தேடுதல்

பத்மஸ்ரீ ஹரேகலா ஹாஜப்பா பத்மஸ்ரீ ஹரேகலா ஹாஜப்பா 

வாரம் ஓர் அலசல்: நல்ல விதைகள், நல்ல பலன்கள்

மரங்கள், எப்போதும் நாம் உண்ணத்தக்க அல்லது உண்ணத்தகாத கனிகளையே தரும். அவை இயற்கையின் நியதிப்படியே செயல்படும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்த வயதான வீடற்ற மனிதர், “எனக்கு உதவிசெய்யுங்கள்” என்று எழுதப்பட்ட ஓர் அட்டையை தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அன்று அந்த தெருவில், தன்னைக் கடந்துசெல்லும் எல்லாரிடமும், தான் வைத்திருந்த குவளையை நீட்டி, சில்லறை போடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் சில்லறைகளைப் போடுவதாகத் தெரியவில்லை. இன்று நான் எவ்வாறு இங்கு இரவில் தூங்குவது என்று கவலையோடு முணங்கிக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் அப்பக்கமாக வந்த இளம் பெண்மணி ஒருவர், தனது கைப்பையைத் திறந்து இருபது டாலர் தாள்களை எடுத்து, குவளையில் குனிந்து போட்டார். அதைப் பார்த்த அந்த மனிதர், மேடம்,  இன்று நான் இரவில் இங்கு உறங்கத் தேவையில்லை, ஆனாலும் இவ்வளவு பணம் எதற்கு  என்று கேட்டார். அதற்கு அப்பெண், நம்மிடமிருந்து செல்வது, நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை, நான் எப்போதும் நம்புகிறவள் என்று புன்னகையோடு பதில் சொல்லிச் சென்றார். உடனே அவர் அப்பெண்ணைக் கூப்பிட்டு, உங்களது பெயரைச் சொல்லவில்லையே என்று கேட்டார். அப்போது அப்பெண், எனது பெயர் சாரா டார்லிங், அடுத்த தெருவில் வேலை செய்கிறேன், நாம் இந்தப் பக்கங்களில் சந்திப்போம் என்று நம்புகிறேன் எனவும் கூறி பூரிப்போடு கையசைத்துச் சென்றார். அந்தக் குவளையில் டாலர் தாள்களைப் போட்டபோது தனது கையிலிருந்த திருமண வைர மோதிரமும் கழன்று அதற்குள்ளேயே விழுந்துவிட்டதை அப்பெண் கவனிக்கவே இல்லை.

வீடற்ற முதியவர், திருமண மோதிரம்

அந்த வீடற்ற முதியவர், அப்பெண் சென்றவுடன், குவளையைக் கொட்டிப் பார்த்தார். அதில் ஒரு மோதிரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது சாராவின் திருமண மோதிரம் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு கடையாகச் சென்று சாராவைபற்றி விசாரித்தார். அவரால் சாராவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், வழியில் அடகுக் கடை ஒன்றைப் பார்த்த அவர், அங்குச் சென்று அதன் விலையைக் கேட்டார். அதனை உற்றுப் பார்த்த கடைக்காரர், வாவ்வ்.. என்று வியந்து, நான்காயிரம் டாலர்கள் என்று சொல்லி, மேஜையில் டாலர் தாள்களை, ஆயிரம் ஆயிரமாகப் பிரித்து வைத்தார். அந்நேரத்தில், என்னிடமிருந்து செல்வது எனக்குத் திரும்ப வரும் என, அப்பெண் சொன்ன கூற்று நினைவுக்குவர, அந்த மோதிரத்தைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் ஒவ்வொரு தெருவாக சாராவைத் தேடினார் முதியவர். அடுத்த தெருவில் வேலைசெய்கிறேன் என்று சாரா சொன்னது திடீரென நினைவுக்குவரவே, அந்த தெருவில் ஓர் அலுவலகம் சென்று சாராபற்றி விசாரித்தார். அங்கு சாராவையும் அவர் கண்டார். வீடற்ற அந்த முதியவரைப் பார்த்த சாரா, ஏதாவது உதவி தேவையா என்று கேட்டதும், அவர் சாராவிடம், அந்த மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்தார். கண்ணீரோடு அதைப் பெற்றுக்கொண்ட சாரா, இது என் வாழ்க்கையில் எவ்வளவு விலையேறப்பெற்றது தெரியுமா?, நான் இதைத் தேடாத இடமில்லை, உங்கள் உதவியை நான் ஒருநாளும் மறக்கமாட்டேன், கோடானகோடி நன்றிகள் என்று கூறினார். மேலும், அந்த முதியவரிடம், சரி, இதை வைத்து நீங்கள் நிறைய பணம் சேகரித்திருக்கலாமே, ஏன் திருப்பிக் கொண்டுவந்தீர்கள் என்று கேட்டார் சாரா. அதற்கு அந்த முதியவர், என்னிடமிருந்து செல்வது திரும்ப வரும் என, ஞானமுள்ள ஒரு பெண் என்னிடம் கூறினார் என்று சொன்னார்.

வீடற்ற முதியவர், திருமண மோதிரம்
வீடற்ற முதியவர், திருமண மோதிரம்

Billy என்ற அந்த வயதான வீடற்ற பிச்சைக்கார மனிதர் அங்கிருந்து சென்றவுடன் எவ்வாறு இவருக்கு உதவலாம் என்று சிந்தித்தார் சாரா டார்லிங். அந்த அலுவலகத்தில் சாராவோடு பணியாற்றிய தோழி ஒருவர், “GoFundMe” என்ற நிதி திரட்டும் திட்டத்தை இணையத்தில் தொடங்கலாமே என்று கருத்துச் சொன்னார். சாராவும், மகிழ்ச்சியோடு, அந்த திட்டத்தைத் துவக்கி, அந்த மனிதர் செய்த செயலை அதில் விளக்கினார். அதனைத் துவக்கிய சில நாள்களுக்குள்ளேயே உலகெங்கிலுமிருந்து நன்கொடைகள் வந்து குவிந்தன. 1 இலட்சத்து 90 ஆயிரத்து 726 டாலர்கள் பணம் சேர்ந்தன. பின்னர் சாரா, பில்லி அவர்களைத் தேடிச் சென்று, ஒரு பெரிய பையை அவரிடம் நீட்டினார். அதைத் திறந்து பார்த்த பில்லி அவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார். அப்போது சாரா, தான் நிதி திரட்டிய முறை பற்றிக் கூறினார். இனிமேல் நீங்கள் தெருவில் தூங்கவேண்டியதில்லை, சொந்த வீடு ஒன்றை வாங்கலாம் என்றும் சாரா கூறிச் சென்றார். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று அந்த முதியவர் ஆனந்தக் கண்ணீரோடு சொல்ல, சாராவும் அதையே அவருக்கும் சொல்லிச் சென்றார். நம்மிடமிருந்து செல்வது நமக்குத் திரும்பி வரும் என்ற ஒரு குறிப்பும் அந்தப் பைக்குள் இருந்தது. இது, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற ஓர் உண்மை நிகழ்வாகும்

ஆம். நாம் ஆற்றும் நற்செயல்கள், ஏதாவது ஒரு வழியில், எப்போதாவது, அதே நற்செயலாக நமக்கு திரும்ப வரும் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது. தேவையில் இருக்கும் ஒருவருக்கு முகம்சுளிக்காமல் உதவும்போது, ஒரு கட்டத்தில் நமக்கு ஏதாவது உதவி தேவைப்படும்போது யார் வழியிலாவது அவ்வுதவி நமக்கு கிடைக்கும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற முதுமொழியும் இதைச் சார்ந்தது என்று கூறலாம். நாம் மற்றவர் மீது கற்களை எறிந்தால், அவை காயங்களாகத்தான் திரும்பிவந்து புண்படுத்தும். அதேநேரம், மலர்களைத் தூவினால், அவை மலர் மாலையாக நம் கழுத்தை அலங்கரிக்கும். இதையேதான் இந்த நவம்பர் மாதத்தில் (நவ.09, 2021) பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களின் செயல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

பத்மஸ்ரீ ஹரேகலா ஹாஜப்பா

பத்மஸ்ரீ விருது பெற்ற ஹரேகலா கிராமத்து ஹாஜப்பா அவர்கள், பேருந்து நிலையத்தில் ஆரஞ்சு பழங்களை விற்று ஏழை குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றைக் கட்டியுள்ளார். ஹாஜப்பா அவர்கள், கர்நாடக மாநிலத்தின், மங்களூரு பகுதியில் உள்ள ஹரேகலா என்ற சிறிய கிராமத்தில் ஏழை முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர். இவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக, ஆரம்ப கல்வியைக்கூட தொடரமுடியாமல், தெருக்களிலும், மங்களூரு பேருந்து நிலையத்திலும் ஆரஞ்சு பழங்களை ஓடி ஓடி விற்பனை செய்யும் சிறு வியாபாரி. ஒரு நாள் இவரிடம் பழம் வாங்க விரும்பிய வெளிநாட்டுப் பயணி ஒருவர்  ஆங்கிலத்தில் பழத்தின் விலையைக் கேட்க, ஹாஜப்பா மொழி தெரியாமல் விழி பிதுங்கினார். தன்னைப் போல தன் கிராமத்துக் குழந்தைகள் யாரும் படிக்காமல் இப்படி சிரமப்படக்கூடாது என, அன்று அவர் ஒரு முடிவு எடுத்தார். அதற்கு ஒரே வழி பள்ளிக்கூடம் கட்டி, அதில் ஏழைக்குழந்தைகளை எந்தவிதமான கட்டணமும் இன்றி படிக்கவைக்கவேண்டும் என்றும் அவர் உறுதி எடுத்தார். தனது கிராமத்தில் பள்ளிக்கூடம் வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டார் அதற்கு முதலில் நிலம் வேண்டும் என்று கூறினார்கள். அதற்காக அன்று முதல் கூடுதலாக ஓடி ஓடி வியாபாரம் செய்து நுாறில் இருந்து நுாற்றைம்பது ரூபாய் வரை ஒவ்வொரு நாளும் சேமிக்கத் துவங்கினார். சேமித்த பணத்தில் கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி அரசிடம் ஒப்படைத்தார்.

ஹாஜப்பா அரசு ஆரம்பப் பள்ளி

அச்சமயத்தில், ஹாஜப்பா அவர்களிடம், கிராம மக்கள், உனக்கு திருமணமாகி மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர், நீயோ சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கிறாய், அதனால் வாங்கிய நிலத்தில் சொந்த வீடு கட்டலாமே, அதை ஏன் அரசிடம் ஒப்படைக்கிறாய், உனக்கு என்ன பைத்தியமா? என்றுகூட கேட்டுள்ளனர். ஆமாம் ஏழைக் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற பைத்தியம்தான் என்று அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளார் ஹாஜப்பா. இவரது இந்த முயற்சியைப் பார்த்துவிட்டு, தொண்டு நிறுவனங்கள், அவர் வாங்கிய நிலத்தில் கட்டடம் கட்டித் தருவது உள்ளிட்ட மற்ற உதவிகளையும் செய்தன. 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி 28 குழந்தைகளுடன் அங்கு அரசு ஆரம்பப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அப்பள்ளி படிப்படியாக வளர்ந்து, இன்று 175 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலவழிப்

பள்ளி மாணவர்கள் போல, இந்த அரசுப் பள்ளி மாணவர்களும், சீருடை, மற்றும், காலணிகளை அணிந்து வருகின்றனர். காலையும், மதியமும் நல்ல அருமையான உணவு, அருமையான வகுப்புகள் என்று எல்லாமே பிரமாதமாக அமைந்துள்ளன. பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் நன்கு மதிப்பெண் பெற்று தேறியுள்ளனர் அப்படி தேறியவர்களில் ஹாஜப்பாவின் பேத்தியும் ஒருவர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஹரேகலா கிராமப் பள்ளியைப் பொறுத்தவரை அரசுப் பள்ளியாக இருந்தாலும், மக்கள் அப்பள்ளியை ஹாஜப்பா பள்ளி என்றே அழைக்கின்றனர். ஹாஜப்பா அவர்கள்பற்றி பள்ளி மற்றும், கல்லுாரி பாட நூல்களில், ஒரு பாடமே இருக்கிறதாம். ஆரஞ்சு வியாபாரத்திற்கு போய்விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஹாஜப்பா அவர்கள், பள்ளியின் உள்ளே உள்ள கல் தி்ண்ணையில் உட்கார்ந்து, மாணவர்களிடம் எப்படி படிக்கிறீர்கள், நோட்டு புத்தகம் எல்லாம் இருக்கா என்று விசாரிப்பதோடு நிறுத்திக்கொள்கிறாராம். ஹாஜப்பா அவர்கள், பள்ளிக்கு நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்களை, அப்பள்ளியில் கல்வெட்டாக பதித்து வைத்துள்ளார். ஆனால் அதில் அவர் தனது பெயரை இணைக்கவில்லையாம்.

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் பள்ளிகள் திறப்பு

நீதிபதி சந்துரு

நீதிபதி சந்துரு அவர்கள் பற்றி அண்மைய நாள்களில் நாம் அதிகம் அறிந்துகொண்டுள்ளோம். இவர், நீதிபதியாக இருந்த ஆறு ஆண்டு குறுகிய காலத்தில், எந்த ஒரு மனித உரிமை வழக்குக்கும் ஒரு ரூபாய்கூட கட்டணம் வாங்காமல், 96 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளவர். இவர்களைப் போன்ற மாமனிதர்களே, சனநாயகத்தின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது.

“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை, நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. மரங்கள், எப்போதும் நாம் உண்ணத்தக்க அல்லது உண்ணத்தகாத கனிகளையே தரும். அவை இயற்கையின் நியதிப்படியே செயல்படும். நல்ல மரம், கெட்ட கனியைத் தருவதற்குச் சாத்தியமே கிடையாது. எனவே நாம் நல்ல மரங்களாக இருந்து நல்ல கனிகளைக் கொடுப்போம். நல்லதைச் செய்து நல்லதைப் பெறுவோம். நல்ல விதைகள், நல்ல பலன்களைத் தருகின்றன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2021, 14:19