தேடுதல்

உக்ரைனில் யுனிசெப் உக்ரைனில் யுனிசெப் 

போர், உக்ரைனின் குழந்தைகளுக்கு பதற்றமூட்டும் ஒரு கனவு

உக்ரைனில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை, 142 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 229 பேர் காயமடைந்துள்ளனர் - யுனிசெப் அதிகாரி Fontaine

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அண்மையில் உக்ரைனுக்கான பத்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஐ.நா. பாதுகாப்பு அவையில் அந்நாட்டின் நிலைமை குறித்து விளக்கிய யுனிசெப்பின் அதிகாரி ஒருவர், ஆறே வாரங்களில், உக்ரைனின் 75 இலட்சம் குழந்தைகளில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் உக்ரைன் நாட்டிற்கு பத்து நாள் பயணம் மேற்கொண்ட பின்னர், ஏப்ரல் 11, இத்திங்களன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் விளக்கமளித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப்பின் அவசரகால திட்ட இயக்குனர் Manuel Fontaine.

வீடுகள், பள்ளிகள் மற்றும் பெரும்பாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என அக்குழந்தைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், கடந்த 31 ஆண்டுகால தனது மனிதாபிமானப் பணிகளில் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதை தான் அரிதாகவே காண்பதாகவும் தெரிவித்தார் Fontaine.

தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் மற்றும் காயமடைகின்றனர் என்றும்,  ஏப்ரல் 10ஆம் தேதி வரை, 142 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 229 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா. கணித்துள்ளது என்றும், ஆனால் தாக்குதல்களின் அளவைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார் Manuel Fontaine.

இரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள தெற்கில் உள்ள மாரியுபோல், கெர்சன் போன்ற நகரங்களில் நிலைமை மோசமாக உள்ளது என்றும், அங்குக் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாரக் கணக்கில் தண்ணீர், சுகாதாரம், மற்றும் உணவு விநியோகம் இல்லாமல் நாள்களைக் கழிக்கின்றனர் என்றும் கவலை தெரிவித்தார் Fontaine.

புலம்பெயர்ந்துள்ள 45 இலட்சத்திற்கும் அதிகமான மக்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் 71 இலட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று IOM -க்கான ஐ.நாவின் அனைத்துலக அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2022, 15:50