள் மூலமாக அமைதியை நம் இதயத்திலும் இல்லத்திலும் பரப்புவோம் அனைவருக்கும் இனிய உலக அமைதி நாள் நல்வாழ்த்துக்கள். (இணையதள உதவி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2022, 14:11