தேடுதல்

COP26 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் மற்றும் அரசுத்தலைவர் பைடன் ஆகியோருடன் ஐ.நா. பொதுச்செயலர் COP26 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் மற்றும் அரசுத்தலைவர் பைடன் ஆகியோருடன் ஐ.நா. பொதுச்செயலர்  (Copyright 2021 The Associated Press. All rights reserved)

COP26: இயற்கையை, கழிவறையைப்போல் நடத்தியது போதும்

ஏறத்தாழ 200 நாடுகளிலிருந்து 120 அரசுத்தலைவர்களும், 25 ஆயிரம் பிரதிநிதிகளும் COP26 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயற்கையை கழிவறையைப்போல் நடத்தியது போதும், நம் வருங்காலத்தையும், மனிதர் அனைவரையும் பாதுகாப்பதற்கு, பேரார்வம் மற்றும், தோழமையுணர்வு ஆகியவற்றைத் தெரிவுசெய்வோம் என, வருங்காலத் தலைமுறைகளின் சார்பாக உலக சமுதாயத்தை விண்ணப்பிக்கிறேன் என்று, COP26 உலக உச்சி மாநாட்டில் துவக்கயுரையாற்றிய ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் என்று கூறினார்.

நவம்பர் 01, இத்திங்களன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில், COP26 எனப்படும் 26வது காலநிலை உலக உச்சி மாநாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், புதைபடிவ எரிபொருள்களுக்கு அடிமையாகியிருப்பதன் வழியாக, நாம் நம் சொந்தப் புதைகுழிகளைத் தோண்டிக்கொண்டிருக்கிறோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏறத்தாழ 200 நாடுகளிலிருந்து 120 அரசுத்தலைவர்களும், 25 ஆயிரம் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்ற COP26 உச்சி மாநாட்டில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கு இசைவுதெரிவிக்கபட்டுள்ள கடந்த ஆறு ஆண்டுகளே, உலகில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ள ஆறு ஆண்டுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள கடுமையான நெருக்கடிகள் பற்றிக் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், இந்த மிகப்பெரும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவேண்டியவர்கள் நாமே எனவும், காலநிலையில் மாற்றம் நிகழ்வதை நாம் நிறுத்தவேண்டும், அல்லது, அது நம்மை நிறுத்திவிடும் என்றும், உலகத் தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.

போதும்’ என்பதற்கு ஏற்ற காலம்

பல்லுயிர்களைக் கொடுமைப்படுத்தியது, நம்மையே கார்பனால் கொலைசெய்து வருவது, இயற்கையை கழிவறை மாதிரி கையாள்வது, காடுகளை எரிப்பது, சுரங்கங்களைத் தோண்டிக்கொண்டே போவது போன்ற நடவடிக்கைகள் ‘போதும்’ என்று  என்று சொல்வதற்கு இதுவே ஏற்ற காலம் என்று கூறியுள்ளார், கூட்டேரஸ்.

கடல் மட்டம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இருமடங்காக உயர்ந்துள்ளது, கடுமையான வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகிவருகின்றன. பெருங்கடல்கள் முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு சூடாக உள்ளன, அமேசான் பருவமழைக் காடுகள், கார்பனை உறிஞ்சுவதைவிட அதிகமாக இப்போது உமிழ்கிறது என்றும் கூட்டேரஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியசுக்கு உயராமல் காப்பதற்கும், காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள பிரச்சனைகளால் பல்வேறு நிலைகளில் துன்புறும் ஏறத்தாழ 400 கோடி மக்களைப் பாதுகாப்பதற்கும், வளரும் நாடுகள், காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கென நூறு கோடி டாலர்கள் நிதியுதவிக்கு அளித்த உறுதிகள் செயல்படுத்தப்படுவதற்கும், அழைப்புவிடுத்தார், கூட்டேரஸ்.

இந்நூற்றாண்டின் பாதிக்குள், கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைப்பதற்கு, பல நாடுகள் உறுதியளித்துள்ளன, 700க்கும் மேற்பட்ட நகரங்கள், இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன எனவும் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் செயல்களில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ள இளையோரோடு தானும் பயணிக்கிறேன் என்று, இளையோரையும் ஊக்கப்படுத்தியுள்ளார். (UN)

02 November 2021, 15:23