தேடுதல்

எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர் எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர்  

வாரம் ஓர் அலசல்: கருணை பொங்கும் உள்ளத்தை உருவாக்குவோம்

காலநிலை மாற்றம், பேரிடர்கள், போர்கள், நிலையற்ற அரசியல் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது மாறவேண்டும், மாற்றத்தைக் கொண்டு வருகிறவர்கள், நான்தான் என்று ஒவ்வொருவரும் நினைக்கவேண்டும் - அப்துல்லா சாகிப்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஈராக் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் ஹூசேன் அவர்களின் அரசைக் கவிழ்ப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையில் அந்நாடு ஆக்ரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் 2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை போர் நடந்தது. அக்காலக்கட்டத்தில் நடைபெற்ற நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்வுகளில் ஒன்று, 2007ம் ஆண்டு சனவரி மாதத்தில் இடம்பெற்றுள்ளது. தென் ஈராக் பகுதியில் அமெரிக்கப் படைகளுக்குத் தளபதியாக இருந்த, 31 வயது நிரம்பிய பிரியன் ஸ்காட் ப்ரீமேன் (Army Capt. Brian Scott Freeman) என்பவர், காவலில் இருந்தபோது அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் மட்டும் அவர் கவனத்தை ஈர்த்தான். அவன் பெயர் அமீர். ஓர் இஸ்லாமியச் சிறுவன். துறுதுறுவென்று அங்குமிங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும் அமீரை, தளபதி ப்ரீமேன் அவர்கள், அவ்வப்போது கூப்பிட்டு அவன் விளையாடுவதை இரசித்துக்கொண்டிருப்பாராம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தினத்தாளில் அந்த சிறுவனின் புகைப்படத்தோடு ஒரு செய்தி வெளியாகியிருந்ததைக் கவனித்தார் ப்ரீமேன். அவருக்கு ஈராக்கில் பேசப்படும் மொழி தெரியாததால், மற்றவரின் உதவியோடு அந்தச் செய்தி பற்றி கேட்டறிந்தார். அந்தச் சிறுவனுக்கு பிறவியிலிருந்தே இதயத்தில் ஓட்டை உள்ளது, ஒரு மாதத்திற்குள் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லையெனில் அவன் இறந்துவிடுவான் என்பதே அச்செய்தி.

ஈராக் சிறுவனுக்கு வாழ்வளித்த அமெரிக்க படைத்தளபதி

சிறுவன் அமீரின் உடல் நிலையை அறிந்த அந்த அமெரிக்க தளபதி ப்ரீமேன் அவர்கள் மிகவும் பதட்டப்பட்டார். எப்படியாவது இவனுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். எனவே அவனது பெற்றோரை அழைத்துவரச் சொன்னார். அவர் தளபதியாக இருந்ததால், அமீரின் பெற்றோரையும் அவரால் எளிதில் சந்திக்க முடிந்தது. அச்சிறுவனின் அப்பா அபு அலி அவர்களிடம், இவனை எப்படியாவது பிழைக்க வைக்கவேண்டும் என்று, ப்ரீமேன் அவர்கள் கூறினார். அதற்கு அபு அலி அவர்கள், அதற்கு எங்களிடம் வசதி இல்லை, இந்தப் போர்ச்சூழலில், விசா எடுத்து அவனை வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் எங்களிடம் பணம் கிடையாது என்று கூறினார். அதைக் கேட்ட தளபதி ப்ரீமேன், இல்லை அதற்கு நான் பொறுப்பு, நானே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன் என்று உறுதியளித்தார். பின்னர் அமெரிக்காவில் இருந்த தன் மனைவி சார்லட் அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இங்கு ஈராக்கில் இருக்கும் அமீர் என்ற சிறுவனுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்து அவனது உயிரைக் காப்பாற்றவேண்டும். அவனது மருத்துவக் குறிப்புக்களை அனுப்பி வைக்கிறேன். எப்படியாவது அமெரிக்கா விசா எடுத்து அனுப்பி வை, நமக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர், இப்போது ஈராக்கில் நமக்கு மூன்றாவது மகன் இருக்கிறான் என்று தன் மனைவியிடம் சொன்னார்.  சார்லட்டும், தன் கணவரின் விருப்பப்படி, சிறுவன் அமீர் அமெரிக்கா வருவதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு விசா வாங்கி ஈராக்கிற்கு அனுப்பினார். ஆனால் அந்த விசா ஈராக் சென்றடைந்த நாளில், தளபதி ப்ரீமேன் அவர்கள், ஈராக்கில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அடுத்த நாள் காலையில், சல்லடைபோல் கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட அவரது இறந்த உடலை, தெருவில் தூக்கி எறிந்து விட்டுப் போனார்கள், தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது. அந்த நாள் 2007ம் ஆண்டு சனவரி 20. அதேநாளில் தங்கள் கைக்கு கிடைத்த விசாவைப் பார்த்த சிறுவன் அமீரின் அப்பா அபு அலி அவர்கள், ஐயோ, ஒரு மனிதர் எங்களைக் காப்பாற்ற நினைத்தார், அவருக்கா இந்நிலை, இப்போது எப்படி என் மகனைக் காப்பாற்றுவது என்று கண் கலங்கினார். அதேநேரம், அமெரிக்க அரசு, தளபதி இறந்த செய்தியை அவரது மனைவிக்கு அறிவித்தது. அச்செய்தி கேட்டு அவரது மனைவி அழவே இல்லையாம், அதற்கு மாறாக, என் கணவர் இறந்துவிட்டார் என்பது தெரிந்துவிட்டது, ஆனால் இன்னோர் உயிரும் போய்விடக் கூடாது, ஆதலால் எனது மகனை இங்கே அனுப்புங்கள் என்று கூறினாராம். சிறுவன் அமீரும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டான். அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவன் முற்றிலும் குணமானபிறகுதான் சார்லட் தன் கணவரின் இறப்பை நினைத்து கண்ணீர்விட்டாராம்.

ப்ரீமேன்-சார்லட் தம்பதியரின் இச்செயலை,  அன்பு, கருணை, இரக்கம் என எப்படியும் அழைக்கலாம். இதேபோன்ற நற்பண்புகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளைக் கேட்டு வருகிறோம். தன் மகன், மகள், தந்தை போன்ற உறவுகளைக் கொலைசெய்தவர்களை, மன்னித்து, அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றிய அன்னையர், பிள்ளைகள் போன்றோர் உள்ளனர். குடும்பத்தைக் காப்பாற்றிவந்த தந்தையர், மற்றும், அன்னையர் கொரோனோவால் இறந்ததால், பெரிதும் துன்புறும் குடும்பங்களுக்கு, சென்னை சாரதா அறக்கட்டளை போன்ற தன்னார்வலர் அமைப்புகள் உதவி வருகின்றன. கைவிடப்பட்ட இறந்த உடல்களை, அடக்கம் செய்துவரும் தன்னார்வலர்களும் உள்ளனர். இவ்வாறு பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டுவரும் நல்ல உள்ளங்களை இந்நேரத்தில் நன்றியோடு நினைத்து பாராட்டுவோம்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட காந்திஜி அவர்கள் பிறந்த நாளை, அக்டோபர் 02, வருகிற சனிக்கிழமையன்று கொண்டாடுகிறோம். இதே நாளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, வன்முறையற்ற உலக நாளாகவும் அறிவித்தது. வன்முறையற்ற உலகையும், அது குறித்த விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்தில் ஐ.நா. பொது அவை இந்த உலக நாளை உருவாக்கியது,. அதற்குப்பின் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2ம் தேதியன்று, வன்முறையற்ற உலக நாளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், காந்திஜி அவர்கள், தனது முழு ஆடைக்கு விடை கொடுத்துவிட்டு, மேல் சட்டையின்றி, வேட்டி மட்டும் கட்டிய, அரை ஆடைக்கு மாறிய நூற்றாண்டு நாளும், இவ்வாண்டு செப்டம்பர் 22ம் தேதி இப்புதனன்று மதுரையில் சிறப்பிக்கப்பட்டது.

காந்திஜி அரை ஆடைக்கு மாறியது

1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி, காந்திஜி அவர்கள், மதுரைக்கு வந்து, 251 ஏ  மேலமாசி வீதியில் உள்ள தனது நண்பர் ராம்ஜி என்பவர் இல்லத்தின் மாடியில் தங்கியிருந்தார். அவர் மதுரைக்கு இரயிலில் வரும்போது வழியெங்கும் வயல்வெளிகளில் அவர் பார்த்த விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களில் பார்த்த பாமரர்களின் நிலை அவரது மனதை பிசைந்தது. பலரும் மேல்சட்டை இல்லாமல் இடுப்பில் ஒரு துண்டையோ அல்லது ஒரு வேட்டியையோதான் கட்டியிருந்தனர். அதை நினைத்து இரவு முழுவதும் வேதனைப்பட்ட காந்திஜி அவர்கள், இனிமேல், அந்த விவசாயிகள் மற்றும் பாமரர்களின் நிலைதான் தன் நிலையாக இருக்கவேண்டும், அவர்களின் ஆடைதான் தன் ஆடையாக மாறவேண்டும் என்று முடிவெடுத்தார். மறுநாள் செப்டம்பர் 22ம் தேதி காலையில், முடிதிருத்தம் செய்யும் பணியாளர் ஒருவரை வரவழைத்து மொட்டையடித்துக் கொண்டார். குஜராத்தி பாணியிலான சட்டையையும், அதன்மேல் போட்டுக்கொள்ளும் அங்கவஸ்திரத்தையும்  துாக்கிப்போட்டார். அவர் கட்டியிருந்த எட்டு முழ வேட்டியை இரண்டு துண்டாக்கினார் அதில் ஒன்றை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டார். 1921ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி காலையில், வேட்டி மட்டும் அணிந்து, சட்டை அணியாத வெற்று உடம்புடன் வீட்டிற்கு வெளியே வந்த காந்திஜியைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர்.

உலக நாள்கள்

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில், சில முக்கிய நாள்களை நினைவுகூர்கிறோம். செப்டம்பர் 5ம் தேதி, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நுாற்றைம்பதாவது பிறந்த நாள். செப்டம்பர் 11ம் தேதி, மகாகவி பாரதியாரின் நாற்றாண்டு நினைவு நாள். செப்டம்பர் 26ம் தேதி இஞ்ஞாயிறன்று, 107வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாள், செப்டம்பர் 27, இத்திங்களன்று சுற்றுலா உலக நாள், செப்டம்பர் 29ம் தேதி இதய உலக நாள், செப்டம்பர் 30ம் தேதி கடல்சார் தொழிலாளர் உலக நாள். இம்மாதம் 14ம் தேதி நியூ யார்க் நகரில் துவங்கியுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 76வது பொதுப் பேரவையில், செப்டம்பர் 21 இச்செவ்வாய் முதல், 27 இத்திங்கள் வரை, உலகில் அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பது, உணவு அமைப்பு முறைகள், மின்சக்தி விநியோகம் உட்பட, காலத்திற்கேற்ற சில முக்கிய விவகாரங்கள் பொதுவான விவாதத்திற்கு விடப்பட்டன. இப்பேரவையில் தலைமை வகிக்கும் மாலத்தீவுகள் குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாகிப் அவர்கள், காலநிலை மாற்றம், பேரிடர்கள், போர்கள், நிலையற்ற அரசியல் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது மாறவேண்டும், மாற்றத்தைக் கொண்டு வருகிறவர்கள், நான்தான் என்று ஒவ்வொருவரும் நினைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆம், நாம் விரும்பும் மாற்றங்கள், முதலில் நம்மிலிருந்துதான் துவங்கவேண்டும். இம்மாதத்தில் நாம் நினைவுகூர்ந்த மற்றும், நினைவுகூரும் உலக நாள்களும், மாமனிதர்களின் வாழ்வும் உணர்த்தும் வாழ்க்கைப் பாடங்கள், சுயமாற்றங்களுக்கு வித்திடவேண்டும். இறகுகள் ஈரம் ஒட்டினால் பறக்க முடியாது. இதயங்களில் ஈரம் காய்ந்தால் சிறக்க முடியாதுதான். மதுரையில் காந்திஜி மேல்சட்டையைத் தூக்கி எறிந்தது போன்று, நம் இதயங்களில் உள்ள வன்முறை, பொறாமை, கோபம், ஒப்பிடுதல் போன்ற எதிர்மறைக் குணங்களைத் தூக்கி எறிவோம். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது போன்று, அன்பு, காருண்யம், இரக்கம் போன்ற நற்பண்புகள் ஊற்றெடுக்கும் இதயங்களை வளர்த்தெடுத்து அவற்றை கடவுள் வாழும் இல்லங்களாக அமைப்போம். சுற்றுலா உலக நாளாகிய இத்திங்களன்று, பயணம் மேற்கொள்ளும் இடங்கள் மற்றும், வாழ்கின்ற இடங்களில் சூழலியலுக்குப் பாதகமற்று செயல்படுவோம், மற்றவரும் அவ்வாறு இருக்கத் தூண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2021, 13:27