தேடுதல்

அணு ஆய்வு நடத்தப்பட்ட இடம் அணு ஆய்வு நடத்தப்பட்ட இடம்  

அணு ஆய்வுத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐ.நா. அழைப்பு

அணு ஆய்வுப் புரிந்துணர்வு தடை ஒப்பந்தம் (CTBT) நடைமுறைக்கு வருவதற்கு, இன்னும் அதில் கையெழுத்திடாத எட்டு நாடுகளின் கையெழுத்து தேவைப்படுகின்றது - அந்தோனியோ கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அணு ஆய்வுப் புரிந்துணர்வு தடை ஒப்பந்தம் (CTBT) நடைமுறைக்கு வருவதற்கு, இன்னும் அதில் கையெழுத்திடாத எட்டு நாடுகளின் இசைவு தேவைப்படுகின்றது என்றும், அந்நாடுகள், காலதாமதமின்றி அதில் கையெழுத்திடுமாறும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், செப்டம்பர் 23, இவ்வியாழனன்று கேட்டுக்கொண்டார்.

அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை ஊக்குவிப்பதற்கென்று இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தில், ஆயுதக்களைவு விவகாரத்தின் ஐ.நா. பிரதிநிதி Izumi Nakamitsu அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைக்குப்பின் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய எட்டு நாடுகள் அதில் கையெழுத்திடவேண்டும் என்று கூறினார்.

1996ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட CTBT எனப்படும் இந்த ஒப்பந்தத்தில், 185 நாடுகள் கையெழுத்திட்டன, அவற்றில், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் பிரான்ஸ், ஈரஷ்யா, பிரித்தானியா ஆகிய மூன்றும் உட்பட, 170 நாடுகள் அமல்படுத்தியுள்ளன என்றும் கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

ஐ.நா.வின் பழைய இலக்குகளில் அணு ஆயுதக்களைவும் ஒன்று எனவும், 1946ம் ஆண்டில் ஐ.நா. பொது அவையில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் இதுவும் இருந்தது எனவும் உரைத்த கூட்டேரஸ் அவர்கள், இன்று உலகில் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளன, இவற்றைக் கொண்டிருக்கும் நாடுகள், அவற்றை நவீனமயமாக்கி வருகின்றன என்றும் கவலையோடு கூறினார்.

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு அழைப்புவிடுக்கும் உலக நாள் செப்டம்பர் 26, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2021, 15:43