தேடுதல்

அமைதியின் முக்கியத்துவம் அமைதியின் முக்கியத்துவம் 

வாரம் ஓர் அலசல்: மௌனம் என்ற மகத்தான சக்தி

பதிலளிப்பதில் உள்ளவெறி, புரிந்துகொள்வதில் உள்ள வெறியாக இருப்பதில்லை - திருவாளர் சுகி சிவம்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருமுறை மெய்யியலாளர் ஒருவர், புத்த மகானிடம் சென்று, ஒன்றன்பின் ஒன்றாக கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். அனைத்துக் கேள்விகளையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த புத்தர், அந்த மெய்யியலாளரிடம், இந்த கேள்விகளுக்கெல்லாம் உண்மையாகவே பதில்கள் தேவைதானா, அப்படியானால், அதற்கு விலையாக, நீ அதிகம் செய்யவேண்டியிருக்குமே, அதற்கு நீ தயாரா என்று கேட்டார். அதற்கு மெய்யியலாளர் புத்தரிடம் இவ்வாறு பதில் கூறினார். மகானே, நான் என் வாழ்நாள்களில், இன்றுவரை பதில்களைத்தான் தேடி அலைகிறேன். பல பதில்களைப் பெற்றேன். ஆனால் ஒவ்வொரு பதிலுக்குப் பிறகும், புதிய புதிய கேள்விகள் முளைத்தன. அதனால் என் தேடலுக்குப் பதில் கிடைப்பதற்கு, எதையும் விலையாகத் தர தயாராக உள்ளேன். ஆயினும், இந்த மண்ணுலகைவிட்டு நான் மறைவதற்குமுன், என் கேள்விகளுக்குப் பதில்களை நான் காணவேண்டும். மெய்யியலாளர் சொன்னதைக் கேட்ட புத்தர், மகனே, என்னிடம் பதில்களைத் தேடி பலர் வந்தனர். ஆனால் பதில்களுக்குரிய விலையைக் கொடுப்பதற்கு அவர்களில் யாரும் தயார் நிலையில் இருக்கவில்லை. உன் கேள்விகளுக்குப் பதில்களை, நீ என்னிடம் எதிர்பார்த்தால், இரண்டு வருடங்கள் முழுமையாக நீ என்னருகில் நிறைவான அமைதியில் அமர்ந்திருக்கவேண்டும். நீ இடையில் எதையும் கேட்டு என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது, இது கண்டிப்பான கட்டளை என்று கூறினார். புத்த மகானின் இந்த நிபந்தனயைக் கேட்டுக்கொண்டிருந்த மெய்யியலாளருக்கு மனதில் ஒரே கலக்கம். இரண்டு முழு வருடங்கள் அமைதியில் என்பது நீண்ட காலம்தான். இடையில் எதுவும் கேட்கவும் முடியாது. ஆயினும், இரண்டு வருடங்களுக்குப்பின் பதில் கிடைக்குமா... இப்படி சந்தேகங்கள் அவருக்குள் எழுந்தன. எனவே மகானின் இந்த கட்டளைக்கு, ஆமாம் என்பதா, முடியாது என்பதா என்று அவர் குழம்பினார். பின்னர் அவர் புத்தரிடம், மகானே நீங்கள், என் கேள்விகளுக்கு பதில்களைத் தருவீர்கள் அல்லவா, இது உறுதிதானே என்று கேட்டார். அப்போது புத்தர், நிச்சயமாக, நூறு விழுக்காடு உத்தரவாதம் தருகிறேன் என்று சொன்னார். இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த புத்தரின் மற்ற சீடர்கள், சத்தமாகச் சிரித்தார்கள். மெய்யியலாளர், சீடர்களிடம், ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டார். அப்போது சீடர்கள், உனது கேள்விகளை இப்போதே கேட்டுவிடு, பிறகு உன்னால் கேள்விகேட்கவே முடியாது. ஏனெனில் நீ மௌனத்தில் அமரும்போது உன்னிடத்தில் கேள்விகளே இருக்காது என்று கூறினர்.

ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நான்கு துறவிகள்

ஆசிரமம் ஒன்றில் வாழ்ந்த நான்கு துறவிகள், இரு வாரங்கள், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதியாகத் தியானம் செய்வது என்று, அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். தியானத்தையும் மிகுந்த ஆர்வத்தோடு அவர்கள் ஆரம்பித்தனர். முதல் நாள் முழுவதும் ஒருவரும், ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால் அந்த நாள் இரவில், காற்றில் மெழுகுவத்திச் சுடர் படபடத்தது. ‘ஐயோ, மெழுகுவத்தி அணையப்போகிறது’ என்று, முதலில் ஒரு துறவி கூறினார். உடனே, இரண்டாவது துறவி,  ‘அட, நாம் பேசக் கூடாது என்பதை நீ மறந்தாயா?’ என்று சொன்னார். அவ்விருவரையும் பார்த்து எரிச்சலடைந்த ‘மூன்றாவது துறவி, எதற்காகத்தான் நீங்கள் பேசுகிறீர்களோ?’ என்று கூறினார். உடனே நான்காவது துறவி, ‘ஹா... ஹா! நான்தான் எதுவுமே சொல்லவில்லை என்று சொன்னார். இப்படியாக அந்த நான்கு துறவிகளின் மௌன விரதமும் முதல் நாளிலேயே கலைந்துவிட்டது.

அந்த ஆசிரமத்தின் நான்கு துறவிகளின் மௌனத்தைக் கலைப்பதற்கு, பெரிய நிலநடுக்கமோ, பெரும் புயலோ, வேறு எந்த அச்சமூட்டும் காரியங்களோ, எதுவுமே நடக்கவில்லை. அவர்களின் மௌனத்தைக் கலைப்பதற்கு, ஒரு சாதாரண மெழுகுவர்த்தியின் படபடப்பே போதுமானதாக இருந்தது. இந்த துறவிகளின் அகப்பயணத்தில் இருந்த கவனச்சிதைவு, தீர்ப்பிடுதல், கோபம், கர்வம் போன்ற தடைகள் அவர்களின் மௌனத்தைக் கலைத்தன. எடுத்த சபதத்திற்கு சான்றுபகர்வதே முக்கியம் என்பதை முதல் துறவி மறந்துவிட்டார். தான் மேற்கொண்ட சபதத்தில் உறுதியாய் இருப்பதைவிட்டு விட்டு, அடுத்தவர் அதைக் கடைப்பிடிக்கிறாரா என்பதில் கவனமாக இருந்தார், இரண்டாவது துறவி. முதல் இரு துறவியரின் செயலால் எரிச்சலடைந்தார் மூன்றாவது துறவி. எனவே அவரது கோபம், அவரது சபதத்தை அழித்துவிட்டது. நான்காவது துறவியோ, தன் கர்வத்தால் சபதத்தை மீறிவிட்டார். கர்வத்தில் மிதந்தவர்களின் இறுதிக்காலம் எப்படி இருந்தது என்பதற்கு, பல தலைவர்கள், தலைவிகளின் வாழ்வை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

மௌனத்தின் மதிப்பு

பொதுவாக, மௌனமாக இருப்பதுதென்பது, பலருக்குச் சிரமமாகவே  உள்ளது. அதிலும் வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில், எந்நேரமும் காதுகளுக்குள் ஒலிஅலைகள் சென்றுகொண்டே இருக்கின்றன. கண்களுக்கும் ஓய்வு கொடுக்கப்படுவதில்லை. மௌனம் என்பதை, வெளிப்புற மௌனம், உட்புற மௌனம் என இரு வகையாகப் பிரிக்கின்றனர், உளவியலாளர்கள். வெளிப்புற மௌனமென்பது, யாருடனும் பேசாமல் நமக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு வாழ்வது. அந்த சிறிய வட்டத்துக்குள் நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்வதாகும். அப்போது, அந்த மௌனம், உட்புற மௌனத்தை, அதாவது, அக மௌனத்தைப் பற்றி அறிய வைக்கிறது. இந்த அக மௌனம், நம்மை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. அது மனஅமைதியைக் கொடுக்கிறது, கடவுள் இருப்பதை நன்றாக உணர வைக்கிறது. கடவுள் நமக்குள் பேசுவதை, மனசாட்சியின் குரலைக் கேட்க வைக்கிறது. இந்நிலை, கடவுள் நம்மோடு இருக்கும் உணர்வைக் கொடுப்பதால், அது நமக்குள்ளே துணிவு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை, பிறரன்பு போன்ற நல்லுணர்வுகளை ஊற்றெடுக்கச் செய்கின்றது.

மௌனம், ஓர் அழகான மொழி. மௌனத்தின் மதிப்பை பெரும்பாலும் அறிந்தவர்கள் சித்தர்களே என்று சொல்லப்படுகிறது. மனிதரைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவருக்கு விருப்பமானவரின் மௌனம்தான். மௌனம், சொற்கள் இல்லாத நூல். அந்த நூலை நாம்  வாசிக்க, வாசிக்க, புதுப் புது உள்ளுணர்வுகள் பிறந்துகொண்டே இருக்கும். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். நம் வாழ்க்கையின் இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால், நம் இதயம் எப்போதும் இயல்பாக இருக்கும். இவ்வாறு மௌனம் பற்றிய பல்வேறு சிந்தனைகள் வலைத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனவே மௌனத்தின் மதிப்பை வலியுறுத்தும் சிந்தனையாளர்கள், வெளிப்படையான எதிரியைச் சமாளிக்கலாம். ஆனால் உங்கள் உள்ளிருந்தே வேலை செய்யும் உளவாளியை என்ன செய்வீர்கள்? என்ற ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். அந்த உட்புற உளவாளியை கட்டுக்குள் வைக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மௌனம்

குண்டுகளின் சப்தம், மக்களின் மரண ஓலங்கள். தலைவர்களின் அநீதச் சப்தங்கள், வன்முறை சப்தங்கள்... என, பல்வேறு விதமான இரைச்சல் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இரைச்சலோடு அவசரகாலத்திலும் உலகம் நகர்ந்துகொண்டிருக்கின்றது. ஒரு கப் தேனீர் குடிக்கும்போதுகூட, ஒரு கண் வாட்சப் ஊடகத்தில்தான் அலைந்துகொண்டிருக்கிறது. நாம் யாருடனாவது சண்டைபோடும்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதற்குச் செவிமடுக்க நாம் தயாராக இருப்பதில்லை. அவர்கள் சொல்வதைச் சிந்திப்பதற்கு சிறிதும் இடம்கொடுக்காமல் பதில் சொல்லவே துடிக்கிறோம். தொலைக்காட்சியில் நடைபெறும் பேட்டிகளைப் பார்க்கும்போது, பேட்டி காண்பவர், பல நேரங்களில் அடுத்து என்ன கேள்வி கேட்கலாம் என்பதிலே கவனமாய் இருப்பதாகவே தோன்றும். அதேவண்ணம், பல்வேறு அரசியல் தலைவர்களோடு ஒரே நேரத்தில் கலந்துரையாடல் நடத்தும் நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதியும் பொறுமை காப்பதுபோன்று தெரிவதில்லை. ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு கருத்துச்சண்டை போடுவதிலேயே கவனமாக இருக்கின்றனர் என்ற உணர்வே நமக்கு மேலோங்குகிறது. மாறாக., நிதானமாக, ஒவ்வொரு கருத்தாக வரிசைப்படுத்திச் சொல்வது அரிதாக இருக்கிறது. உரையாடல் என்பதே இல்லாமல் போகிறது. யாரையாவது நலம் விசாரிக்கிறோம். அவர்கள் அதற்குப் பதில்சொல்வது வரை காத்திருப்பதில்லை, மாறாக, நாம் நினைத்ததையே சொல்ல முனைகிறோம். அதேபோல பதிலளிப்பதில் உள்ளவெறி, புரிந்துகொள்வதில் உள்ள வெறியாக இருப்பதில்லை.  இல்லங்களில், குழுமங்களில் சண்டைகளைக் குறைப்பதற்கு ஒரே வழி, ஒருவர் ஒருவருக்குச் செவிமடுத்தல். இவ்வாறு, உன்னையே நீ உருவாக்கிக்கொள் என்பது பற்றி திருவாளர் சுகி சிவம் அவர்கள் சொல்லியுள்ளார்.

இதற்குத் தேவைப்படுவது முழுமையான விழிப்புணர்வு. “தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” என்று வள்ளலார் அவர்கள் பாடியிருக்கிறார். விழிப்புணர்வோடு இருப்பவர்கள் யாரையும் காயப்படுத்தமாட்டார்கள். விழிப்புணர்வு என்பது, எண்ணத்திற்கு நெருப்புப் போன்றது என்று ஓஷோ அவர்கள் கூறியிருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், விழிப்புணர்வு அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவோம், கொரோனாவை வெல்வோம் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் தமிழகத்தில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீணான, தேவையற்ற எண்ணங்களால் மனதை இரைச்சல் நிறைந்ததாய் அமைக்காமல், மௌன மொழிகளின் மதிப்பை உணர்ந்து, எதிலும் விழிப்புணர்வோடு நடந்து நாமும், நாடும் நலம்பெற உதவுவோம். மௌனம் என்ற ஒரு மகத்தான சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி, வெற்றி கண்டிருக்கிறார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2021, 08:52