தேடுதல்

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராகப் போராட்டம் சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராகப் போராட்டம்   (AFP or licensors)

சூடான் ஆட்சி கவிழ்ப்பால், மத விடுதலைக்கு புதிய அச்சுறுத்தல்

பல கிறிஸ்தவ கோவில்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதும், சில கிறிஸ்தவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், சூடானில் மீண்டும் துவங்கும் ஆபத்து

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சூடான் நாட்டில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மத விடுதலைக்கு புதிய அச்சுறுத்தல் பிறந்துள்ளதாக, மனித உரிமை கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அக்டோபர் 25, இத்திங்கள் காலையில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பில், அந்நாட்டு இராணுவம், பிரதமரையும், இடைக்கால அரசின் மக்கள் தலைவர்களையும் கைது செய்ததுடன், அரசையும் கலைத்துள்ளது.

சூடான் நாட்டின் சர்வாதிகாரியாகச் செயல்பட்ட Omar al-Bashir என்பவரை பதவியை விட்டு நீக்கி, மக்களாட்சியை நோக்கிய பாதையில் நாட்டைக் கொணர பொறுப்பேற்ற இடைக்கால அரசை இராணுவம் அகற்றியதைத் தொடர்ந்து, மத விடுதலைக்கும் ஆபத்து ஏற்பட உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

1989ம் ஆண்டு பதவியைக் கைப்பற்றிய Omar al-Bashir அவர்கள், சூடான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்களைப் புகுத்தியதை நீக்கிய இடைக்கால அரசு, இஸ்லாம் மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நீக்கியதுடன், அரசு மதமாக இஸ்லாம் இருக்காது எனவும் அறிவித்து, மத விடுதலை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது, தற்போது நீக்கப்படலாம் என்ற அச்சம் நாட்டில் நிலவி வருகிறது.

இடைக்கால அரசுக்கு முந்தைய ஆட்சியில், பல கிறிஸ்தவ கோவில்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதும், சில கிறிஸ்தவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் போன்ற நிலைகள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை வெளியிடும் மனித உரிமை நடவடிக்கையாளர்கள், தற்போதைய ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத்தினர், முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளர் Omar al-Bashirக்கும், இஸ்லாமியத் தீவிரவாத கொள்கையுடையவர்களுக்கும் நெருக்கமானவர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத விடுதலையை நோக்கிய பாதையில் திறக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னலையும் தற்போதைய ஆட்சிக்கவிழ்ப்பு மூடியுள்ளதாக, சூடான் நாட்டில் 18 இலட்சமாக, அதாவது, மொத்த மக்கள் தொகையில் 5.4 விழுக்காடாக இருக்கும் கிறிஸ்தவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். (ICN)

26 October 2021, 14:35