தேடுதல்

போலந்து நாட்டின் இளையோர் போலந்து நாட்டின் இளையோர்   (ANSA)

வாரம் ஓர் அலசல்- உலக இளையோர் நாள்

ஒரு நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து தங்கமோ வைரமோ அல்ல, அந்த நாட்டின் இளைஞர்களே. உலகில் முன்னேற்றமடைந்துள்ள அத்தனை நாடுகளும் அந்நாட்டின் இளைஞர் சக்தியால்தான் முன்னேற்றம் கண்டுள்ளன.

மெரினா ராஜ்) வத்திக்கான்

ஒரு நாட்டின் எதிர்காலமே இளையோர் கையில் தான் உள்ளது. இளையோரின் வளர்ச்சிக்கு ஏற்பவே, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளையோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. இத்தகைய வலிமை படைத்த இளையோரை, ஒவ்வோர் அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் நோக்கத்திலேயே இந்த உலக இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது.

திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு திருஅவை சிறப்பித்த மீட்பின் யூபிலி ஆண்டில் இளையோர்களின் பங்கேற்பைக் கண்டு அவர்களுக்கான ஒரு நாள் சிறப்பிக்கப்படவேண்டும் என்று உள்ளுணர்வு பெற்றார். 1985 ஆம் ஆண்டு ஐ.நா சபையும் அனைத்துலக இளையோர் ஆண்டைக் கொண்டாட முடிவுசெய்தபோது, திருத்தந்தையும் அதே ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி உலக இளையோர் நாளை உருவாக்குவதாக அறிவித்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் செய்தவைகளில் மிக முக்கியமானவற்றுள் ஒன்றாகக் கருதப்படும்  இந்த உலக இளையோர் நாள் 1986 ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. அதன் விளைவாக, ஒவ்வோர் ஆண்டும் மறைமாவட்ட அளவிலும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளவில் ஒருவார நிகழ்வாக வெவ்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பன்னாட்டு நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளையோர் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்து கலந்து கொள்கின்றனர். இளையோருக்கான கத்தோலிக்கத் திருஅவையின் நிகழ்வான உலக இளையோர் நாளில் கத்தோலிக்க இளையோர் மட்டுமன்றி அனைத்துலக இளையோரும் இன, மத பேதமின்றி பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஓசியானியா முதலிய இடங்களில் உள்ள இளையோரை திருப்பயணிகளாக வர திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.  இளையோர்கள் தங்கள் வாழ்வின் அழைத்தலை உணர என்ற மையக்கருத்தினை வலியுறுத்தி முதல் உலக இளையோர் நாளை சிறப்பிக்க, (To the Youth of the World) அழைப்புவிடுத்தார்.

ஆகஸ்ட் 12ம் தேதி அனைத்துலக அளவில் இந்நாளினைக் கொண்டாட ஐ.நா. அழைப்புவிடுத்தாலும் ஒவ்வொரு நாடும் தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து இந்நாளினைக் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் விவேகானந்தரின் பிறந்த நாளை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளையோர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் இளைஞர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரசு மற்றும், அரசு சார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையினால் இந்நாள் இளையோருக்கான சிறப்பு நாளாக அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐ.நா., அறிக்கையின்படி, 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ளனர் எனவும், அதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளதாகவும் அறிகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை இளையோர்க்கு அந்தந்த நாடு சரியான விதத்தில் ஏற்படுத்தி தருவதன் வழியாக, அவரவர் குடும்பத்தை முன்னேற்ற வேண்டிய பொறுப்பை உணர்ந்து இளையோர் செயல்பட நாம் உதவலாம் என்றும் ஐ நா வலியுறுத்துகின்றது. “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்" என்று சுவாமி விவேகானந்தர் கூறியது இளைஞர்களின் காணப்படும் சிறப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று போன்றவற்றை சுட்டிக் காட்டுகின்றது.

உலகின் எல்லா நாடுகளிலும் இளையோர் தம் திறமையை வெளிப்படுத்தி அந்தந்த  நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ள அவர்கள், உடல் ஆற்றலுடன் அறிவாற்றலிலும் சிறந்து விளங்குகின்றார்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து, சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்களும் நம் இளைஞர்கள்தாம். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும்,  தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள் இளைஞர்கள். இத்தகைய இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமைத்துடிப்பு,  சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பண உணார்வு, ஞானம் ஆகியவை கொண்ட விவேகானந்தர்களை வழிகாட்டியாகக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் அதிக தேவையாகிறது.

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்க, அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி அழைத்து, கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சாக்ரடீஸ் அவனிடம், “நீ நீருக்குள் இருந்தபோது நீ எதை அதிகம் விரும்பினாய்?" என்று கேட்டார். அந்த இளைஞன், “காற்று" என்று பதிலளித்தான். சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான். நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிடைக்கும் என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வோர் இளைஞனும் தன்னம்பிக்கையுடன் வெற்றியை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையுடன் தனது பணியினை செய்யக் கடமைப்பட்டுள்ளான். இன்றைய இளையோர் ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதுமாகவே அவர்களைப் போலவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் இவ்வாறுக் கூறுகிறார். 'ஒரு விதையை நிலத்தில் போட்டு, அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே பெரிய மரமாகிறது". அது போல, 'கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாதது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது" என்று எதுவுமேயில்லை. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, ever, ever give up" என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள். “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி" என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம். ஒரு நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து தங்கமோ வைரமோ அல்ல, அந்த நாட்டின் இளைஞர்களே என்பதே நமது நம்பிக்கை. உலகில் முன்னேற்றமடைந்துள்ள அனைத்து நாடுகளும் அந்த நாட்டின் இளைஞர் சக்தியால்தான் முன்னேற்றம் கண்டுள்ளன. இளைஞர்களின் சக்தியும் துணிச்சலுமே அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இளைஞர்களின் பலம் அதிகரிக்கும்போது நாட்டின் முன்னேற்றமும் வேகமடைகிறது.

எனவே சோர்ந்து நிற்கும் அன்பு இளைய சமுதாயமே, உங்களையொத்த வயதுடையவர்கள் போல உங்களாலும் சாதனைகள் படைக்க முடியும். உங்களிடம் அசாதாரணத் திறமைகள் உள்ளன. வாய்ப்புக்களுக்காகக் காத்திராமல் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். மதுவிலும் போதைப்பொருளிலும் முகநூல், அலைபேசி போன்றவைகளிலும் இளமைப்பருவத்தைத் தொலைத்து விடாது விழிப்பாக இருங்கள்.  ஓடும் நதி  சிறிய ஓடையில் துவங்குகிறது, பெரிய மழை ஒரு தூறலில் தான் துவங்குகிறது, என்ற கவிஞர் யாழ்நிலவன் கவிதை வரிகளைப் போல,

  • இளைஞனே, உன்னால் முடியும். முடிந்ததை நினைத்து வருந்தி வருந்தி முடங்கி வாழாதே
  • நடக்கப்போவதை சிந்தித்து நாளைய சரித்திரத்தை நீ மாற்று
  • உன்னில் நீ நம்பிக்கை வைத்தால் உனக்கென உலகிலே ஒரு வரலாறு அமையும்
  • உன்னதமான நண்பர்களை நீ சம்பாதித்தால் உலகமே உன் கை நுனியில் கிடைக்கும்
  • வாழ்ந்து பார் நண்பா வாழ்க்கை இனிமையானது.
  • இளையோர்களே! ‘கலாம்’ காணச் சொன்ன கனவினை காணுங்கள்
  • நாளைய பாரதம் நம் கையில்! நிச்சயம் வெல்வாய் வெற்றி! உச்சத்தைத் தொடுவாய்!
  • அனைவருக்கும் இனிய உலக இளையோர் தின நல்வாழ்த்துகள் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2022, 12:33