தேடுதல்

2020ம் ஆண்டின் காலநிலை மாற்றம் - உலக வானிலை நிறுவனத்தின் அறிக்கை 2020ம் ஆண்டின் காலநிலை மாற்றம் - உலக வானிலை நிறுவனத்தின் அறிக்கை 

2020ல் மட்டும், ஆசிய நாடுகளின் மிக அதிகமான வெப்ப நிலை

ஆசியாவின் தற்போதைய பருவநிலை மாற்றங்கள் நீடித்தால், ஆசியாவின் நீர்ச்சுனைகளில் முக்கியமாகத் திகழும் இமயமலையின் பனிக்கட்டிகள், 2050ம் ஆண்டுக்குள், 40 விழுக்காடு உருகி, 75 கோடி மக்களின் வாழ்வை பாதிக்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1981க்கும் 2010க்கும் இடைப்பட்ட 30 ஆண்டுகளில் ஆசிய கண்டத்தில் நிலவிவந்த வெப்பநிலையைக் காட்டிலும், 2020ம் ஆண்டில் மட்டும், ஆசிய நாடுகளின் வெப்ப நிலை 1.39 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருந்தது என்று, உலக வானிலை நிறுவனம், அக்டோபர் 26, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு முழுவதும் ஆசிய நாடுகளில் நிலவிய மிகக்கூடுதலான வெப்பத்தின் காரணமாக உருவான புயல்களும், வெள்ளப்பெருக்குகளும், 5 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளன என்றும், இந்த நெருக்கடிகளில் 5000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

ஆசியாவின் தற்போதைய பருவநிலை மாற்றங்கள் நீடித்தால், ஆசியாவின் நீர்ச்சுனைகளில் முக்கியமாகத் திகழும் இமயமலையின் பனிக்கட்டிகள், 2050ம் ஆண்டுக்குள், 40 விழுக்காடு உருகி, 75 கோடி மக்களின் வாழ்வை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கூடுதலான வெப்பத்தின் காரணமாக, உணவு பற்றாக்குறையும் கூடியுள்ளது என்று கூறும் இவ்வறிக்கை, உலகில் குறைவான உணவுள்ள மக்கள் தொகையில், 20 விழுக்காட்டினர், தெற்கு ஆசிய நாடுகளில் வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

கூடுதல் வெப்பத்தின் விளைவாக, பல்வேறு நோய்களும் பரவியுள்ளன என்று கூறும் இவ்வறிக்கை, வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2020ம் ஆண்டில், அதிக அளவில் கூடியுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

2020ம் ஆண்டு மே மாதம் இந்திய துணைக்கண்டத்தைத் தாக்கிய Amphan புயலால், இந்தியாவில் 24 இலட்சத்திற்கு அதிகமானோரும், பங்களாதேஷ் நாட்டில், 25 இலட்சத்திற்கு அதிகமானோரும், பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31 வருகிற ஞாயிறு முதல், நவம்பர் 12ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் COP26 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இத்தகைய ஓர் அறிக்கையை, ஐ.நா.வின் உலக வானிலை நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2021, 14:03