தேடுதல்

COP26 மாநாட்டின்போது போராடிய இளையோர் COP26 மாநாட்டின்போது போராடிய இளையோர் 

இளையோர், எதிர்காலத்தின் பார்வையையாளர் அல்ல

கோவிட்-19 பெருந்தொற்று, காலநிலை மாற்றம், போன்ற சவால்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில், இவ்வுலகம் சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை, இளையோரிடமும், வளர் இளம் பருவத்தினரிடமும் அதிகம் உள்ளது – யூனிசெஃப் அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று, காலநிலை மாற்றம், மற்றும், ஏனைய உலகளாவிய சவால்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில், இவ்வுலகம் சிறந்துவிளங்கும் என்ற நம்பிக்கை, இளையோரிடமும், வளர் இளம் பருவத்தினரிடமும் அதிகம் உள்ளது என்று, ஐ.நா. நிறுவனத்தின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் (UNICEF) வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

வயதில் முதிர்ந்தோர் பலர், இவ்வுலகின் எதிர்காலம் குறித்து எதிர்மறை எண்ணங்களை கொண்டிருக்கும் வேளையில், இளையோரில், பாதிக்கும் மேற்பட்டோர், இவ்வுலகைக் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக, யூனிசெஃப் நிறுவனமும், Gallup என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து, நவம்பர் 18, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 20, இச்சனிக்கிழமை, குழந்தைகளின் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சவால்கள் நிறைந்த இவ்வுலகை, இளையோர் நேர்மறைக் கண்ணோட்டத்தில் காண்பது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று, யூனிசெஃப் நிறுவனத்தின் இயக்குனர், Henrietta Fore அவர்கள் கூறினார்.

தெரிவுசெய்யப்பட்ட 21,000த்திற்கும் அதிகமானோரை, 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற இரு குழுக்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், இளையோர், தங்களை, எதிர்காலத்தின் பார்வையையாளர்களாக அல்லாமல், பங்கேற்பாளர்களாக கருதுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழலைக் குறித்தும், காலநிலை மாற்றத்தைக் குறித்தும், தற்போதைய சமூக ஊடகங்களைக் குறித்தும் இளையோருக்கு கவலைகள் அதிகம் உள்ளன என்றாலும், வருங்கால உலகத்தின் குடிமக்களாக தங்களையே எண்ணிப்பார்க்கும் பரந்து விரிந்த கண்ணோட்டம் இளையோரிடம் அதிகம் உள்ளது என்பது, இந்த ஆய்வில் வெளியாகியுள்ளது.

தலைமுறைகளுக்கிடையே உள்ள இடைவெளி இந்த கருத்துக்கணிப்பில் தெளிவாக வெளிப்பட்டாலும், இளையோர், தங்கள் பெற்றோரை விட தாங்கள், 21ம் நூற்றாண்டின் குடிமக்கள் என்று எண்ணுவது சரியான கண்ணோட்டம் என்று யூனிசெஃப் இயக்குனர் Fore அவர்கள் கூறினார்.

நவம்பர் 20ம் தேதி சிறப்பிக்கப்படும் குழந்தைகளின் உலக நாளுக்கு முன்னதாகவும், அடுத்த மாதம் யூனிசெஃப், தன் 75வது ஆண்டு நிறைவை சிறப்பிப்பதற்கு முன்னதாகவும், இளையோரின் குரலுக்கு செவிமடுப்பது முக்கியம் என்ற எண்ணத்துடன் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக, யூனிசெஃப் இயக்குனர் Fore அவர்கள் கூறினார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2021, 14:53