தேடுதல்

மகாத்மா காந்தி செய்த காலணிகள் மகாத்மா காந்தி செய்த காலணிகள் 

வாரம் ஓர் அலசல்: தனிமனித மாற்றமே, சமுதாயத்தின் மாற்றம்

வெளியேயிருந்து ஏதாவது நம்மை மோதும்போது, நமக்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் சிதறும்

மேரி தெரேசா: வத்திக்கான்

மகாத்மா காந்தி அவர்கள், தென்னாப்ரிக்காவில் நடத்திய உரிமைப் போராட்டத்தால் சிறையில் இருந்தபோது, Jan Smuts என்ற சிறை அதிபர் பற்றி அவர் எழுதியது, அவரது 70வது பிறந்த நாளையொட்டி வெளியான ஒரு நூலில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. சிறை அதிபரான ஸ்மட்ஸ் அவர்கள், எல்லாக் கைதிகளையும் நைய வறுத்தெடுப்பவர். அவர் காந்திஜியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தார், அடித்தார். அந்த சிறை அதிபர் அடிக்கும்போது எல்லாரும் ஐயோ! என்று அலறினார்கள். ஆனால், காந்திஜி மட்டும் “ராம்!ராம்!” என்று சொன்னது, அவரை மிகவும் சிந்திக்க வைத்தது. அன்று முதல் அவர், காந்திஜியை அடிப்பதை நிறுத்தினார். அதோடு, காந்திஜியை அவ்வப்போது உற்றுப்பார்த்து, இலேசாகப் புன்முறுவல் காட்டத் தொடங்கினார். ஒரு நாள் ஸ்மட்ஸ், காந்திஜியிடம், “மிஸ்டர் காந்தி” என்று கனிவாக அழைத்து, நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன், என்ன வேண்டும் என்று கேட்டார். ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார், காந்திஜி. ஸ்மட்ஸ் அவர்களும், விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தார். இந்த நிகழ்வு அவ்விருவரிடையே நட்பாக மாறி வளர்ந்தது.

காந்திஜியால் மனம் மாறிய சிறை அதிபர்

ஒரு நாள் Jan Smuts அவர்கள், காந்திஜியிடம் வந்து, நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஒரு வருத்தமான செய்தியையும் கொண்டுவந்துள்ளேன் என்று கூறினார். மகிழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்திஜி. அதற்கு அவர், இன்று உங்களுக்கு

விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், உங்களைப் பிரிவதற்கு என்னால் முடியவில்லை. இது வருத்தமான செய்தி என்று கூறினார். அப்போது காந்திஜி, அவரிடம்,

“நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன், என் நினைவாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார். ஆவலோடு அதை அணிந்து பார்த்த Smuts அவர்கள், காந்திஜியிடம், இவ்வளவு துல்லியமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது” என்று கேட்டார். அப்போது காந்திஜி சிரித்தபடியே, தனது மார்புத் துண்டை அகற்றினார். பின்னர், Smuts அவர்கள், தன் மார்பில் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்களைக் காட்டி, இந்த வடுக்களை அளந்துதான் தைத்தேன்” என்று காந்திஜி பதில் சொன்னார். உடனடியாக Smuts அவர்கள், காந்திஜியின் கால்களைப் பிடித்துக் கதறினார். “நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்! என்னை மன்னித்து விடுங்கள். இனி யாரையும் அடிக்கவேமாட்டேன்” என்று, Smuts அவர்கள், காந்திஜியிடம் உறுதியளித்தார். அதோடு அவர், இந்த பூட்ஸ்தான் இனி எனக்குக் கடவுள், இதை மட்டுமே வணங்குவேன், இதைக் காலில் அணியவேமாட்டேன் என்று சொல்லி, அந்த பூட்சை தன் அறையில் வைத்து அப்படியே வணங்கினார் என்று சொல்லப்பட்டுள்ளது. காந்திஜியின் மன்னிக்கும் பண்பால், ஒரு கொடிய மிருகம், ஒரு நிமிடத்தில் மென்மையான மனிதராக மாறியது. ஆம். நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும். மன்னிக்கின்ற மனம்தான் மனிதரை மகாத்மாவாக மாற்றும். மனிதர் மகிழ்வுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட மாமனிதமே மிகச்சிறந்த பண்பு. இவ்வாறு இந்த தகவலுக்குப் பின்குறிப்பு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

நீதிபதி Frank Caprio, 96 வயது முதியவர்

நீதிபதி Frank Caprio
நீதிபதி Frank Caprio

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Rhode Island மாநிலத்தில், Providence நகராட்சியில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவரும் Frank Caprio (Francesco "Frank" Caprio பிறப்பு 23நவ.1936) அவர்கள், வழக்குகளைக் கையாளும்முறை, பலரின் வாழ்வு மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. Caprio அவர்கள், ஒருமுறை, Coello என்ற வயதான ஒருவர் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த வழக்கை விசாரித்தார். அன்று அவர், அந்த வயதானவருக்கு முதலில் வணக்கம் சொல்லிவிட்டு, விசாரணையைத் தொடங்கினார். பெரியவரே, நீங்கள், பள்ளிக்கூடம் இருக்கும் பகுதியில், வேகமாக கார் ஓட்டி விதிமுறைகளை மீறினீர்கள் என்று ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது என Caprio அவர்கள் கூறினார். அதற்கு அந்த முதியவர், நீதிபதி அவர்களே, நான் அவ்வளவு வேகமாக கார் ஓட்டுவதில்லை, எனக்கு 96 வயதாகிறது, நான் மெதுவாகவே கார் ஓட்டுவேன், எனக்குத் தேவை ஏற்படும்போதுமட்டுமே கார் ஓட்டுவேன், மாற்றுத்திறனாளியாகிய எனது மகனுக்கு புற்றுநோய், அவனுக்கு இரத்த மாற்று சிகிச்சைக்காக, இரு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு காரில் செல்வேன், மற்றபடி நான் கார் ஓட்டுவதில்லை, எனது மகனின் வயது 63 என்று கூறினார்.

96 வயது நிரம்பிய முதியவர் Coello அவர்கள் கூறியதைக் கேட்ட நீதிபதி காப்ரியோ அவர்கள், நீங்கள் நல்ல மனிதர், உங்களிடமிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது, இந்த தள்ளாத வயதிலும் உங்கள் குடும்பத்தைப் பராமரிக்கிறீர்கள். ஒரு தந்தையாக நீங்கள் இன்னும் மகனைப் பராமரித்து வருகிறீர்கள், இது மிகவும் சிறந்த செயல் என்று பாராட்டினார். அப்போது அந்த முதியவர் அவரிடம், எனக்குத் தேவை ஏற்படும்போதுமட்டுமே நான் கார் ஓட்டுவேன் என்று மீண்டும் சொன்னார். அப்போது நீதிபதி காப்ரியோ அவர்கள், முதியவரிடம், உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள், உங்கள் மகனுக்கு நற்சுகம் கிடைக்கட்டும், உங்கள் மீதுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன் என்று கூறினார். நீதிபதி பிராங்க் காப்ரியோ அவர்கள், பரிவிரக்கத்தோடு தீர்ப்புக் கூறிய மேலும் பல வழக்குகள் ஒலிவலைக்காட்சிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர், நீதிபதிகளுக்கு இருக்கவேண்டிய பரிவிரக்கம், நீதி ஆகிய பண்புகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார். இத்தகைய செயல்களைப் பார்க்கின்ற, மற்றும் கேட்கின்ற மனித மனங்களிலும் மாற்றம் இடம்பெறும் என்று கூறலாம்.

குடிப்பழக்கத்தை கைவிடக் காரணமான நிகழ்வு

சென்னையில், 59 வயது நிரம்பிய சண்முகராஜ பாண்டியன் என்பவர், தன் மகன்மீது வைத்திருந்த பாசத்தால், குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு புதியதொரு மனிதராக மாறியுள்ளார் என்ற ஒரு செய்தி தினமலர் இ-இதழில் பதிவாகியிருந்தது. சென்னை மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் சாலையில் உள்ள காயிலாங்கடையில், சிவ பக்தராகக் காட்சியளிப்பவர் சண்முகராஜ பாண்டியன். இவர் சிவபக்தராக மாறியது பற்றி இவ்வாறு சொல்லியுள்ளார். நான் மதுவுக்கு அடிமையாக இருந்தவன். மதுபானம், பாக்கு, சிகரெட் இவை இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. இவற்றோடுதான் கடையில் குடும்பம் நடத்தினேன். கடவுள் பக்தி எல்லாம் அப்போது கிடையாது. ஆனால், நான் காதலித்து கல்யாணம் செய்துகொண்ட மனைவி ராஜேஸ்வரி, மகன் முத்துப்பாண்டி ஆகிய இருவர் மீதும் உயிரையே வைத்திருந்தேன். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர், என் மகனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. இரண்டே நாள்தான் மகன் உயிரோடு இருப்பான் என்று சொல்லி, மருத்துவர்கள் அவனை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அன்று இரவு மதுக் குடிக்க மனதில்லை. மகன் பற்றி சிந்தித்துக்கொண்டே துாங்கிவிட்டேன். மறுநாள் காலையில் மதுக் குடிக்க முடிவு பண்ணி, கடையிலிருந்து சைக்கிளில் கிளம்பினேன். ஆனால், என்னை அறியாமல் என் சைக்கிள், சிவன் கோவில் வாசலில் போய் நின்றது. 'டாஸ்மாக்' கடைக்குப் போகவேண்டிய நான், இங்கு ஏன் வந்தேன் என்று யோசித்தேன். அப்போதுதான் கோவில் குருவும், கோவிலைத் திறந்தார். நான் முதல் முறையாக கோவிலுக்குப் போனேன். ஈசனைப் பார்த்ததும், என்னையும் அறியாமல் கதறினேன். மகனைக் காப்பாத்தினா, என்னோட குடி, கெட்டப் பழக்கங்கள விடுறதா அங்கிருந்த பீடத்துமேல சத்தியம் செஞ்சேன். அப்புறமா வீட்டுக்கு வந்துட்டேன். அதுவரைக்கும் அசைவே இல்லாம இருந்த என் மகன், ஒரு வாரத்துல சுய நினைவு வந்து பிழைச்சுட்டான். என் வாழ்க்கையில அது ஒரு திருப்புமுனை. அன்றிலிருந்து, நான் சிவ பக்தன். அவருக்கு அளித்த வாக்குறுதியையும் இதுவரைக்கும் நான் மீறவில்லை. மகன் இறந்துவிட்டால் நானும், எனது மனைவியும், தற்கொலை செய்துகொள்ளவும் நினைத்திருந்தோம்.

மாறுவோம், மாற்றம் காண

எதிர்பாராத நேரங்களில், திடீரென நிகழும் நிகழ்வுகள், பலரது வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இன்றையக் காலக்கட்டத்தில் சுற்றுச்சூழலில், உலக உணவு அமைப்புமுறைகளில், பொருளாதாரச் சந்தைகளில், தனி மனிதரில்.. இவ்வாறு பல்வேறு துறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. ஒரு சமுதாயத்தின் மாற்றம், தனிமனித மாற்றத்தில்தான் தொடங்குகிறது. நாம் ஒரு கடையில் சூடாக ஒரு கப் காஃபி வாங்கிக் குடிக்கத் துவங்கும் நேரத்தில், அங்குவந்த நபர் ஒருவர் தெரியாமல் நம்மீது மோதுகிறார், அதனால் காஃபி வெளியே சிதறுகிறது, உடையும் வீணாகிறது என்று வைத்துக்கொள்வோம். இங்கு காஃபி சிந்தியதற்கு, அந்த நபர் தட்டியதுதான் காரணம் என்று சொன்னால், அது ஒருவகையில் தவறுதான். ஆனால் நம் கையில் காஃபி கப் இருந்ததால்தான் அது சிந்தியது. அதேபோல் அந்நேரத்தில் நம் கையில் வேறு ஏதாவது இருந்திருந்தாலும் அதுவும் சிந்தத்தான் செய்திருக்கும். இந்த நிகழ்வை நம் வாழ்க்கையோடு பொருந்திப் பார்ப்போமே. வெளியேயிருந்து ஏதாவது நம்மை மோதும்போது, நமக்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் சிதறும். எனவே வாழ்க்கையில் கடினமான நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நமக்குள்ளே இருந்து வெளியே சிந்தவேண்டியவை என்னவென்று சிந்திப்போம். அவை நிச்சயமாக, காழ்ப்புணர்வாக, கசப்புணர்வாக, பயமாக, சுடுசொற்களாகவோ இருக்கக்கூடாது. மாறாக, மன்னிப்பு, கருணை, அன்பு, நன்றி, மகிழ்ச்சி போன்றவையாகவே இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால், எந்தவொரு கடினச் சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிலிருந்து வெளியே சிதறுவது அனைத்தும் நல்லவைகளாக இருக்கும். எனவே மாறுவோம், மற்றவர் மாற்றம்காண உதவுவோம். நாம் மனதுவைத்தால் மாறமுடியும், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2021, 13:40