தேடுதல்

sultan qaboos யுனெஸ்கோ விருது sultan qaboos யுனெஸ்கோ விருது 

யுனெஸ்கோவின் விருது பெற்ற மலேசியா, கோஸ்டா ரிக்கா

சுற்றுச்சூழல் பராமரிப்புக்கென UNESCO உருவாக்கியுள்ள Sultan Qaboos விருது, இவ்வாண்டு, மலேசியா மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO, சுற்றுச்சூழல் பராமரிப்புக்கென உருவாக்கியுள்ள Sultan Qaboos விருது, இவ்வாண்டு, மலேசியா மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

மலேசியாவின் காடு ஆய்வு நிறுவனம், மற்றும், கோஸ்டா ரிக்காவின் பன்னாட்டு கூட்டுறவு பல்கலைக்கழகம் ஆகிய இரு நிறுவனங்கள், நவம்பர் 17, இப்புதனன்று பாரிஸ் மாநகரில் நடைபெற்ற ஒரு விழாவில், இந்த விருதைப் பெற்றன.

மலேசிய காடுகளில் அழிந்துவரும் தாவரங்கள், விலங்குகள் ஆகியவை குறித்த விவரங்களையும், பழங்குடியினரின் பாரம்பரிய அறிவுக்கருவூல விவரங்களையும் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளது, மலேசிய காடு ஆய்வு நிறுவனம்.

மேலும், பல்லுயிர் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை வழங்குவதற்கும், சுற்றுச்சூழலை மையப்படுத்திய ஒரு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கும், மலேசிய காடு ஆய்வு நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு விருது வழங்கப்படுவதாக, யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இலத்தீன் அமெரிக்க கண்டத்தில், ஈக்குவதோர், சிலே மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பொதுவான உயிர்க்கோள பாதுகாப்பு நிலங்களை உருவாக்குவதில் கோஸ்டா ரிக்காவின் பன்னாட்டு கூட்டுறவு பல்கலைக்கழகம் ஈடுபட்டிருப்பதையொட்டி, இப்பல்கலைக்கழகத்திற்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டைச் சேர்ந்த சுல்தான் Qaboos Bin Said Al Said அவர்கள் வழங்கிய நிதி உதவியைக் கொண்டு, யுனெஸ்கோ நிறுவனம், 1991ம் ஆண்டு நிறுவிய சுற்றுச்சூழல் பராமரிப்பு விருது, ஈராண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது என்பதும், இவ்விருதைப் பெறுவோருக்கு, 50,000 டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2021, 13:58