ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய உதவி முறையீடு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2022ம் ஆண்டிற்கான ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்வதற்காக, 5 பில்லியன் அளவிற்கும் மேலான டாலர்கள் தேவையென, ஜனவரி 11, இச்செவ்வாயன்று ஜெனீவாவில் 2 திட்டங்களை அறிமுகப்படுத்திய, ஐக்கிய நாடுகளின் அமைப்புகள், மற்றும் அவைகளின் மனிதாபிமான கூட்டமைப்புகள்
வேண்டுகோள் விடுத்துள்ளன.
உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியில் ஆப்கானிஸ்தானின் அடிப்படை சேவைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், நாட்டிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கும், மேலும் தேவையில் இருக்கும் 57 இலட்சம் மக்களுக்கும் மற்றும், ஐந்து அண்டை நாடுகளில் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கும் முக்கியமான உணவு உதவிகளை வழங்க உதவுமாறு, ஐ.நா. அமைப்பு அதன் நன்கொடையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெனீவாவில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய ஐ.நா மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths) அவர்கள், HRP எனப்படும் ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான பதில் திட்டத்தில், நடைமுறையில் பணியில் இருப்போரைத் தவிர்த்து சுகாதார பணியாளர்கள் மற்றும் பிறருக்கு நேரடியாக ஊதியம் வழங்குவதற்கு மட்டும் தற்போது 4.4 பில்லியன் டாலர்கள் உதவி தேவைப்படுகிறது என்றுரைத்தார்.
ஐந்து அண்டை நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களுக்கு உதவும் சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆப்கானிஸ்தானின் மாநிலப் புலம்பெயர்ந்தோர் மறுமொழி (RRP) திட்டத்திற்கு, மேலும் 62 கோடியே 30 இலட்சம் டாலர்கள் தேவை என்று புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. வின் உயர் ஆணையர் Filippo Grandi அவர்களும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக 4.4 பில்லியன் டாலர்களுக்கான உதவிகோரும் இத்திட்டம், மனிதாபிமான உதவிக்காக ஒரு நாட்டிற்கான மிகப்பெரிய வேண்டுகோள் இதுவே என்றும், இது 2021ல் திரட்டப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் Griffiths அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்