வாரம் ஓர் அலசல் – விளையாட்டுகள், வாழ்ந்து காட்டுவதற்காகவே..
மேரி தெரேசா: வத்திக்கான்
2021ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை, ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 32வது உலக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் நாட்டு Mutaz-Essa Barshim, இத்தாலி நாட்டு Gianmarco Tamberi ஆகிய இரு விளையாட்டு வீரர்களும், தாங்களாகவே விரும்பி, தங்கப் பதக்கங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்தப் பின்னணியில், விளையாட்டுகள், வாகை சூடுவதற்காக அல்ல, மாறாக, வாழ்ந்து காட்டுவதற்காகவே நடைபெறவேண்டும் என்றும், போட்டி என்ற மனப்பான்மையை விட்டுவிட்டு பகிர்ந்துகொள்வதற்காக கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார் என்றும், அருள்பணி முனைவர் ஆரோக்ய ஜோஸ் அவர்கள் தன் சிந்தனைகளை இன்று பகிர்ந்துகொள்கிறார். குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், உரோம் மாநகரில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர்.
1896ம் ஆண்டில் ஏத்தென்ஸ் நகரில் முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் ஆரம்ப நாள்களில் பதக்கங்கள் வழங்கப்படவில்லை. முதலாவதாக வந்தவரின் தலையில் ஒலிவக் கிரீடம் சூட்டப்பட்டது. ஆண்களின் நாயகத் தன்மையை ஆராதித்த கிரேக்க கலாச்சாரம், 2வது, 3வது வந்தவர்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. தொடக்ககால ஒலிம்பிக் விளையாட்டுகள் மதம் சார்ந்தவை. அவை கிரேக்க கடவுளுக்கு, வணக்கம் செலுத்தி கொண்டாடப்பட்டவை. ஆனால் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளின் கடவுள் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள். இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் இவ்விளையாட்டுகள் நடக்க அந்த வர்த்தக நிறுவனங்களின் தூண்டுதல்களே காரணம். 1904ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கும் பழக்கம் ஆரம்பமானது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்