தேடுதல்

அமேசான் காட்டில் அழிக்கப்படும் மரங்கள் அமேசான் காட்டில் அழிக்கப்படும் மரங்கள்  

இனியது இயற்கை – அழிவின் பிடியில் அமேசான் காடுகள்

தீங்கு விளைவிக்கின்ற கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்வதில் அமேசான் மழைக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காடுகள் இல்லையென்றால் மழை இல்லை, மழை இல்லையென்றால் மனிதர் இல்லை என்ற கண்ணோட்டத்தில் நாம் வாரம்தோறும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம். இன்று காடுகளை இன்னும் அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை? என்பது குறித்துப் பார்ப்போம். பல உலக நாடுகளின் தலைவர்கள் 2030 ஆண்டிற்குள்ளாகக் காடுகள் அழிப்பை நிறுத்தவும்,  மீண்டும் காடுகளை வளர்க்கவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் அதேவேளையில், கடந்த 15 ஆண்டுகளில் பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு என்பது உச்சம் தொடும் நிலையில் உள்ளது. இந்நாட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்து அதிகரிப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பரந்து விரிந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் 60 விழுக்காடு பிரேசில் நாட்டுக்குள் வருகின்றது. தீங்கு விளைவிக்கின்ற கரியமில வாயுவை உறிஞ்சுவதில் இந்த அமேசான் மழைக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தக் காடுகள் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளாவிட்டால், அது வளிமண்டலத்தில் கலந்துவிடும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிரேசில் நாட்டில் காடழிப்பு நடவடிக்கைகள் 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், மீண்டும் இது அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (INPE) தெரிவித்துள்ளது. அக்கழகத்தின் அண்மை அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 22 விழுக்காடு காடழிப்பு அதிகரித்துள்ளதாகவும், 13,235 சதுர கி.மீ. அளவிற்குக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அமேசான் காடுகள் அழிக்கப்படுவது பிரேசில் நாட்டில் மட்டுமல்ல, மாறாக அதன் அண்டை நாடான பொலிவியாவிலும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பொலிவியாவில் ஏறத்தாழ 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வெப்பமண்டலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது உலகில் நடந்த நான்காவது பெரிய காடழிப்பு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2022, 13:46