தேடுதல்

சென்னை வெள்ளம் சென்னை வெள்ளம்  (AFP or licensors)

வன்முறை, காலநிலை மாற்றத்தால் 84 மில்லியன் மக்கள் புலம்பெயர்வு

2021ம் ஆண்டில் புதிதாகப் புலம்பெயர்ந்துள்ளோரில் அதிகமானோர், மத்திய ஆப்ரிக்க குடியரசு, தென் சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வன்முறை, பாதுகாப்பின்மை, மற்றும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களால், தங்கள் இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும்வேளை, தற்போது அவ்வெண்ணிக்கை உலகளவில் எட்டு கோடியே நாற்பது இலட்சமாக உள்ளது என்று, ஐ..நா. நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

இவ்வாண்டின் கடந்த ஆறு மாதங்களில் புலம்பெயர்ந்தோர் பற்றி ஆய்வுசெய்து, நவம்பர் 11, இவ்வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனம், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வெண்ணிக்கை எட்டு கோடியே 24 இலட்சத்திற்கும் அதிகமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.  

உலக அளவில் நடைபெற்றுவரும் போர்களால் மக்கள் கட்டாயமாக தங்கள் இடங்களைவிட்டு புலம்பெயர்கின்றனர் எனவும், இந்நிலை ஆப்ரிக்காவில் அதிகம் எனவும் கூறியுள்ள அந்நிறுவனம், கோவிட்-19 பெருந்தொற்றின் எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், பல இடங்களில் புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது.

மக்கள் தொடர்ந்து புலம்பெயரக் காரணிகளாக அமைந்துள்ள வன்முறை, சித்ரவதைகள், மற்றும், மனித உரிமை மீறல்களைத் தடைசெய்வதற்கு, உலக சமுதாயம் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது என்று, UNHCR நிறுவனத்தின் உயர் இயக்குனர் பிலிப்போ கிராந்தி அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.    

இவ்வாண்டில் புதிதாகப் புலம்பெயர்ந்துள்ளோரில் அதிகமானோர், மத்திய ஆப்ரிக்க குடியரசு (71,800), தென் சூடான் (61,700), சிரியா (38,800), ஆப்கானிஸ்தான் (25,200), நைஜீரியா (20,300) ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், UNHCR நிறுவனம் கூறியுள்ளது. (UN)

12 November 2021, 16:14