தேடுதல்

கலிஃபோர்னியாவில் குழந்தைகளின் வாழ்வுமுறை கலிஃபோர்னியாவில் குழந்தைகளின் வாழ்வுமுறை  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல்: எழுதப்படாத சமூக விதிமுறைகள்

ஒருவரிடம் ஒரு தவற்றைக் கண்டுபிடித்தால், அதை அவரிடமே நேரில் நல்லபடியாக, நயமாக, அன்பாகச் சொல்லவேண்டுமே ஒழிய, அந்தத் தவற்றை, மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ச்சிகொள்வது வெறும் கோழைத்தனம்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

ஒவ்வொரு மனிதரும், செல்வந்தரோ, ஏழையோ, படித்தவரோ, படிக்காதவரோ, யாராக இருந்தாலும், அவரது உயரிய பண்புகளை வைத்தே அவர் சமுதாயத்தில் மதிக்கப்படுகின்றார். தமிழ்ச் சமுதாயமும், உயரிய பண்புகளுக்குப் பெயர்போனது. அன்று, திருவாரூரில் ஆட்சிசெய்துவந்த, மனுநீதிச் சோழனின் மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி, வேகமாகத் தேரை ஓட்டிச் சென்றதில், பசு மாட்டின் கன்று ஒன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தப் பசு தன் கன்றுக்காக மன்னரிடம் முறையிட்டது. அம்மன்னரும், தன் மனசாட்சிக்கு மதிப்பளித்து, அந்தப் பசுவுக்கு நீதி வழங்கினான். சிபிச்சக்கரவர்த்தி என்ற மன்னர், தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாவை, கழுகிடமிருந்து காப்பாற்ற தன்னுடைய தொடை சதையையே அறுத்து தராசில் வைத்து மனிதப் பண்பை காட்டினார். கண்ணகிக்கு, தான் இழைத்த தவற்றைக் கேட்டறிந்தபோது, அக்கணமே உயிர்நீத்தான் மன்னர் நெடுஞ்செழியன். படர வழியின்றி தவித்த முல்லையை தனது தேரில் படரவிட்டு, பரிவைக் காட்டினான், பாரிவேந்தன். குளிரால் நடுங்கிய மயிலுக்கு தனது சால்வையை போர்த்தி தனது பெருந்தன்மையை காட்டினான், பேகன். அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை, நற்பண்புகளால் போற்றப்படும் பலர் பற்றி அறிந்துள்ளோம். தமிழ் நாட்டுக்காக, இங்கிலாந்தில் தனது சொத்துக்களை விற்று பெரியாறு அணையைக் கட்டித்தந்த பெருந்தகை பென்னிகுவிக். செப்டம்பர் 05, இஞ்ஞாயிறன்று திருஅவை திருநாள் கொண்டாடிய அன்னை தெரேசா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்... இப்படி பலரை எடுத்துக்காட்டுக்களாகச் சொல்லலாம். இவர்கள் எல்லாரும் எழுதப்படாத, அதாவது பன்னாட்டு அளவில், தேசிய அளவில், பஞ்சாயத்து அளவில் வகுக்கப்படாத விதிமுறைகளால், வாழ்ந்து காட்டியவர்கள். இவ்வாறு நம் வாழ்வுக்கு முக்கியமான, எளிய, சாதாரண எழுதப்படாத பல விதிமுறைகள் உள்ளன. நம்மைப்போன்று, வசதியாகவோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து, நாம் கீழ்த்தரமாக  நினைத்து, கர்வம் கொள்ளக் கூடாது. பிறர் இல்லாதபோது அவர்களைப் பற்றி கேலியாகவோ, நிந்தையாகவோ பேசக்கூடாது. ஒருவரிடம் ஒரு தவற்றைக் கண்டுபிடித்தால், அதை அவரிடமே நேரில் நல்லபடியாக, நயமாக, அன்பாகச் சொல்லவேண்டுமே ஒழிய, அந்தத் தவற்றை, மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ச்சிகொள்வது வெறும் கோழைத்தனம். இத்தகைய, நம் பழக்கவழக்கத்திலிருந்து, போக்கவேண்டிய சில அழுக்குகள், மற்றும், வாழ்வில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை, குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்முனைவர் ஆரோக்ய ஜோஸ் அவர்கள் இன்று கூறுகிறார்

வாரம் ஓர் அலசல்: எழுதப்படாத சமூக விதிமுறைகள்
06 September 2021, 14:58