தேடுதல்

பான்காங் ஏரி பான்காங் ஏரி 

இனியது இயற்கை : பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பாங்காங் ஏரி, இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் கிழக்கில் இந்திய-திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. பாங்காங் ட்சோ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திபெத்திய மொழியில் ட்சோ என்பதற்கு ஏரி என்று பொருள். இது கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 134 கிலோமீட்டர் நீளம், 5 கிலோமீட்டர் அகலம் என்ற அளவில் பரவியுள்ளது. இது இந்திய-சீனா எல்லையைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டருகே அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவின் எல்லைப் பகுதியிலும், இரண்டு பகுதி திபெத்திலும் உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனைக்குரிய பகுதியில் அமைந்துள்ளது.

பாங்காங் ஏரி உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், புலம்பெயர் பறவைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக பாங்காங் ஏரிக்கு வந்து செல்கின்றன. பாங்காங் ஏரியின் தண்ணீரில் உப்பு மிகுந்து காணப்படுவதால் நுண்ணுயிரிகளும், தாவரங்களும் மிகக் குறைவான அளவே வளர்கின்றன.

லே' யிலிருந்து 5 மணி நேர பயண தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. இந்திய-சீன எல்லைக்கோட்டுக்கருகில் அமைந்துள்ளதால், எல்லைக்கோட்டு அனுமதி(Inner Line Permit) பெற்ற பிறகுதான் இந்த ஏரியை அணுக முடியும். அங்கீகாரம் பெற்ற வழிகாட்டி ஒருவரும் உடன்செல்லவேண்டும். பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில்கொண்டு பாங்காங் ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதியில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2022, 16:38