தேடுதல்

டாக்டர் பட்டம் பெற்ற மயான பணியாளர் சங்கர் டாக்டர் பட்டம் பெற்ற மயான பணியாளர் சங்கர்  

வாரம் ஓர் அலசல்: இலக்கை அடைய முயற்சி, பயிற்சி!

நீ ஓர் இலக்கை அடைய விரும்பினால் உன் கண்கள் இரண்டும் அந்த இலக்கை நோக்கியே இருக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜென் துறவி ஒருவரிடம் பயிற்சிபெறவந்த இளம் துறவி ஒருவர், அவர் பின்னாலேயே எப்போதும் சென்றுவந்தார். ஒருநாள் அவரிடம், ஐயா, உங்களிடம் எல்லாரும் வந்து அறிவுரை கேட்கிறார்கள், உங்களை பெரிய ஞானியாக மதிக்கிறார்கள். இந்த மாதிரி நானும் ஒரு பெரிய ஞானியாக மாறவேண்டும். அதற்கு எத்தனை காலம் ஆகும் என்று கேட்டார். அதற்கு பெரியவர், அதற்கு ஒரு பத்துவருடம் ஆகும் என்று வைத்துக்கொள் என்றார். உடனே இளம் துறவி, நான் இப்பொழுதுதான் இவரிடம் வந்துசேர்ந்துள்ளேன். இன்னும் பத்து வருடங்கள் ஆகும் என்றால், எப்படிக் காத்திருப்பது என்று தனக்குள்ளே சிந்தித்தார். அதனால் அவர் பெரியவரிடம், நான் கடினமாக உழைக்கிறேன், நீங்கள் சொல்லும் அறிவுரைகளை எல்லாம் கேட்டு அப்படியே நடக்கிறேன், உங்கள் கூடவே இருந்து, எல்லாவற்றையும் நன்றாக கற்றுக்கொள்வேன். அந்நிலையில் எத்தனை வருடங்கள் நான் காத்திருக்கவேண்டும் என்று கேட்டார். ஓ! அப்படியா, நீ இன்னும் இருபது வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்று சொன்னார் பெரியவர். ஆ.. இன்னும் 20 வருடமா.. உங்களது சீடர்கள் யாருமே உழைக்காத அளவுக்கு நான் இன்னும் கடுமையாக உழைப்பேன், நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் அப்படியே செய்வேன், எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிப்பேன், அந்நிலையில் நான் ஞானியாக எத்தனை காலம் ஆகும் என்று கேட்டார் இளம்துறவி. அப்படியானால் முப்பது வருடங்கள் தேவைப்படும் என்று சொன்னார், பெரியவர். பெரிய துறவி கூறியதைக் கேட்ட இளம்துறவி பொறுமை இழந்தார், அதிர்ந்தும் போனார் அவர், பெரியவரிடம், நான் உங்கள் போதனைகளின்படி செவ்வனே நடப்பதற்கு மிகக் கடினமாக உழைப்பேன் என்று சொன்னேன். ஆனால் தாங்களோ ஒவ்வொரு முறையும் வருடத்தைக் கூட்டிக்கொண்டே செல்கிறீர்கள், இதற்கு சற்று விளக்கம் சொல்வீர்களா என்று கேட்டார்.

ஓர் இலக்கை அடைய

அப்போது அந்த பெரியவர், இவ்வாறு இளம்துறவிக்கு விளக்கினார். நீ ஓர் இலக்கை அடைய விரும்பினால் உன் கண்கள் இரண்டும் அந்த இலக்கை நோக்கியே இருக்கவேண்டும். ஆனால் உனது ஒரு கண் ஞானியாகவேண்டும் என்ற ஆசையிலும், மற்றொரு கண் இலக்கிலும் இருக்கின்றன. எனவே இலக்கு என்ற ஒரே பாதையில் உனது இரு கண்களும் இல்லாதபோது நீ எவ்வாறு அந்தப் பாதையைக் கடந்துபோவாய், எவ்வாறு நீ அந்தப் பாதையில் தடுமாறாமல் நடப்பாய், எப்போது நீ அந்த இலக்கைச் சென்றடைவாய். அதனால்தான் நான் வருடங்களை அதிகரித்துக்கொண்டே சென்றேன் என்று, அந்தப் பெரிய துறவி. கூறினார்.  ஆம். அந்த இளம்துறவி, தான் பெரிய ஞானியாகவேண்டும் என்பதிலேயேதான் அக்கறையாய் இருந்தாரே தவிர, அவர் செல்லவேண்டிய பாதையில் கவனம் செலுத்தவில்லை. எனவே ஓர் இலக்கை அடையவேண்டுமென்றால் அதை அடையவேண்டிய பாதையில் நம் இரு கண்களையும் பதித்து நடந்தால், அப்பாதையில் தடுமாறாமல், அதன் முடிவை எட்டமுடியும். அதேபோல் நாம் செய்யும் செயலில் முழுக் கவனத்தையும் செலுத்தினால் அதன் பலன் தானாகவே வந்துசேரும். அந்தப் பாதையில் எதிர்படும் தடைக்கற்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து முன்னோக்கிப் பயணிக்கவேண்டும். அதற்கு நமக்கு இரு காரியங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று முயற்சி, இரண்டாவது பயிற்சி! இவை இரண்டோடு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தேவை. மக்களில் பலர் இந்த வழியில் பயணித்து தங்களது இலக்கை எட்டியிருக்கின்றனர். இந்தப் பலரில் ஒருவராகத் திகழ்பவர், 34 வயது நிரம்பிய முதுகலைப் பட்டதாரியான சங்கர் என்பவர். இவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் தனது குடும்பத் தொழிலான வெட்டியான் வேலையைச்செய்துகொண்டே, கல்லூரி படிப்பை முடித்து, இவ்வாண்டு செப்டம்பரில் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

மயான பணியாளருக்கு டாக்டர் பட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் வாழ்கின்ற முருகேசன்- பஞ்வர்ணம் தம்பதியரின் ஐந்து பிள்ளைகளில் கடைசி மகன்தான் சங்கர். இந்தக் குடும்பம்,  முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மயானத்தில் பிணம் எரிக்கும் தொழில் செய்து வருகிறது. முருகேசன் அவர்கள், தன் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில், மற்ற பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். படிக்காத அப்பிள்ளைகள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். கடைசி மகன் சங்கர் மட்டும் பள்ளிப்படிப்பை முடித்தார். மேலும் தொடர்ந்து படிப்பதற்கு வசதியில்லை. எனவே வறுமையிலும்,  தன்னம்பிக்கை இழக்காத சங்கர், தந்தைக்கு உதவியாக சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலுக்குச் சென்றார். அதோடு, அவர், சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். நேரம் கிடைத்தபோதெல்லாம், மானாமதுரை ரயில்வே நிலையத்திலுள்ள கேன்டீன் மூலம், பிளாட்பாரத்தில் டீ, காபி விற்று கல்லூரிப் படிப்புக்குப் பணம் செலுத்தினார். வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சங்கர் அவர்கள், மயானத்திற்கு வரும் ஏழைகளுக்கு கட்டணம் வாங்காமல் எரியூட்டும் இறுதிச் சடங்கு பணிகளைச் செய்துவருவதையும், பலருக்கு இலவசமாக ஓவியம் கற்றுக் கொடுத்து வருவதையும் பாராட்டும் விதமாக, சென்னை பன்னாட்டு தமிழ் பல்கலைக்கழகம், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. சங்கர் அவர்கள், தனது சாதனை பற்றி, மயானத்தில் இருந்துகொண்டே ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டிகள் வலைக்காட்சிகளில் பதிவாகியுள்ளன.

முதுகலை பட்டதாரி சங்கர்

இவன் நமக்கு கீழே இருக்கும் தாழ்ந்தவன்தான், இவன் நமக்கு மேலே வந்திரக்கூடாது, கைகட்டித்தான் பேசணும், ஐயான்னுதான் கூப்பிடனும் அப்படியெல்லாம் சொன்னார்கள், நான் அப்படியெல்லாம் கூப்பிட முடியாது, எனக்கென்று ஒரு திறமை இருக்கு, அதுல நான் படிச்சு உயர்ந்து காட்டுவேன் அப்படின்னு சொன்னேன். அன்னைக்கு அப்படிப் பேசுனவங்க எல்லாருமே இன்னைக்கு என்னைக் கையெடுத்துக் கும்பிடறாங்க, அந்த அளவுக்கு படிப்பு என்னைத் தூக்கிவிட்டிருக்கு, இன்னிக்கு அவங்களுடைய பிள்ளைகளுக்கே நான் ஆசானாக மாறிட்டேன். சத்தநேரம் பிணத்தை எரிச்சிக்கிட்டு இருப்பேன், சத்தநேரம் படிச்சிட்டுகிட்டு இருப்பேன், இளங்கலை, முதுகலை படிப்புகள் எல்லாமே இப்படித்தான் படிச்சேன். இங்கு மின்சார வசதி எதுவுமே இருக்காது. எல்லாமே இருட்டாகத்தான் இருக்கும். பிணம் எரிகிற வெளிச்சம்தான் எனக்கு விளக்கு. சிலநேரம் நான் இங்கேயே இருந்து சாப்பிடுவேன். பிணங்கள் எரியும்போது கை கால்கள் எல்லாம் வெடிக்கும். அவற்றை அடித்துச் சாம்பலாக்குவோம். சிலர் தற்கொலை செஞ்சு அற்ப ஆயுசுல சாகுறாங்க, அந்த உடல்கள் எல்லாம் சீக்கிரம் எரியாது, ஒவ்வொரு உடலும் எரிவதற்கு 5 அல்லது 6 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு உடலுக்கும் ஆயிரம் அல்லது 500 ரூபாய் கொடுப்பார்கள். அப்ப அவுங்க கைகட்டி காசு வாங்கு என்று சொல்வார்கள். நான் ஏன் அப்படி வாங்கணும், நான் செய்ற வேலைக்குக் கூலி தர்றீங்க அப்படின்னு சொல்வேன், என்னை எல்லாரும் இளக்காரமாகப் பார்க்கிறார்கள். பணம் தரமுடியாதவங்களுக்கு இலவசமாகவும் செய்றேன். எனது வீட்டில் நான்தான் முதல் பட்டதாரி.  

சங்கர் அவர்கள், நடனம் கற்றுக்கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் அளித்த ஊக்கத்தால் ஓவியராகவும் வலம் வருகிறார். பல்வேறு போட்டிகளில் வென்று அவர் படித்த கல்லூரிக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார். ஓவியத்தில் 'சுடர்மணி' விருது பெற்றுள்ள சங்கர் அவர்கள், வெட்டியான், நடனக்கலைஞர், ஓவியர் என, மும்முனையில் சுடர்விடுகிறார். தனியார் பள்ளி ஒன்றில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகவும் இவர் பணியாற்றி வருகிறார். தனது படிப்புக்கேற்ற வேலை வேண்டும் என்ற தன் எதிர்பார்ப்பு பற்றி, சங்கர் அவர்கள், ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இலக்கை அடைபவர்களின் பண்புகள்

வாழ்க்கையில் தங்களது இலக்கை அடைபவர்களின் பண்புகள் பற்றி இவ்வாறு ஊடகம் ஒன்று பதிவுசெய்துள்ளது. இலக்கை அடைய உறுதியுடன் திகழ்பவர்கள், மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. தங்களின் பணியை அடுத்தவரின் தலைமேல் திணிப்பதில்லை. தங்களின் பணி நிறைவடைவதற்கு அடுத்தவரைச் சார்ந்திருப்பதுமில்லை. வாய்ப்புக்கள் கதவைத் தட்டும்வரை மௌனமாக காத்திருப்பதுமில்லை. தங்கள் இலக்கை அடைவதற்குத் தேவையான வாய்ப்புக்களை அவர்களே கவனமாக ஆராய்ந்து அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். மற்றவர் வழியாக வரும் வாய்ப்புக்களை எளிதில் கண்டுகொள்கிறார்கள். தங்களின் திறமைகள் குறித்து அவர்கள் சந்தேகப்படுவதே இல்லை. தங்களுக்குத் தேவையில்லாத விடயங்களில் மூக்கை நுழைப்பதில்லை. நேரத்தை முறையாகப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்ற இவர்கள், தங்களின் நேரத்தை வீணடிக்கும் நபர்கள், தங்களின் இலக்குகளிலிருந்து திசைதிருப்பும் மனிதர்களோடு சேர்வதில்லை. தவறுகளைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வியைக்கண்டு மிரண்டுபோவதில்லை. அன்றாடம் தங்கள் செயல்களை மீள்பார்வை செய்பவர்கள். வாழ்க்கையின் நோக்கமே, நோக்கமுடைய வாழ்க்கையை வாழ்வதுதான். வாழ்க்கை என்பது, வெறும் கையுடன் வந்து, வெறும் கையுடன் செல்லும் ஒரு பயணம். வாழ்க்கை என்பது, மலைப்பாதை போன்றது. அப்பாதையில் இன்னல்நிறைந்த பல வளைவுகள் இருக்கும். ஆனால் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால், மலைப் பாதையின் உச்சி வியப்பைத் தரும். எனவே வாழ்க்கையின் இலக்கு பற்றிய தெளிவு மனத்தளவில் இருக்கவேண்டும். அதற்கு நம்பிக்கையும் துணிச்சலும் முயற்சியும் பயிற்சியும் தேவை.

வாரம் ஓர் அலசல்: இலக்கை அடைய முயற்சி, பயிற்சி!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2021, 15:03