தேடுதல்

தண்ணீரில் விளையாடும் குழந்தை தண்ணீரில் விளையாடும் குழந்தை  

இனியது இயற்கை - விருந்துகளில் விரயமாகும் தண்ணீர்

நாள்தோறும் எத்தனையோ கோடி லிட்டர் தண்ணீரை விரயமாக்கி வரும் நம் செயலுக்கு நாம்தான் முடிவு கட்டவேண்டும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அந்தக் காலம் பொற்காலம்... அதுமாதிரியெல்லாம் இனிமே வராதுப்பா..." என்று நாம் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். நான் சிறுவனாக இருந்தபோது, எனது ஊரில் நிச்சயதார்த்தம், திருமணம், காதுகுத்து, அல்லது வேறு எந்தவொரு நிகழ்வு நடந்தாலும், பந்தியில் சாப்பிடுகிறவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கென்று முந்திக்கொண்டு ஓடுவோம். அவ்வாறு தண்ணீர் ஊற்றும்பொழுது, சிந்தாமல் சிதறாமல் சிறிய குவளைகளில் அளவோடு ஊற்றுவோம். அதுவும் விருப்பிக் கேட்பவர்களுக்கு மட்டும் இரண்டாம் அல்லது மூன்றாம் முறை ஊற்றுவோம். எக்காரணம் கொண்டும் தண்ணீரை விரயமாக்கமாட்டோம்.   

இப்பொழுது நிலைமை தலைகீழ். தற்போது நடைபெறும் மேற்கண்ட வைபவங்களில், சாப்பிட வருபவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, எல்லாருக்கும் அரைலிட்டர் அளவுள்ள தண்ணீர் பாட்டில் கொடுக்கப்படுகிறது. அவைகளை சிலர் முழுமையாகக் குடிக்கின்றனர், மற்றும் சிலர் அதனைப் பயன்படுத்துவதே இல்லை. பெரும்பாலானோர் பாதி குடித்தும் பாதி குடிக்காமலும் அப்படியே விட்டுச் செல்கின்றனர். இறுதியில் மேசையை சுத்தம் செய்ய வரும் துப்புரவுப் பணியாளர்கள், ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டுபோய் குப்பையில் தள்ளிவிடுகின்றனர். இதுமாதிரியான காலி நெகிழி குப்பிகளால், தமிழ்நாடே ஏன், இந்தியாவே தற்போது குப்பைமேடாகி வருகின்றது. இதுபோன்ற வைபவங்கள் நாள்தோறும் நாடு முழுக்க எத்தனை இலட்சங்கள் நடைபெறுகின்றன? அப்படி என்றால், எத்தனை கோடி லிட்டர் தண்ணீர் நாடு முழுவதும் விரயமாக்கப்படுகிறது, என்பதை இத்தருணத்தில் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இதற்கு நாம்தான் முடிவுகட்ட வேண்டும். சிந்திப்போம் செயல்படுவோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2022, 15:12