தேடுதல்

இளையோர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் இளையோர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் 

சிறந்ததோர் உலகை அமைக்க அனைத்து வயதினரின் சக்திகள்....

இளையோர், பொது, மற்றும், அரசியல் வாழ்வில் பங்குகொள்வதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டும். பாலின சமத்துவத்துக்கு ஆதரவு அவசியம் – ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான்

சிறந்ததோர் உலகை அமைக்க, அனைத்து வயதினரும் தங்களின் ஆற்றல்களோடு இணைந்து செயல்படவேண்டியது இன்றியமையாதது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியன்று “தலைமுறைகளுக்கு இடையே ஒருமைப்பாடு: அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உலகை உருவாக்குதல்” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்ட ஐ.நா.வின் உலக இளையோர் நாளுக்கென்று வெளியிட்டிருந்த செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், கூட்டேரஸ்.

சிறந்ததோர் உலகை அமைப்பதற்கு, இளையோர், வயதுமுதிர்ந்தோர் என அனைத்து வயதினரின் சக்திகள் ஒன்றுசேர்ந்து செயல்படவேண்டும் என்ற உண்மையை, இந்த உலக நாள் தலைப்பு நமக்கு நினைவுபடுத்துகின்றது எனவும் கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வுலகம், நம் அனைவரின் வருங்காலம் குறித்த அச்சுறுத்தல்களை முன்வைத்துள்ளவேளை, இவ்விரு வயதினருக்கு இடையே இருக்கவேண்டிய ஒத்துழைப்பும் ஒருமைப்பாடும் எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்றும், அவர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், இவ்விரு வயதினருக்கும் இடையே இன்றியமையாத ஒத்துழைப்பு இடம்பெறுவதற்கு, பலநேரங்களில் தன்னலப் போக்கு, பாகுபாடு, ஒருதலைச்சார்பு ஆகியவை தடைகளாக உள்ளன என்றுரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், இளையோர் வாழ்வு குறித்து எடுக்கப்படும் தீர்மானங்களில் அவர்கள் ஒதுக்கப்படும்போதும், முதியோர் தங்களின் குரல்கள் புறக்கணிக்கப்படும்போதும் நமக்கு இழப்பு ஏற்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இளையோர், பொது, மற்றும், அரசியல் வாழ்வில் பங்குகொள்வதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டும் என்றுரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், பாலின சமத்துவத்துக்கு ஆதரவாகவும் தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2022, 14:46